☰ உள்ளே....

Larvae (கொஞ்சம் புதுசு).மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி, ரோடு ரன்னர் போன்ற பிளாக் காமெடி மற்றும் ஸ்லாப்டிக் வகை காமெடி கலந்த கார்டுன் தொடர்களை தற்போது காண்பது என்பது அரிதாகிப்போனது. அட்வெஞ்சர் வகையரா தொடர்களாலும் தொழில்நுட்பம் கலந்த மாயாஜால கதைகளாலும் இன்றைய கார்டுன் உலகம் நிறைந்திருக்கிறது. அழுதுவடியும் மெகா சீரியல்கள் சேனல்களைப் போல அல்லது எதாவது ஒரு செய்தி சேனல்களைப் போல வெறும் சப்தங்களால் கார்டுன் சேனல்கள் இருபத்து நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதாவது குழந்தைகளை மட்டும் இலக்காக குறிவைத்து வியாபார தந்திரத்தோடு அவைகள் அழகாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. அதற்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக எப்போதாவது சில தொடர்கள் அனைவரையும் கவரும் விதத்தில்  அரிதாக ஒளிபரப்பப்படுகின்றன. அந்த வகையைச் சார்ந்த தொடர்தான் லார்வா (Larvae).

தென்கொரியாவின் சியோலில் உள்ள TUBA என்ற நிறுவனத்தார் டிஸ்னியின் ஆசிய ஒளிபரப்பிற்காக இந்த லார்வா தொடரை உருவாக்கினர். "Joo - Gong Maeng " என்பவர் இயக்கி, Great Park என்பவர் இதற்கு இசையமைத்திருந்தார். நாமெல்லாம் முகம் சுழித்து வெறுத்து ஒதுக்கும் புளுக்கள் மற்றும் பூச்சிகள்தான் இந்த தொடர் முழுவதும் நம்மை சிரிக்க வைத்து மகிழ்விக்கின்றன. அதிலும் முக்கிய கதாபாத்திரமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புளுக்களின் இரண்டு நிமிட பிளாக் காமெடி மற்றும் ஸ்லாப்டிக் வகை காமெடி கலந்த அட்டகாசமே இந்த லார்வா தொடரின் சிறப்பாகும். கிரேட், ஹவுஸ் மற்றும் நியூயார்க் என மூன்று சீசன்களில் 262 எபிசோடுகளாக ஆசியாவின் புகழ்பெற்ற KBS மற்றும் JEI சேனல்களில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த இந்த தொடரின் காட்சிகளை தற்போது இந்தியாவில் கார்டுன் நெட்வெர்க் சேனலில் ஒளிபரப்புகிறார்கள். போலியான குழந்தைத்தனம் இல்லாத ரசிக்கும்படியான கார்டுன்களைத் தேடினால் இந்த லார்வா நிச்சையம் அனைவரையும் கவரும்.