Bus 44 - அலட்சியமே ஆபத்து .

டுப்பகல் நேரம், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடம், கேமரா கண்கள் உட்பட பலரது நிஜப் பார்வைகளும் படும்படி ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருந்தவர்கள் தடுக்க நினைத்திராத அந்த சம்பவம் பிறகு ஊடகங்களின் வெறும் வாயில் மெல்லப்பட்டு பலரது ஆறுதல்களையும் விமர்சனங்களையும் பெறுகிறது. இது ஒரு சிறிய எடுத்துக்காட்டாக இருந்தாலும் சிறுசிறு திருட்டுகள் தொடங்கி கடத்தல் கொலை கற்பழிப்பு என இன்று துணிச்சலோடு நடக்கும் குற்ற சம்பவங்கள் அனைத்தும் சிலரின் பார்வை படும்படி அப்பட்டமாகவே நிகழ்கிறது. யாரோ? எவரோ? என்னதான் பிரச்சனையோ? உனக்கேன் அக்கறை? நமக்கேன் வம்பு என தடுக்க நினைக்காது ஒதுங்கிச் செல்லும் மனிதத் தன்மையின் அலட்சியப் போக்கே இத்தகைய துணிச்சலான குற்ற சம்பவங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுகின்றன. மனித மனதின் அத்தகைய அலட்சியப் போக்கிற்கு சாட்டையடி கொடுக்கிறது இந்த குட்டி சினிமா Bus 44.


இந்த குறும்படத்தின் கதைப்படி ஒரு பேருந்து பயணமும் தொடரும் வழிப்பறியும் அதனுடன் நிகழும் ஒரு சம்பவமும் மனித மனதின் இருண்ட மற்றும் வெளிச்சம் மிகுந்த பக்கங்களில் அத்துமீறி நுழைந்து அதனை சீர்தூக்கிப் பார்க்கிறது. சீனாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த குறும்படம் வெனிஸ், கேன்ஸ், நியூயார்க் மற்றும் ஹாங்காங் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. சீன தயாரிப்பில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற முதல் குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


 📎

  • Written & Directed by - Dayyan Eng.
  • Music - Yang Zhang.
  • Cinematography - Sam Koa.
  • Year - 2001
  • Country - Hong Kong.
  • Language - Mandarin.