பாமா விஜயம், ஆண்பாவம்.



ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் இந்த மாதம் என்ன புத்தகம் வாங்கலாம் என்ற பட்டியல் வைத்திருப்பேன். மேலும் அதற்கென ஆயிரம் ரூபாயாவது ஒதுக்கிவிடுவேன் (பத்து வருடங்களுக்கு முன் நூறு ரூபாயில் தொடங்கிய பழக்கம்). இந்த மாதம் பெரும் தேடலுக்கான கனவு இருந்தும், ஜி எஸ் டிக்கு உட்பட்ட பொருளாதாரம் இருந்தும் இருநூறு ரூபாயில் இரண்டே இரண்டு திரைக்கதை புத்தகங்களோடு திருப்தியடைந்து நுகர்வை முடித்துவிட்டேன். அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த பாமா விஜயம் என்ற திரைப்படத்தின் கதை, மற்றொன்று முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் கதையாகும். இந்த இரண்டு திரைப்படங்கள் வெளிவந்த போது அதன் கதையும் திரைக்கதையும் வசனங்களும் வாழ்வின் எதார்த்தத்தை மிக அழகாக பிரதிபலித்து வெகுஜன மக்களையும் கவர்ந்திருந்தது.

பாமா விஜயம்.

1967 - ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் டி.எஸ்.பாலையா, முத்துராமன், நாகேஷ். மேஜர் சுந்தராஜன், ஸ்ரீகாந், சௌக்கார் ஜானகி, காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு போன்ற நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் பாமா விஜயம். "தலைமுறைகள் மாறும் போது பண்பாடும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் மாறுகிறது. அத்தகைய மாற்றங்கள் தனிமனிதன் ஒருவனிடத்தில் நடை, உடை, தோற்றம், கனிவு என்பதையும் மாற்றி பணம், அந்தஸ்து என போலி கௌரவத்தை ஏற்படுத்துகிறது. இந்த போலி கௌரவமே தாய், தந்தை, பாசம், குடும்பம், உறவுகள், நட்பு, காதல் கடமை, பொதுநலம், நாட்டுப்பற்று என அனைத்தையும் உடைத்தெரிகிறது" என்ற இந்த ஆழமான கருத்தை ஒரு கூட்டுக் குடும்பத்தின் பின்னணியில் பாலச்சந்தர் திரைப்படம் முழுவதும் நகைச்சுவையாக தனக்கே உரிய பாணியில் சொல்லியிருப்பார். இயக்குனர் சிகரத்திற்கு மட்டுமல்லாமல் நகைச்சுவையோடு ஆழுத்தமான கருத்துகளைச் சொல்லும் தமிழ் சினிமாவிற்கும் இது திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படம் வெளிவந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் இன்றைக்கும் அதன் கருத்துகள் நம் வாழ்வியலோடு பொருந்திப் போகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற 'வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா ' என்ற பாடல் தற்போதைய இந்திய பொருளாதார நிலவரத்திற்கு ஏகப் பொருந்தும். அத்தகைய பாமா விஜயம் திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அப்படியே எழுத்துக்களாக மாற்றி சில புகைப்படங்களுடன் ஆனந்த விகடன் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

ஆண்பாவம்.

தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை திரைப்படங்களின் பட்டியலில் என்றைக்கும் இதற்கு தனி இடம் உண்டு. சின்ன பாண்டியாக பாண்டியராஜனும் பெரிய பாண்டியாக பாண்டியனும் அவர்களது தந்தையாக வி.கே. ராமசாமியும் அவர்களுடன் ரேவதி, சீதா, ஜனகராஜ், கொள்ளங்குடி கருப்பாயி போன்றவர்கள் இணைந்து நகைச்சுவை, காதல், கலாட்டா, திடீர் திருப்பம் என திரைப்படம் முழுவதும் நம்மை மகிழ வைத்திருப்பார்கள். இளையராஜாவின் பாடல்களும் கொள்ளங்குடி கருப்பாயியின் நாட்டுப்புற தெம்மாங்கும் அள்ளியெடுத்து கொஞ்சும் அளவிற்கும் இந்த திரைப்படத்தில் மிஞ்சியிருக்கும். பெரிதான கருத்துகள் இல்லை என்றாலும் வாழ்வில் எது நிகழ்ந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன்னையும் தன்னைச்சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வோடு வைத்திருப்பதே உண்ணதமான வாழ்க்கையாக இருக்கும் என்பதை இந்த திரைப்படம் அழகாக காட்டியிருந்தது. இந்த திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து வருடங்கள் கழிந்ததை ஒட்டி படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான பாண்டியராஜன் திரைக்கதையை புத்தகமாக எழுதியிருந்தார். அதனை 'இந்த புத்தகத்தில் பெரிதாக ஒன்றுமில்லை திரையுலக நினைவுகளை அசைபோடுகிறேன்' என்ற அறிமுகத்தோடு வெளியிட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதை, தொடர்கதை இவற்றை திரைப்படமாக பார்க்கும் போது காட்சிகள் அனைத்தும் திரையில் எழுத்துகளாக தோன்றும். அதுவே ரசித்து மகிழ்ந்த ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை புத்தமாக வாசிக்கும் போது எழுத்துக்கள் காட்சிகளாக விரியும். இந்த இரண்டு புத்தகங்களை வாசிக்கும் போது எழுத்துக்கள் திரைப்பட காட்சிகளை அப்படியே கண்முன் நிறுத்திருக்கிறது. மேலும் எப்போதோ ரசித்து மகிழ்ந்த அந்த திரைப்படங்களை நினைவூட்டி மீண்டும் பார்க்கும் அனுபவத்தை தருகிறது. புத்தக வாசிப்பை கொஞ்சம் சுவரசியமாக்க இந்த இரண்டு திரைக்கதைகளையும் புரட்டலாம்.