சாரதா கபூர் .



புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான இவரது அப்பா சக்தி கபூர் ஹிந்தி சினிமாவின் மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பற்றாக்குறைக்கு இவரின் சொந்த பந்தங்களான கபூர் குடும்பமே பாலிவுட்டில் கோலோச்சியிருக்கிறது. இருந்தும், என்பது மற்றும் தொன்னூறுகளின் சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் எல்லாம் வரிசையாக திரைப்படங்களில் நடிக்க வர, இவர் மட்டும் நடிப்பதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என தான் உண்டு தன் சைக்காலஜி படிப்பு உண்டு என ஆரம்ப காலகட்டத்தில் ஒதுங்கியிருந்தார். ஆனால் இன்று 'இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார்' என தேடும் அளவிற்கு பாலிவுட்டின் ஆர்ப்பாட்டமில்லாத நடிகையாக விளங்குகிறார். அவர்தான் சாரதா கபூர் (Shraddha Kapoor).

1987-ல் பிறந்த சாரதாவிற்கு டீன் பதி என்ற திரைப்படத்தின் மூலம் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அமிர்தாப், பென்கிங்ஸ்லே, மாதவன் என பெரும் தலைகளுடன் கொஞ்சநேரம் இவரும் தலைகாட்டி இருந்தார். அதற்குப்பிறகு வந்த லூவ் கா தி என்ட் திரைப்படம் இவரை தனியே கதாநாயகியாக்கிப் பார்க்க, ஆஷிக் 2- ஆம் பாகம் இவரை சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம்பெறச் செய்தது. எல்லோருக்கும் தெரிந்த கதை, ரீமிக்ஸ் என இருந்தாலும் ஆஷிக் 2 படத்தின் மொத்த அழுத்தத்தையும் சாரதா தன் முகத்தில் தாங்கியிருந்தார். அவரது அந்த இயல்பான நடிப்பிற்கு பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளும் கிடைத்தது. அதற்கு பின் ஏக் வில்லன்., ABCD-2, பாக்ஹி, ஹைதர், ஒகே ஜானு (தமிழில் ஒகே கண்மணி), ஹாஃப் கேர்ள்பிரண்ட் என குறிப்பிடும்படியான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை இவர் பாலிவுட்டில் தக்கவைத்துக் கொண்டார். மேலும் சேக்ஸ்பியரின் ஹேம்லட் நாடகத்தை மையமாகக் கொண்டு 2014 ஆம் வெளிவந்த ஹைதர் திரைப்படத்தில் 'ஒபிலியா' என்ற கதாபாத்திரத்திற்கு சாரதா கனக் கச்சிதமாக பொருந்தி தேவதையாக பலர் மனதையும் கொள்ளையடித்தார். தற்போது மும்பை நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் சகோதரியின் உண்மைக்கதையான ஹசீனா (The Queen of Mumbai) என்ற திரைப்படத்தில் நடித்துவரும் இவர் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கென குறிப்பிட்ட ரசிகர்கள் என வைத்துக் கொள்ளாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் சாரதா கபூரை அடியேனுக்கும் பிடிக்கும் என்பதால் அவர் நடித்த திரைப்பட பாடல்கள் சிலவற்றோடு அவரைப் பற்றிய தகவல்களையும் இங்கு சற்று அசைபோடுகிறேன்.

1. Sun Raha Hai Na Thu - Aashiqui - 2.


2. Cham Cham - Baaghi.


3. Enna Sona - OK Jaanu.


4. Sun Saathiya - ABCD - 2.


5. Banjaara - EK Villain.


6. Phir Bhi Tumko Chaahunga - Half Girlfriend.


7. The Hamma Song - OK Jaanu.

"..நடிப்பது மட்டுமல்லாமல் சாரதாவிற்கு ஒரளவிற்கு பாடவும் தெரியும். ஏக் வில்லன், பாக்ஹி, ஹைதர், ராக் ஸ்டார் போன்ற திரைப்படங்களில் தன் சொந்தக்குரலில் சில பாடல்களைப் பாடி அசத்தியிருக்கிறார். மேலும் அவருக்கு மனே தேனே பொன்மானே அன்பே அருயிரே எல்லாம் போட்டு கலக்கி கவிதையும் எழுதத் தெரியும்.."