கம்யூனிஸ்ட்- ஒரு நாடோடியின் கதை பகுதி - 8.




"நடைமுறை வாழ்வில் நீங்கள் தனி மனித வாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படுபவராக இருந்தால்  உங்களுக்கு கம்யூனிசம் புரியாது"


முதல் உலகப்போர் முடிந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் வேறுவித பாதையில் நடைபோடத் தொடங்கியது. ஏகாதிபத்தியம் என்ற சுரண்டலிலிருந்து விடுதலையாகி பொதுவுடமையும் அப்போதுதான் மலரத் தொடங்கியது. 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் ரஷ்யாவில் புரட்சி தொடங்க இந்த பொதுவுடமை கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிசம் அங்கு ஆட்சிக்கு வந்தது. ரஷ்யாவைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் கொஞ்சம் கொஞ்சமாக பரவ மற்ற முதலாளித்துவ நாடுகள் அதனை ஒரு நோயாக பார்க்கத் தொடங்கினர். அவர்களின் அந்த நோய் பயத்தினை "சிவப்பு பயம்" (Red Scare) என அழைத்தனர். குறிப்பாக உலக நாட்டாமையாகும் கனவிலிருந்த அமேரிக்காவிற்கு (இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை அது காட்டாமைதான்) கம்யூனிசம் பெரும் தலைவலியாக இருந்தது. தன் நாட்டில் கம்யூனிசம் பரவாமல் இருக்க அமேரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியது. 1908 ஆம் ஆண்டு இயற்றிய அமேரிக்க எதிர்ப்பு நடவடிக்கை கண்காணிப்பு சட்டத்தை தூசு தட்டி கம்யூனிச கொள்கையை பின்பற்றும் சாதாரண தொழிலாளி முதல் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பொது சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையை சார்ந்தவர்கள், என சோன்பப்டி விற்பவர்களைக் கூட விட்டுவைக்காமல் அனைவரையும் கவணிக்கத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் சாப்ளின் புகழ்பெற்ற நடிகராக அமேரிக்காவில் வசித்து வந்தார். அமேரிக்காவின் அந்த கம்யூனிச ஆதரவாளர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் அவரும் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது.

சாப்ளின் தான் எடுத்த திரைப்படங்கள் அனைத்திலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை சுட்டிக்காட்டி கருப்பு வெள்ளை என்ற இருவேறு பக்கங்களிடையே எளிய மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருந்தார். ஒரு ரொட்டித் துண்டிற்கு ஏங்கிய நிலையிலிருந்து உயர்ந்ததால் என்னவோ தனது வாழ்க்கை ஓட்டத்தையே அவரது திரைப்படங்களில் காட்டியிருந்தார். "ஒரு சிறந்த படைப்பாளிக்கு எந்த வண்ணமும் பொருத்தம் இல்லை. அவன் எந்த அமைப்பையும் சார்ந்திருக்க தேவையில்லை. உள்ளதை உள்ளபடி உரக்கச் சொன்னால் போதும்" என்பதை நன்கு உணர்ந்த சாப்ளினை அமேரிக்க அரசு தவறாக புரிந்துகொண்டது. அவரது திரைப்படங்களின் பொதுவுடமை கருத்துக்களுக்கு முடிச்சுப்போட்டு அவருக்கு சிவப்புச் சட்டையை மாட்டி கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தியது. அதற்கு பொருந்துவது போல் இங்கிலாந்தின் உளவுத்துறையான MI5 தன் பங்கிற்கு அமேரிக்காவில் இயங்கிவந்த CPUSA (Communist Party USA) என்ற அமைப்பில் சாப்ளின் இருக்கிறார் என்றும் அதன் மூலம் ரஷ்யாவிற்கு உதவி செய்கிறார் எனவும் கொளுத்திப்போட அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

MI5 செய்தியின்படி சாப்ளின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறாரா என அறிந்து கொள்ள அவருடன் பணிபுரிபவர்கள், அவரது வேலையாட்கள், முன்னாள் -இன்னாள் மணைவிகள் மற்றும் விட்டகுறை - தொட்டகுறை காதலிகள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் இரகசிய விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட அமேரிக்க உளவு நிறுவனமான FBI -யின் இயக்குனர் 'எட்கார் ஹூவர்' 2060 பக்கம் கொண்ட அறிக்கையை சாப்ளினுக்கு எதிராக தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைக் கொண்டு சாப்ளின்மீது வழக்கு பதிவு செய்து அவரை நேரடியாகவும் விசாரித்தனர். கிட்டத்தட்ட நான்கு மணிநேர விசாரணையில் அவரது பிறப்பு, பூர்வீகம், எந்த இனத்தை சேர்ந்தவர், தொழில் என அனைத்தும் தோண்டி துருவப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த எந்த ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை. கடைசியாக 'நான் உலகமெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகளை வெறுக்கிறேன்' என்று ஒரு வார்த்தையை கூறுங்கள் உங்களை விடுவிக்கிறோம் என மிரட்டியும் பார்த்தனர். அந்த ஒரு வார்த்தைக்கு பதிலாக சாப்ளின் மௌனத்துடன் விசாரணை முடிந்து வெளியேறினார். பிறகு வந்த காலங்களில் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என அனைத்தும் மறுக்கப்பட்டது. ஆனாலும் எதிலாவது சிக்கிக் கொள்ள மாட்டாரா என தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டே வந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அமேரிக்க அரசிற்கும் சாப்ளினுக்கும் இடையே கம்யூனிசத்தை வைத்து ஒரு சிறிய பனிப்போரே நிகழ்ந்தது.




காலங்கள் உருண்டோட ரஷ்யாவில் லெனினுக்கு பிறகு ஸ்டாலின் வர,
ஹிட்லரின் தயவால் உலக வரைபடமும் சற்று மாறியிருந்தது. கம்யூனிசமும் ஐரோப்பாவையும் தாண்டி சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் நடைபோடத் தொடங்கியது. அமேரிக்காவிற்கு இந்தமுறை சிவப்பு பயம் மேலும் அதிகரிக்க கம்யூனிச தடுப்பு நடவடிக்கைகளில் அது மும்மரமாக இறங்கியது. 1950 ஆம் ஆண்டு அமேரிக்கா அரசு மெக்கார்த்தி என்பவர் தலைமையில் அனைத்து துறையிலிருக்கும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களை பட்டியலிட்டு அடியோடு ஒழித்துக்கட்ட நினைத்தது. துரதிஸ்டவசமாக அந்தப் பட்டியலில் சாப்ளின் முதலிடத்தில் இருந்தார். இடைப்பட்ட காலங்களில் சினிமாவும் வளர சாப்ளின் 1947 -ஆம் ஆண்டு "மொனொய்சியர் வெர்டாக்ஸ்" என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த திரைப்படமும் கம்யூனிச கொள்கை உடையதென தெரிந்து கொண்ட அமேரிக்க அரசு அதற்கு தன் நாட்டில் தடை விதித்தது மேலும் சாப்ளினை பழிவாங்க அதற்கு ஒரு பெரும் ஆதாரமும் கிடைத்திருந்தது. சாப்ளின் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் குடியுரிமை இல்லாமல் அமேரிக்காவில் வாழ்ந்து வந்தார். பேர், புகழ், செல்வங்கள் என அனைத்தும் இருந்தும் தன் திரைப்படங்களில் வரும் நாடோடி கதாபாத்திரத்தைப் போலவே அவர் வாழ்ந்து வந்தார். குடியுரிமைக்காக பலமுறை நிர்பந்திக்கப்பட்டாலும் என்றாவது ஒருநாள் அமேரிக்கா தன் முதுகில் குத்தக்கூடும் என நினைத்திருந்த அவர் அதனை மறுத்தே வந்தார். சாப்ளினின் இந்த குடியுரிமையை ஆதாரமாக கையிலெடுத்த அமேரிக்கா அரசு அவரை கைது செய்ய கழுகு கண்களை உருட்டி காத்திருந்தது.




1953 ஆம் வருடம் சாப்ளின் தன் மனைவியுடன் தான் தயாரித்த "லைம் லைட்" என்ற திரைப்படத்தை வெளியிட இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். அவர் இங்கிலாந்தில் இறங்குவதற்கு முன் அமேரிக்க அரசு அவருக்கு அவசரகதியில் ஒரு தந்தியை அனுப்பியது அதில் 'சாப்ளின் நீங்கள் நாடுகடத்தப்பட்டீர்கள் உங்கள் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது, அமேரிக்கா திரும்பினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது. சாப்ளின் என்றோ நினைத்தது நடந்துவிட அமேரிக்கா அனுப்பிய தந்தியுடன் இங்கிலாந்தில் இறங்கிய அவர் தன் திரைப்படத்தை அங்கு வெளியிட்டார். மேலும் தான் கடைசி காலத்தை அமைதியாகக் கழிக்க தன் பிறந்த நாடான அங்கு ஒரு இடத்தையும் தேடினார். அமேரிக்காவைப் போலவே இங்கிலாந்தும் இந்த நாடோடிக் கலைஞனை வெறுத்து ஒதுக்க கடைசியில் தன் மணைவி மற்றும் எட்டுக் குழந்தைகளுடன் சுவிச்சர்லாந்திற்கு குடிபுகுந்தார். தன் இறுதி நாட்களை அங்கேயே கழித்தார்.

சாப்ளின் ஒரு தீவிர கம்யூனிஸ்டா? அல்லது கம்யூனிச கொள்கையை மேம்போக்காக கொண்டவரா? அமேரிக்க அரசு அவருக்கு ஏன் அத்தனை நெருக்கடி கொடுக்க வேண்டும்? இங்கிலாந்து உளவுத்துறை சொன்னதுபோல் அவர் ரஷ்யாவிற்கு உதவினாரா? என்பதற்கெல்லாம் எந்த பதிலும் கிடையாது. சாப்ளிக்கு நெருக்கமானவர்கள் அவரது வாழ்க்கையை ஆராய்ந்தவர்கள் என யாருக்கும் அதற்கான  விடை தெரியாது. சாப்ளினும் தன் சுயசரிதை உட்பட எதிலும் கம்யூனிசத்தைப் பற்றி குறிப்பிடவும் இல்லை. ஆனால் ஒருமுறை நீங்கள் கம்யூனிஸ்டா என கேட்டபோது அவர் அளித்த விளக்கம் சாப்ளின் எப்படிப்பட்டவர் எதைச் சார்ந்தவர் என்பதை உணர்த்தியது. அவர் அளித்த விளக்கம்-

".....கம்யூனிஸ்டுகள் மற்றவர்களை விட வித்தியாசமான ஜீவன்கள் இல்லை. கம்யூனிஸ்டுகளின் தாயும் மற்ற தாய்களைப் போலத்தான். தனது மகன் போர் முனையிலிருந்து திரும்ப மாட்டான் என்று செய்தி கேள்விப்படுகிற போது அந்தத் தாயும் அழுகிறாள், கதறுகிறாள். இதை புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டியதில்லை. ஒரு மனிதனாக இருந்தாலே போதும். நான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்வுகள் எனக்குத் தெரியும்...."

சாப்ளினின் பொன்மொழிகள் சில.


துணுக்குச் செய்தி.

சாப்ளின் நாடுகடத்தப்பட்டதற்கு பின் அமேரிக்கா அங்கிருக்கும் அவரது "பிரேக் அவே" ஆடம்பர வீட்டையும் சொந்தமாக வைத்திருந்த சாப்ளின் ஸ்டியோவையும் பறித்துக்கொண்டது. அவரது தயாரிப்பு நிறுவனமான யுனைட்டட் ஆர்டிஸ்ட் நிறுவனத்தையும் முடக்கியது. மேலும் "லாஸ் ஏஞ்சல்ஸ் வாக் ஆப் ஃபேம்" பட்டியலிலிருந்து சாப்ளினின் பெயரையும் நீக்கியது. அமேரிக்கா தன் முதுகில் குத்தியது சாப்ளினை வெகுவாக பாதித்திருந்தது. "ஏசு நாதர் அமேரிக்காவின் அதிபரானால் ஒருவேளை அங்கு செல்வேன்" என நாடுகடத்தப்பட்ட பிறகு அமேரிக்க மண்ணை மிதிக்கக் கூடாது என வைராக்கியத்தோடு அவர் வாழ்ந்து வந்தார். காலம் ஒன்றே அனைத்திற்கும் மருந்தென உணர்ந்த அவர் தன் கடைசியாக தயாரித்த "தி கிங் இன் நியூயார்க்" என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்காகவும், ஆஸ்கார் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெறவும் என இரண்டுமுறை அமேரிக்கா சென்று வந்தார். அந்த இரண்டுமுறையும் அமேரிக்காவில் இரண்டு நாட்களே தங்கியிருந்தார்.

சாப்ளினின் திரைப்பட வரிசையின் தொடர்ச்சி.

45. The Bank (1915).


46. Shanghaied (1915).



47. A Night in the Show (1915).


48. Carmen (1916).



49. Police (1916).



50. Triple Trouble (1918).