தேவகானா.



தையே இல்லாமல் கூட திரைப்படம் இருக்கலாம் ஆனால் கானா பாடல் இல்லாத திரைப்படம் வெளிவருவது ஒருநேரத்தில் அரிதாக இருந்தது. அந்த பெருமைக்கும் கானா பாடல் என்பதை நமக்கெல்லாம் அறிமுகப் படுத்தியதற்கும் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் தேவா. இது மிகை அல்ல. ஒரு வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு மேல் அவர் இசையமைத்ததும், பெரும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கதைகளும் அவருக்காக காத்திருந்ததும், தேசிய விருது பெற்ற திரைப்படம் உட்பட பல சிறந்த திரைப்படங்களில் கூட அவரது பாடல்கள் இடம்பெற்றதும் அதற்கு சாட்சியாகும். 


கா வை 'ஹ்கா' என அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க கானா என்ற வார்த்தை ஹிந்தி மொழியிலிருந்து வந்தது (தமிழ் ஆர்வலர்கள் கவணிக்க). இலங்கையின் சிங்கள பைலா பாடலைப் போல (தமிழ் ஆர்வலர்கள் மீண்டும் கவணிக்க) அமைந்த இத்தகைய பாடல்களின் பிறப்பிடம் சிங்காரச் சென்னை ஆகும். சென்னையில் உள்ள சேரிப் பகுதிகளில் வசிக்கும் மக்களால் கொண்டாட்ட தருணங்கள் மற்றும் துக்க தருணங்களில் பாடப்பட்டு வந்த இவைகள் இன்று அடித்தட்டு மக்களின் கலாச்சார அடையாளமாக பார்க்கப்படுகிறது. கானா பாடலுக்கு ச ரி க ம ப த நி ச என்ற ஏழும் ஏனைய வரைமுறைகளும் தேவைப்படாது. கிராமிய தெம்மாங்கு பாடல்களின் அப்டேட் வெர்ஷனாக வார்த்தைகளை இட்டுகட்டி கொஞ்சம் கோர்வையாக பாடினால் போதுமானது. பின்னணி இசையை எடுத்துக் கொண்டால் சாதாரண கரவோசை மற்றும் மேசை, டிபன்பாக்ஸ், பஸ் சீட், ஷூ, தட்டுமுட்டு சாமான்கள் இவற்றிலிருந்து பெறப்படும் சப்தங்களே கானாவிற்கு அடிப்படையாகும். இந்த கானா பாடல்களை அடித்தட்டு சமூகத்திலிருந்து வெளிக்கொண்டு வந்த பெருமை சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைச் சேரும். அவர்களின் தயவில் தொன்னூறுகளின் மத்தியில் சென்னை கல்லூரிகள் முழுவதும் கானா ஏகப் பிரபலமாக இருந்தது. பெண்களை இழிவு படுத்துவதாகவும், ஈவ் டீசிங்கிற்கு வழி வகுப்பதாகவும் உள்ளது என இந்த கானா பாடல்களை தடை செய்ய வேட்டி சேலை உருவாத சட்டமன்ற விவாதம் கூட நடந்த வரலாறும் உண்டு. தற்போது கூட இந்த கானாவை நாம் தமிழராகிய நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்க மீண்டும் தேவாவிற்கு வருகிறேன்.

மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தில் அறிமுகமான தேவா பல சிறந்த பாடல்களை கொடுத்திருந்தாலும் அவரது தனித்தன்மையான இந்த கானா பாடல்களே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. வேலூர் மாவட்டத்திலுள்ள ஆர்காடில் பிறந்த இவருக்கு கானா பாடல்களைப் பற்றிய அறிமுகம் இயல்பாகவே அமைந்திருந்தது. அவரே மெட்டுக்களைப் போட்டு வார்த்தைகளையும் அழகாக கோர்த்து விடுவார். தலைவாசல் படத்தில் முதல்முறையாக தேவா ஒரு கானா பாடலை பாடியிருந்தாலும் தலைக்காக காதல்கோட்டை திரைப்படத்தில் பாடியதே அவரை கவணிக்க வைத்தது. இன்று பலர் திரைப்படங்களில் கானா பாடல்களை பாடுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் தேவாதான் முன்னோடி. கானா என்றால் குதுகலம் கானா என்றால் கொண்டாட்டம் அந்த குதுகல கொண்டாட்டத்துடன் அடியேன் ரசிக்கும் தேவாவின் கானா பாடல்கள் சிலவற்றை 'தேவ'கானாவாக அசைபோடுகிறேன். 

பாடல்களைக் காண