☰ உள்ளே....

ஈரேழு உலகங்கள்...
'ஈரேழு உலகமும் கண்டிராத அழகி அவள்' என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருப்போம். அதன்படி ஈரேழு பதினான்கு உலகத்தில் காணக் கிடைக்காத ஒரு பேரழகி இருக்கிறாளா என்ன? என்பது சந்தேகமாக இருந்தாலும் ஈரேலு உலகம் என்பது இருக்கிறது. அப்படி என்றால் நாம் வாழும் இந்த உலகத்தைப் போல அச்சு அசலாக இன்னும் பதின்மூன்று உலகங்கள் இருக்கின்றன. இதனை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க "இணை பிரபஞ்சம்" என ஏற்கனவே எழுதிவிட்டேன் அதனால் இந்தமுறை பழமை வாய்ந்த இந்து மதத்தின் புராணக் கதை பக்கம் தாவுகிறேன்.

படைத்தல் காத்தல் அழித்தல் கடமையை ஏற்றிருக்கும் சிவபெருமானே இந்து மதத்தின் முக்கிய கதாநாயகன் ஆவார். எல்லா ஜீவராசிகளுக்கும் தன் இனத்தை பெருக்க ஆண்பால் பெண்பால் என இருபாலினங்கள் தேவைப்படும் என்ற கருத்தை விளக்க அவர் அர்த்தநாரீஸ்வரர் என்ற டூ யின் ஒன் கதாபாத்திரத்தில் இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் நாம் வசிக்கும் இந்த பிரபஞ்சம் சூரியன், நட்சத்திரங்கள், கோல்கள், மலைகள், கடல்கள், மீன்கள் பறவைகள், விலங்குகள், மரங்கள் என ஏதுமற்ற வெறுமையாக அண்டவெளியில் இருளாக இருந்தது. அண்டம் என்ற சொல்லுக்கு தமிழில் முட்டை அல்லது கரு என்று பொருள். (தமிழ்மொழியின் சிறப்பு இது). அவ்வாறு இருள் நிறைந்த அண்டவெளியில் சிவபெருமான் மட்டும் கொதிக்கும் நெருப்பாக இருந்தார். தனியே இருந்த அவருக்கு போரடிக்க அவர் தன் லீலைகளைத் தொடங்கினார். சிவன் தன் உடுக்கையை அசைக்க ஓம் எனும் ஒலி ஆரோஹணமாகி (கவணிக்க ஆரோமலே இல்லை) முதலில் வெட்ட வெளியை நிரப்பியது. பிறகு சிவன் தனது ஜடாமுடியை அவிழ்க்கத் தொடங்கியதும் அவர் தலையிருந்த கங்கை பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. ஓடிய வெள்ளம் பெரும் பிரளயமாக அதில் சிவபெருமான் தன் சக்தியின் வடிவான தங்க முட்டை ஒன்றை மிதக்க விட்டார். அந்த முட்டை வெடித்துச் சிதறி அதிலிருந்து பிரம்மா ஓப்பனிங் சாங் இல்லாமல் அமைதியாக வெளிவந்தார் இந்த மாபெரும் பிரபஞ்சமும் உருவானது. இனி இரண்டாம் பாகம் முழுவதும் பிரம்மாதான் கதாநாயகன்.

முட்டையிலிருந்து வெளிவந்த பிரம்மா சிவனின் படைத்தல் தொழிலுக்கு முழு பொறுப்பையும் ஏற்றிருந்தார். அதற்காக

பூ
புவ
சுவ
மஹ
ஜன
தப
சத்ய

- என்ற ஏழு மேல் உலகங்களையும்,

அதல
வித
சுதல
தலாதல
மகாதல
ரஸாதல
பாதாள

- என்ற ஏழு கீழ் உலகங்களையும் அவர் படைத்தார்.

பூலோகத்தில் மனிதர்கள் விலங்குகள் பறவைகள், புவர்லோகத்தில் கிரகங்கள் நட்சத்திரங்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், சுவர்லோகத்தில் இந்திரன் முதலான தேவர்கள் (இதுதான் சுவர்க்கம் Including ரம்பை மேனகை ஊர்வசி) , ஜனலோகத்தில் பித்ருக்கள், தபலோகத்தில் தேவைதைகள், சத்யலோகத்தில் பிரம்மா எனவும், அதலலோகத்தில் காமுகர்கள், விதலலோகத்தில் அரக்கர்கள், சுதலலோகத்தில் மகாபலி, தலாதலலோகத்தில் மாயாவிகள், மகாதலலோகத்தில் அசுரர்கள், ரஸாதலலோகத்தில் அசுர ஆசான்கள், பாதாளலோகத்தில் வாசுகி முதலான பாம்புகள் எனவும் ஒவ்வொருவருக்கும் தகுந்த உலகை ரயில்வேயின் முன்பதிவு வகுப்புகளைப் போல தனித்தனியே அவர் பிரித்து படைத்திருந்தார். இதில் பூலோகம் என்பது கர்மவினையின் உலகமாக கருதப்படுகிறது. இதில்தான் ஒருவன் மனிதனாக முதன்முதலாக பிறவி எடுத்து தனது கர்ம வினையின் பயனால் மீதமிருக்கும் மேல் மற்றும் கீழ் உலகிற்கு செல்கிறான் என இந்துமத தர்மத்தில் நம்பப்படுகிறது.

தொடக்கத்தில் அண்டவெளி என்பது இருள் நிறைந்து இருந்தது, அதில் பிரபஞ்சம் என்பது வெடித்துச் சிதறல் என்ற கோட்பாட்டில் உருவானது. அதேபோல் அப்போது நிகழ்ந்த பெரும் பிரளயத்தில் நீரும் நெருப்பும் கலந்த கலவையில் கிரகங்கள் தோன்றியது என்பது விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் இரண்டிலும் மிகவும் சரியாக பொருந்திப் போகிறது. மேலும் மனிதர்களாகிய நாம் வாழும் இந்த உலகைப்போல ஈரேழு மட்டுமில்லாமல் இன்னும் சில உலகங்கள் இருப்பதும் தெள்ளத் தெளிவாகிறது. அதில் மலைகள் கடல்கள் ஆறுகள் மரங்கள் விலங்குகள் பறவைகள் மற்றும் முதல்வரியில் தேடிய அந்த பேரழகி கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.