கொடுத்து வைத்த குடும்பஸ்தன்.


மெரிக்காவைச் சேர்ந்த கார்டூனிஸ்டான ராபர்ட் ரிப்ளே என்பவருக்கு சில வினோதங்கள், ஆச்சரியங்கள், அதிசயங்கள் இவற்றை புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்காக இருந்தது. ஆரம்பத்தில் விளையாட்டாக விளையாட்டில் நிகழ்ந்த சிலவற்றை புகைப்படங்களாக எடுத்த அவர், பின்னாட்களில் உலகமெங்கும் அலைந்து திரிந்து வினோதமான உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அவர்களின் கதைகள் என அனைத்தையும் சேகரித்து Ripley's Belive It or Not (நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்) என புத்தகமாகவும் அருங்காட்சியாகவும் உலகின் பார்வைக்கு வைத்தார். அவர் மறைவுக்குப்பின் வந்த பலர் அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர Ripley's Belive It or Not தொகுப்பில் இன்று உலகமெங்கும் நிகழும் பல வினோதங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் வினோதங்கள் Ripley's Belive It or Not என்ற அதே பெயரில் பல தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ என சொல்லக்கூடிய நேரடி நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்படுகின்றன. ஆசியாவைப் பொருத்தவரை AXN என்ற தொலைக்காட்சி சேனலில் இதனை காணலாம். அந்த சேனலில் 2011 ஆம் ஆண்டிற்கான உலகின் வினோதமானவர்கள் சிலரின் கதைகளை சேகரித்து பரிசளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்சியில் இந்தியாவின் சார்பாக சியோனா சானா (Ziona Chana) என்பவர் கலந்து கொண்டார். வழக்கமாக நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலர் அமர்ந்திருக்க சியோனா சானா தன் குடும்பக் கதையை அவர்களிடம் கூறினார். அதனைக் கேட்ட அவர்கள் முதலில் ஆச்சரியம் அடைந்தனர். பிறகு இவர் கூறுவது உண்மைதானா என ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சிலருக்கு மயக்கமே வந்துவிட்டது. ...யப்பா சாமி!... இந்த உலகத்துல உன்ன மிஞ்ச ஆளே கிடையாது... பிடி உனது பரிசை... என அந்த வருடத்தின் விருதை கண்ணை மூடிக்கொண்டு அவருக்கே கொடுத்தனர்.

நிகழ்ச்சியின் நடுவர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வாயைப் பிளக்க வைத்து சிலரது வயிற்றெரிச்சலோடு விருதினை தட்டிச் சென்ற சியோனா சானாவின் வினோதமான குடும்பக் கதைதான் என்ன? அவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?.



மிசோரம் மாநிலத்தில் இருக்கும் பக்த்வாங் என்ற கிராமத்தில்1945 -ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் சியோனா சானா பிறந்தார். அவரது பதினேழாவது வயதில் பெற்றோர் அவருக்கு சம்பிரதாயப்படி திருமணம் செய்து வைக்க தன் குடும்ப வாழ்க்கையை இனிதாகத் தொடங்கினார். சில வருடங்களில் ஒரு குழந்தை பிறந்த நிலையில் தன் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவதாக ஒரு திருமணமும் செய்து கொண்டார். இரண்டு மனைவிகள் இருக்கும் இடத்தில் என்ன கலவரம் நிகழும் என யூகித்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கத்திற்கு மாறாக அவரது மனைவிகள் இருவரும் சண்டை சச்சரவில்லாமல் அவரை மகிழ்விக்க மூன்றாவது நான்காவது ஐந்தாவது கோணத்தில் அவர் சிந்திக்கத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் ஏதோ பிறந்தநாளை கொண்டாடுவதைப் போல திருமணம் செய்துகொள்வதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். கடைசியாக 2009 ஆம் ஆண்டு செய்துகொண்ட திருமணத்தோடு சேர்த்து தற்போதைய நிலவரப்படி அவருக்கு மொத்தம் 39 மனைவிகள் இருக்கின்றனர். இது ஒரு சாதனையா என்றால்? அவரது சாதனை இனிமேல்தான் இருக்கிறது. அதனை தெரிந்து கொள்ள வங்கதேசம் மற்றும் மியான்மரின் எல்லையின் அருகே இருக்கும் சவுன் தட் ரன் என்ற அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் வாருங்கள் .

மொத்தம் நான்கு மாடிகள் 100 அறைகள் கொண்ட அந்த வீட்டில் அவரது 39 மனைவிகள் உட்பட 89, குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக்குழந்தைகள் என மொத்தம் 175 உறுப்பினர்களோடு சியோனா சானா வசித்து வருகிறார். இதனையும் தவிர்த்து 26 பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஒரு சாம்ராஜ்ஜியம் போல் தான் உருவாக்கிய அந்த மொத்த குடும்பத்திற்கும் அவரே தலைவராக இருக்கிறார். அவரது முதல் மனைவி சத்தியாங்கி என்பவர் வீட்டுப் பொறுப்புகளுக்கு தலைமை வகிக்க, சியோனா உட்பட அவரது மகன்கள் இணைந்து விவசாயம், தட்சு வேலை, பாத்திரக்கடை போன்ற பல தொழில்களை செய்து பொருளாதார தேவைகளை கவனித்து து  வருகின்றனர். சமீபத்தில் கடைசியாக திருமணம் செய்து கொண்ட அவரது இளம் மனைவி வீட்டிலிருக்கும் அனைத்து சிறு குழந்தைகளை கவனிக்க, மகன்களில் ஒருவர் மற்ற குழந்தைகளுக்கு குருகுல முறைப்படி கல்வி கற்றுத் தருகிறார். தினமும் 100 கிலோ அரிசி, 40 கிலோ கோதுமை, 60 கிலோ உருளைக்கிழங்கு, ஞாயிற்றுக்கிழமை நான்வெஞ் என்றால் 39 கோழி என அன்றாட தேவை கொண்ட அந்த குடும்பம் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் பெயர் போனது. காலையில் 5 மணிக்கு கோழி கொக்கரக்கோவிற்கு முன் எழுந்து அனைவரும் பிரார்த்தனைக்கு வரவேண்டும், பிறகு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும், ஆண்கள் வெளி வேலைக்கும், குழந்தைகள் கல்வி கற்கவும் செல்ல வேண்டும், இரவு 9 மணிக்கெல்லாம் விளக்கை அணைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வாரம் ஒருவர் சியோனாவுடன் தங்க வேண்டும் என்ற அட்டவணை வைத்து வாழும் அவரது மனைவிகளுக்குள் இதுவரை எந்த சீரியல் குழப்பங்களும், சீப்பான குடுமிப்பிடி சண்டைகளும் நிகழ்ந்ததில்லை என்பதே சிறப்பு. மேலும் உலகின் பெரிய குடும்பமான இதில் வசிப்பதை அவர்கள் பெருமையாக கருதி இல்லறம் நடத்துகின்றனர்.


தான் வசிக்கும் கிராமத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும், அரசாங்கத்திற்கு உட்பட்டும் முறைப்படி பல திருமணங்களை செய்து கொண்டதை சியோனா ஒருபோதும் குற்றமாக கருதியதில்லை. கிரிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட அவர் 1994 ஆம் ஆண்டு தன் தந்தையின் பெயரில் சாலியன் சானா என தனியாக ஒரு மதத்தையும் தொடங்கியுள்ளார். அவரது குடும்ப உருப்பினர்களுடன் சேர்த்து மொத்தம் 1700 நபர்களைக் கொண்ட அவரது மதத்தின் கொள்கைபடி இயேசு கிருஸ்த்து மீண்டும் இந்த மண்ணில் அவதரிப்பார் அப்போது தன் இனமே இந்த பூமியை ஆளும் என நம்பிக்கையுடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

புராணங்கள் மற்றும் வரலாறு இவற்றில் சில கதாபாத்திரங்களுக்கு எண்ணற்ற மனைவிகள் இருப்பதாக நாம் படித்திருப்போம் ஆனால் நிஜவாழ்க்கையில் ஒருவர் 39 பெண்களை மனைவியாக்கிக் கொண்டு எந்த ஒரு பிரிவும் (மரணம் உட்பட) கோப தாபங்களும் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் ஒரே கூரையின் கீழ் பெரிய குடும்பமாக பொருளாதாரத்தையும் சமாளித்து வாழ்க்கையை நடத்துவது என்பது அதிசயத்தக்க சாதனையாகும். ஒன்றை சமாளிப்பதற்குள் வெளுத்து நரைத்து வழுக்கையாகி வாழ்க்கை கொட்டிவிடும் வேளையில் 39 மனைவிகளை சாமாளிக்கும் இவரின் குடும்பக் கதை நிச்சயம் வினோதமானதே. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று அவரை திட்டித் தீர்த்தாலும், கொடுத்து வைத்த மனுசன்.. கொடுத்து வைத்த குடும்பஸ்தன்...என அவர் மீது பொறாமையும் ஏற்படுகிறது. உலகின் மிகப்பெரிய குடும்பஸ்தனான அவரிடம் நாம் கற்க வேண்டிய பாடமும் இருக்கிறது. அது பொறுமையும் சமாளிப்பும் .

Documentary. 

சொல்ல மறந்துவிட்டேன். சமீபத்தில் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடிய சியோனா சானாவிற்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால், மேலும் சில திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதில் ஒருவராவது அமெரிக்காவை சேர்ந்தஅல்ட்ரா மாடர்ன் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.