இரவை பகலாக்க முடியுமா?



ரவை பகலாக்க முடியுமா?

காதலில் இது சாத்தியம். ஏனென்றால் காதல் என்று வந்துவிட்டால் இரவு எது பகல் எது எனத் தெரியாது நாட்கள் தொலையும். சூரியன் நிலவாகவும் நிலவு சூரியனாகவும் வெட்கையும் குளிர்ச்சியும் கலந்த வானிலை குழப்பமும் வாழ்நிலை குழப்பமும் ஏற்படும். சரி, இந்த கற்பனையை விட்டுவிட்டு நிஜத்திற்கு வருவோம். நிஜத்தில் இரவை பகலாக்க முடியுமா என்றால்? முடியும் என்கிறார் மிஸ்டர் "கிரிஸ்டியன் மார்ஷல்".

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வானசாஸ்திர இயற்பியல் விஞ்ஞானிதான் இந்த கிரிஸ்டியன் மார்ஷல். இயற்பியலையும் வானசாஸ்திரத்தையும் அது மனிதர்களோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் ஆராய்ந்து தலைக்கு வைத்து படுக்கும் அளவிற்கு பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் எழுதியிருக்கிறார். அவர்தான் ரோமில் நடந்த 32 வது International Space Travel Congress மாநாட்டில் இரவை பகலாக்க முடியும் என்றும் அதற்கு சாதாரண முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தால் போதும் என்றும் அடித்துச் சொன்னார். அதனை கேட்ட மற்றவர்கள் முன்பே சொன்னது போல் கிரிஸ்டியன் மார்ஷல் காதல் கீதல் என்று எதிலாவது விழுந்திருப்பார் அல்லது ஆராய்ச்சி முற்றி விண்ணைத் தாண்டியிருப்பார் என நினைத்தனர். பிறகுதான் அவர் கூறியது உண்மை என தெரிந்தது.

நாம் வசிக்கும் பூமியின் துணைக்கோள் நிலவு துணைக் கோலும் அதுதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றிருக்கும் அது என்னதான் அமாவாசைக்கு ஆப்சென்ட் ஆனாலும் மற்ற நாட்களில் தவறாமல் ஆஜராகி இந்த பூமியின் இரவிற்கு ஏதோ கொஞ்சம் வெளிச்சத்தை கொடுக்கிறது (பாட்டி வடை சுடுவதும், காதலியின் முகம் கிராபிக்ஸில் தெரிவதும், கடவுள் காட்சியளிப்பதும், கவிதை அருவி கொட்டுவதும் வேறு சமாச்சாரங்கள்). அந்த நிலவு பிரகாசமாக இருப்பதற்கும், பூமிக்கு கொஞ்சம் வெளிச்சத்தை கொடுப்பதற்கும் இரவில் சூரியனின் கதிர்கள் அதன் மீது படுகிறது. அந்த சூரிய கதிர்கள் நிலவில் படும் இடத்தில் கிரிஸ்டியன் மார்ஷல் சொன்னது போல் முகம் பார்க்கும் கண்ணாடியை பதித்துவிட்டால் சூரிய ஒளி நேரடியாக அதனில் பட்டு பிரதிபலித்து பூமிக்கு வந்து இரவை பகல் போல பிரகாசமாக மாற்றிவிடும்.

ஆச்சரியமாக இருக்கிறதா? நிலவில் பதிக்கும் கண்ணாடி பூமியில் எப்படி பிரதிபலிக்கும் ? அவ்வகையில் பெறப்படும் வெளிச்சம் எப்படி இருக்கும்? இந்த பூமியின் மொத்த பரப்பளவு நிலவைவிட அதிகம் அப்படி என்றால் பூமியின் இரவை பகலாக்க நிலவில் பதிக்க எத்தணை கண்ணாடிகள் தேவைப்படும்? அதற்கு போதிய ரியல் எஸ்டேட் நிலவில் இருக்கிறதா? என்ற சந்தேகம் வரக்கூடும்.

பூமியிலிருந்து நிலவு சுமார் 384400 கி.மீ தூரத்தில் இருக்கிறது. வானியலின் படி இது ஹாயாக சம்மருக்கு டூர் போகும் தூரம்தான். இந்த தூரம், உயரம், பூமி மற்றும் நிலவின் பரப்பளவு இவற்றை கொண்டு கணக்குப் போட்டு பார்த்தால் நிலவில் ஒரு சதுர மீட்டர் அளவிற்கு கண்ணாடியை பதித்தால் பூமியில் 3200 முதல் 3800 சதுர கிலோமீட்டர் அளவிற்கு அது வெளிச்சத்தை கொடுக்கும். ஆகவே பூமியில் இரவை பகலாக்க நிலவில் குறிப்பிட்ட இடம் இருந்தால் போதும். மேலும் அவ்வாறு நிலவிலிருந்து பெறப்படும் வெளிச்சம் 75 சதவீத பகல் பொழுதை ஒத்து காணப்படும். ஏற்கனவே இரவுப் பொழுது அதிகமாக உள்ள நாடுகளில் இதற்கான முதல் கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கிய நிலையில் வருங்காலங்களில் இது முழுவதும் சாத்தியப் படலாம். பல இருட்டு பக்கங்களும் வெளிச்சத்திற்கு வரலாம். ஆக நிஜத்தில்

இரவை பகலாக்க முடியும்.