Madame Tutli Putli - திக் திக் பயணம்.

ரயில் பயணங்கள் இனிமையானது, அலாதியானது, சுவாரசியமானது சிலசமயம் திக் திக் திரில் அனுபவங்களை கொண்டது. திக் திக் திரில் அனுபவம் என்றால் அந்த அனுபவத்தை பெற நம்மை காட்டுமிராண்டிகள் என விமர்சிக்கும் வடக்கு பக்கம் ஒரு முறை இரயில் பயணித்தால் உணரலாம். பயணச்சீட்டு இல்லாமல் முதல் வகுப்பில் ஏறுவது, இருக்கைக்கும் இருப்பதற்கும் வம்பிழுப்பது, ஜர்தா பாக்கு, கஞ்சா, புகை,  நகை மற்றும் பணம் பறிப்பு, மயக்க பிஸ்கட், குழந்தை கடத்தல், சில சில்மிஷங்கள், அசந்தால் அடிமடியில் கை வைத்து கிட்னியைக் கூட திருடுவது என ஆந்திராவை தாண்டினால் அத்தனை உத்தம செயல்களும் அந்த பயணத்தில் வாய்க்கும். வடக்கு நோக்கிய பயணம் என்றாலே அடிவயிறு கலங்க திரில் நிறைந்தவைதான். அத்தகைய இரயில் பயணத்தை போலவே ஒரு அனுபவத்தை இந்த குறும்படத்தின் நாயகி Madam Tutli பெறுகிறாள். அதனை சஸ்பென்ஸ் கலந்து அடுத்தது என்ன? திக் திக் நிமிடங்களாக "Stop Motion" என சொல்லக்கூடிய அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அழகாக இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.




Stop Motion என்பது அனிமேஷன் தொழில் நுட்பத்தில் ஒன்று. இதில் வழக்கமாக கணினி கொண்டு கதாபாத்திரங்களை படைக்காமல் உயிரோட்டமுள்ள பொம்மைகளை களிமண் அல்லது பிளாஸ்டிக் கொண்டு (Clay animation) உருவாக்கி உலாவ விடுவார்கள். சில விளம்பரங்களில் நாம் இதை பார்த்திருக்கக் கூடும். இந்த குறும்படம் அந்த வகையில் ரசனையுடன் தயாரிக்கப்பட்டு பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.


📎
  • Madam Tutli Putli.
  • Directed by - Chris Lavis, Maciek, Szczerbowski.
  • Music - Jean Frederic Messier.
  • Made by - National Film Board Canada.
  • Country - Canada.
  • Year - 2007.