மூன்றாவது கண் .




இயற்கை காட்சிகள், அதிசயங்கள், அபூர்வங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், திருவிழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பேரிடர்கள், சோக நிகழ்வுகள் போன்ற வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக எடுப்பது என்பது தேர்ந்த ஒரு கலை.  எந்தத்துறைக்கு பயன்படுகிறதோ இல்லையோ செய்தித்துறையில் இந்த புகைப்படக்கலையின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத ஒரு செய்தியை சிறந்த புகைப்படம் ஒன்று அப்பட்டமாக விளங்க வைத்துவிடும். ஆப்கானிஸ்தானின் பச்சைநிற கண்ணழகி, உகாண்டா நாட்டு குழந்தையின் சூம்பிப்போன கை, ரொட்டித்துண்டிற்காக கையேந்தும் சோமாலியா குழந்தைகள், போருக்குச் செல்லும் தந்தையை பிரியும் சிறுவன், பூகம்பத்தில் புதைந்த தம்பதிகள், தன் தலைவனின் இருதி ஊர்வலத்தில் வாசிக்கும் இராணுவ வீரன். இறந்து கரை ஒதுங்கிய சிரியாநாட்டு குழந்தை, போபால் விசவாயு தாக்கப்பட்ட குழந்தை,  அல்பேனியாவின் அகதிகள் முகாம்,  ஹிட்லரின் வதை முகாம், என புகழ்பெற்ற சில புகைப்படங்களே இதற்கு சாட்சியாகும். குறிப்பாக வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட எரியும் புத்தபிட்சுவின் படமும் நிர்வாண சிறுமியின் அலரலும் இந்த உலகையே உளுக்கியது குறிப்பிடத்தக்கது. உலகின் கவணத்தைத் திருப்ப இத்தகைய புகைப்படங்களை எடுக்க புகைப்படக்காரர்கள் பலர் தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். போர், கலவரங்கள், போராட்டங்கள், பேரிடர்கள் என அந்த கால சூழ்நிலையில் அத்தகைய உணர்வுபூர்வமான புகைப்படங்களை எடுக்கும் அவர்கள் எத்தகைய சிரமத்திற்கு உள்ளாகின்றனர்? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களின் நாட்கள் எவ்வாறு கழியும்?. இதனை நான்கு புகைப்படக்காரர்கள் மற்றும் அவர்களின் அனுபவம் மூலம் அழகாக விவரிக்கிறது இந்த திரைப்படம் "தி பேங் பேங் கிளப்" (The Bang Bang Club). 

தொன்னூறுகளின் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க நாடுகளில் நிறவெறி போராட்டம் உச்சத்தை தொட்டு ஒரு முடிவிற்கு வந்திருந்தது. அதற்காக தன் வாழ்க்கையை பல வருடங்கள் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலாவின் சிறைக் கதவுகள் திறக்க காத்திருந்த அந்த நேரத்தில் நாட்டின் முதல் பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (African Nantional Congrass ANC) என்ற கட்சிக்கும் அக்தா சுதந்திர கட்சி (Inkatha Freedom Party IFP) என்ற கட்சிக்கும் நாட்டையாளும் பலத்த போட்டி நிலவியது. இவர்களின் கடும் போட்டி நாடுமுழுவதும் உள்நாட்டு கலவரங்களையும் தோற்றுவித்தது. அதன் விளைவாக நிகழ்ந்த போராட்டம் மற்றும் வன்முறைகளில் கலவரக்காரர்களுடன் பொதுமக்களும் பாதிக்கப்பட, உலக நாடுகளின் கவணம் முழுவதும் ஆப்பிரிக்காவில் குவிந்தது. மேலும் புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் கேமரா கண்களுடன் புகைப்படக்காரர்களும் அவர்களின் குழுவும் ஆப்பிரிக்க தேசத்தில் குவிந்தன. அதில் அமேரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் "பேங் பேங் கிளப்" குழுவும் இருந்தது.

நிஜங்கள்
இந்த குழுவில் கெவின் கார்ட்டர் (Kevin Carter), கிரேக் மரினோவிச் (Greg Marinovich), கென் ஓஸ்டெர் ப்ரூக் (Ken Oosterbroek), ஜோவோ சில்வா (Joao Silva) என நால்வர் இணைந்திருந்தனர். இவர்கள் கலவர காலத்தில் 1990 முதல் 1994 வரையிலான நான்கு வருடங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கி புகைப்படங்களை சேகரித்தனர். கலவரங்கள் போராட்டாங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த மனிதநேயமற்ற செயல்கள் என அனைத்தையும் அவர்கள் புகைப்படமாக எடுத்து உலகின் பார்வைக்கு அனுப்பினர். அதற்காக குழுவிலிருந்த அவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். பின்நாட்களில் உலகின் பாராட்டுகளையும் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்த அந்த குழுவினர் எடுத்த புகைப்படங்களுக்காக, கென் ஓஸ்டெர் ப்ரூக் மற்றும் கெவின் கார்ட்டர் என்ற இரண்டு புகைப்படக்காரர்களின் உயிரை விலையாக கொடுக்க நேர்ந்தது. இதில் 1994 ஆம் ஆண்டு கென் ஓஸ்டெர் ப்ரூக் கலவரத்தின் போது தவறுதலாக சுடப்பட்டு இறந்துபோனார். அதனைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களில் "The Vulture and the Little Girl" என்ற புகைப்படத்தை எடுத்து புலிட்கர் பரிசுபெற்ற கெவின் கார்ட்டர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்தார். பேங் பேங் கிளப்பில் மீதமிருந்த கிரேக் மரினோவிச் மற்றும் ஜோவோ சில்வா இருவரும் பின்நாட்களில் தங்கள் பணியைத் தொடர்ந்து புகைப்படக்கலைக்காக பல உயரிய விருதுகளையும் பெற்றனர். அதில் ஜோவோ சில்வா என்பவர் ஆப்கானிஸ்தான் போரின்போது கண்ணிவெடியில் தன் இரண்டு கால்களையும் இழந்தார். ஆனாலும் தன்னம்பிக்கை குறையாத அவர் எழுந்து வந்து தனது பழைய குழுவான பேங் பேங் கிளப்பின் நினைவுகளையும் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த கலவரத்தையும் அசைபோட்டபடி தன் சக குழு நண்பர் கிரேக் மரினோவிச்சுடன் இணைந்து "The Bang Bang Club: Snapshots From a Hidden War" என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தின் மொத்த காட்சி வடிவமே இந்த திரைப்படம்.

கலவரகால புகைப்படங்கள்
இன்றைய காலகட்டத்தில் பாழாய்போன செய்தித்துறைக்குப் பின்னால் வெளித் தெரியாத ஒரு சிலரது கடின உழைப்பும், கலைப் படைப்பும் இருக்கிறது. அதற்காக அவர்கள் தங்கள் வாழ்வை பணயமாக வைக்க தவறுவதில்லை. போட்டோகிராபி என்ற கிரேக்க சொல்லிற்கு "ஒளியின் எழுத்து" என்று பொருள். அதற்கு தகுந்தார்போல் புகைப்படம் எடுப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒரு கலை. அதில் ஒட்டு மொத்த செய்தியின் வடிவம் ஒளிந்திருக்கிறது. இதனை உணர இந்த திரைப்படத்தை தவறாமல் தரிசியுங்கள்.


டாகுமெண்டரி
The Bang Bang Club
  • Directed By - Steven Silver.
  • Story - Based on the book "The Bang Bang Club: Snapshots From a Hidden War" written by Joao Silva and Greg Marinovich.
  • Music - Philip Miller.
  • Cinematography - Miroslaw Baszak.
  • Year - 2010.
  • Country - South Africa, Canada.
  • Language - Zulu, Xhosa, Afrikaans, English.

திரைப்படத்தின் டிரைலர்.