பரத்தை.



புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ

சி.சரவணகார்த்திகேயன் என்பவரின் "பரத்தை கூற்று" என்ற கவிதை தொகுப்பிலிருந்த இந்த வரிகளை கனத்துடன் வாசிக்க நேர்ந்தது. பரத்தை என்பது யார்? என தேட விழைந்தது.

விபச்சாரி, விலைமாது, வேசி, பேச்சு வழக்கில் தேவிடியாள், ஆங்கிலத்தில் Harlot, Prostitute, Whore, Strumpet, Courtesan என இந்த சமூகத்தால் அடையாளப்படுத்தப் படுபவர்கள்தான் சங்க காலங்களில் பரத்தை என அழைக்கப்பட்டு வந்தனர். கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின்மகளிர், விலைமகள், கணிகை, சலதி எனவும் வழங்கப்பட்டு வந்தனர். தொல்காப்பியர் இவர்களை அழகாக "காமக்கிழத்தி" என குறிப்பிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க இப்படித்தான் வாழவேண்டும் என எடுத்துக்காட்டாய் வாழ்ந்த சங்க காலத்திலும் விபச்சாரம் இருந்திருக்கிறதா? பரத்தை என்ற விபச்சாரிகள் வாழ்ந்திருக்கிறார்களா என்றால்? பசிக்காகவும் இச்சைக்காகவும் தொடங்கப்பட்ட தொழிலான விபச்சாரம் மொழி இனம் நாடு கடந்து ஆதிகாலம் முதல் இக்காலம் வரை அதே அவலத்துடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் என்பவள் தன்னைவிட வலியவள் என ஆண் உணர்ந்து அவளை எப்போது ஒடுக்க நினைத்தானோ அப்போதே விபச்சாரியும் உருவாக்கப் பட்டிருக்கிறாள்.



சங்க காலத்தை எடுத்துக் கொண்டால் போர் முடிந்த ஓய்வு காலங்களிலோ, தலைவியின் மீது ஊடல் கொண்டு அவளை பிரிந்த காலங்களிலோ ஒரு ஆண்மகன் இத்தகைய பரத்தையை நாடிச் சென்றிருக்கிறான். அவ்வாறு அவர்களை நாடிச்செல்லும் செயல் "பரத்தமை ஒழுக்கம்" என அழைக்கப்பட்டது. கற்பை பொதுவில் வைப்போம் என எட்டையபுரத்தானுக்கு எட்டிய மகா சிந்தனையெல்லாம் அப்போது எவருக்கும் எட்டவில்லை. ஆண்களின் கற்பு டேக் இட் ஈசி பாலிசியாகவே இருந்திருக்கிறது. இந்த பரத்தமை செயலுக்காக ஜாதி மதம் இனம் மற்றும் கடவுளின் பெயரால் பரத்தையர்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறார். பரத்தையர்களில் இல் பரத்தை, நய பறத்தை என இரண்டு வகை உண்டு. இல் பரத்தை என்பவள் ஒருவனை மட்டுமே துணையாகக் கொண்டு அவனையே நம்பி வாழ்ந்து மடிபவள். நய பரத்தை என்பவள் பலரோடு கூடி வாழ்பவள். இத்தகைய பரத்தையர்களைப் பற்றி பரத்தை கூற்று, பரத்தை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், ஊடல் தணிதல், பிள்ளைத்தாலி அணிதல் போன்ற பிரிவுகளில் மருதம் நெய்தல் பாலை திணைகளில் அகப்பொருள் தொடர்பான சங்க இலக்கியங்களில் சில குறிப்புகள் உள்ளது. தலைவன் தலைவியை பிரிந்து பரத்தையோடு வாழ்கிறான். அதனால் தலைவி பரத்தையை இகழ்ந்து பேசுகிறாள், அதனை அறிந்து கொண்ட பரத்தை அவளுக்கு அழகாக பதில் அளிப்பதாக அமைந்த இந்த குறுந்தொகை பாடல் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.

பொருள் :

நாம் நம்முடைய கூந்தலில் இதழ் ஒடிக்கப்படாத ஆம்பல் பூக்களை சொருகிக்கொண்டு நீர் நிரைந்த பெரிய துறையை விரும்பி, அங்கே தலைவனோடு விளையாடச் செல்வோம். நாம் அவ்வாறு விளையாடுவதைக் கண்டு தலைவி அச்சப்பட்டால், கடுமையான போரில் பகைவரின் வலிமையை அழித்து வெற்றிபெற்ற, பல வேற்படைகளையுடைய எழினியின் போர்முனையில் உள்ள பசுக்களின் கூட்டத்தைப் போல, அவள் (தலைவி) தன் தலைவனின் மார்பை தன் சுற்றத்தோடு சேர்த்து பாதுகாப்பாளாக.


இந்த பாடலை இயற்றியவர் ஔவையார். சங்க காலத்தில் எழினி என்ற பெயரில் பல குறுநில மன்னர்கள் இருந்தார்கள். இந்த பாடலில் வரும் எழினி அதியமான் நெடுமான் அஞ்சியாக இருக்கக்கூடும் என்கின்றனர். ஒருமுறை அந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டிலிருந்த பசுமாடுகளை எதிரிகள் கவர்ந்து சென்றனர். போரில் எதிரிகளின் பசுக்களை கவர்ந்து செல்வது அப்போது வழக்கம் (மாட்டை வைத்து அப்போதே அரசியல் செய்திருக்கிறார் மாட்டுக்கார சமூகம்). அந்த தருணத்தில் அதியமான் நெடுமான் அஞ்சி படைகளுடன் சென்று தன் வலிமையால் அந்த பசுக்களை மீட்டு வந்தான். தலைவியும் அதுபோல தான் கவர்ந்து வந்த தலைவனை வலிமையிருந்தால் மீட்டுச் செல்லட்டும் என தோழிகள் கேட்டுகுமாறு பரத்தை ஒருத்தி எள்ளி நகையாடுகிறாள். இந்த பாடல் பரத்தையின் கூற்று என்றாலும் ஔவையார் தமக்கே உரிய பாணியில் அரசனின் புகழை உவமையாக வைத்து பரத்தை தன்மைக்குறிய கேலி கிண்டலுடன் அழகாக படைத்திருக்கிறார்.