Two & Two - எதிர்ப்பு குரல்.

எதிர்ப்பு குரல் தெளிவாக கேட்காத வரை திரும்ப திரும்ப ஒலிக்கும் பொய் உண்மை என்பதற்கேற்ப உண்மையை காப்பாற்ற நாம் எப்போது ஒரு பொய்யான விசயத்தை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்குகிறோம்?
அதை எங்கு தொடங்குகிறோம்? எப்படி தொடங்குகிறோம்?
எல்லாம் முடிந்த பெரும் இழப்பிற்கு பின்னே நாம் எதிர்ப்பை சாவகாசமாக தொடங்குகிறோம். அதையும் சோசியல் மீடியா எனும் சமூக வலைத்தளங்களில் கிறுக்கிவிட்டு கட்டை விரலை தூக்கி நிறுத்திவிட்டு முடித்துக் கொள்கிறோம். உறவுகள் சார்ந்த தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும் அல்லது பள்ளி கல்லூரி அலுவலகம் சார்ந்த சமுதாய பொது வாழ்க்கையாகட்டும் அதில் நமது எதிர்ப்பு என்பது ஊமையின் குரலைவிட சப்தமின்றியே ஒலிக்கிறது. பிறர்க்கு நிகழ்கையில் வேடிக்கை பார்த்துவிட்டு தமக்கென வருகையில் வீதியில் கூடும் Survival of Fitness என்ற பரிணாம கோட்பாடே அதற்கு காரணமாக அமைகிறது. சரி இந்த குறும்படத்திற்கு வருவோம். இந்த குறும்படத்தில் மாணவன் ஒருவன் தன் ஆசிரியர் ஒருவரை எதிர்க்கிறான். அவரது உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் தண்டனைக்கும் துணிந்து உண்மையை உயர்த்திப் பிடிக்கிறான். மேலே குறிப்பிட்ட இன்றைய கால நிலவரத்தையும், குழந்தைகளுக்கு தவறானவற்றை  நாம் எப்படி போதிக்கிறோம் என்பதையும் இந்த குறும்படம் காட்டுகிறது. 


'இன்று முதல் சில மாற்றங்களுக்கு நமது பள்ளிக்கூடம் உட்படுகிறது' என தலைமையாசிரியர் இன்டர்காம் வழியாக பேச ஒரு பள்ளியின் வகுப்பறையில் இந்த குறும்படம் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் ஒருவர் அந்த வகுப்பறைக்குள் நுழைந்து கரும்பலகையில் 2+2=5 என எழுதிவிட்டு பாடம் நடத்த தொடங்குகிறார். இரண்டும் இரண்டும் ஐந்தா என மாணவர்களிடையே குழப்பம் வர ஆசிரியர் அனைவரையும் 2+2=5 என உறக்கச் சொல்லுமாறு அதட்டுகிறார். மாணவர்கள் அதை வழிமொழிய அதில் ஒருவன் மட்டும் எழுந்து ஆசிரியரின் அந்த தவறான கணக்கை எதிர்க்கிறான். எதிர்த்து பேசும் தைரியத்தை உனக்கு யார் கொடுத்தது? சொன்னதைச் சொல் என்ற ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாகியும் அது தவறே என அவன் வாதிடுகிறான். தன் சக மாணவர்களுக்கும் அதை விளக்குகிறான். இதற்கிடையில் கையில் சிவப்பு பட்டை அணிந்த மேல் வகுப்பு மாணவர்கள் சிலர் அந்த வகுப்பிற்குள் அதிரடியாக நுழைய அவர்களும் 2+2=5 என உரக்கச் சொல்கிறார்கள். ஆசிரியர் கரும்பலகையில் 2+2=5 என எழுதியதில் 5 என்ற எண்ணை மட்டும் அழித்து விட்டு இந்த கணக்கை நீயே பூர்த்தி செய் என எதிர்த்து வாதமிட்ட அந்த மாணவனுக்கு கட்டளையிடுகிறார். ஆசிரியரும் சக மாணவர்களும் மேல் வகுப்பு மாணவர்களும் 2+2=5 என்பதை நம்பிக் கொண்டிருக்க அந்த மாணவன் கரும்பலகையில் என்ன எழுதினான்? 2+2=5 என்பது சரிதானா? தவறு எனும் பட்சத்தில் மற்றவர்களைப் போல் அதற்கு அந்த மாணவனும் அடிபணிந்தானா? அவனுக்கு என்ன நிகழ்ந்தது? இந்த குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


📎
  • Two & Two
  • Directed by - Babak Anvari
  • Screen Play - Babak Anvari, Gavin Cullen
  • Music - Halena Jahansson, Belinda Cullen,
  • Country - Iran
  • Language - Persian
  • Year - 2011.