☰ உள்ளே....

Coffee and Allah - வாழ்வின் சுவை.பெரும்பாலான புதிய உறவுகளும் நட்புகளும் ஒரு கோப்பை குளம்பியில் தொடங்குகிறது (குழம்பிக் கொள்ள வேண்டாம் காஃபி என்பதற்கு தூய தமிழில் குளம்பி). வாங்களேன் ஒரு கப் காஃபி சாப்பிடலாம் என்பதற்கு பிறகான உரையாடல் அதனைத் தொடரும் நட்பும், ஒரு வாய் காஃபியாவது சாப்பிட்டுவிட்டுதான் போகனும் என்ற அன்பான உபசரிப்பும், காஃபி குடிச்சா எல்லாம் சரியாகிவிடும் என்ற புத்துணர்ச்சியும், ஒரு கப் உள்ள போனால்தான் காலைக்கடன் கலகலகல என்பதும், இரவு காஃபி குடித்துவிட்டு படுத்தால் .... ம்ம்ம்ம்ம் என்ற நினைப்பும் அலாதியானது. அதுபோல அதிகாலை படுக்கைக்கு வரும் காஃபி மற்றும் கெஞ்சல் முத்தம் தீண்டல் ஊடல் என காமத்துப்பால் கலந்த இல்லறவியல் காஃபி, கூட குறைச்சல் இருந்தாலும் தனிமையை ஆசுவாசப்படுத்த நாமே போட்டுக்கொள்ளும் செல்பி காஃபி என காஃபியை விட காஃபி குடிக்கும் தருணங்கள் சுவையானது. அதனால்தான் கசக்குமோ இனிக்குமோ பிடிக்குமோ பிடிக்காதோ உலகின் மூன்றில் ஒருவர் தினமும் ஒரு குவளையாவது காஃபியை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (உறிஞ்சி விடுகின்றனர்).

எத்தியோபியாவிலிருந்து அகதியாய் வந்து நியுசிலாந்தில் தஞ்சம் புகுந்து தன் சகோதரிகளுடன் வசித்துவரும் இஸ்லாமிய பெண்ணான இந்த குறும்படத்தின் நாயகிக்கும் காஃபி பருகுவது பிடித்தமான ஒன்று. தன் சொந்த நாட்டின் வழக்கப்படி காஃபி கடவுளின் கிருபையால் கிடைக்கிறது என்ற மதக் கொள்கையை பின்பற்றும் அவளுக்கு, அகதியாய் புலம் பெயர்ந்ததும் புது இடத்தில் பழகுதல் என்பது சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் கடவுள் கிருபையாலும் தனது காஃபி மோகத்தாலும் அவள் புதிய நட்பையும் தன் சுற்றத்தாரின் அன்பையும் பெறுகிறாள். முதல் வரியில் குறிப்பிட்டதுபோல் அவளது புதிய உறவும் நட்பும் ஒரு புதிய உலகமும் ஒரு கோப்பை குளம்பியில் தொடங்குகிறது. 

இந்த குறும்படத்தில் பெரிதான கருத்துகள் இல்லை என்றாலும் அழகான காட்சிகளும் நாயகி அபிபாவாக நடித்த "Zahara Abbawaaaji" என்பவரின் இயல்பான நடிப்பும் ஒரு கோப்பை காஃபி பருகுவதைப்போல் இருக்கிறது. உங்களுக்கும் காஃபி பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்த குறும்படம் பிடிக்கும்.


Directed by - Sima Urale
Written by - Shuchi Kothari
Cinematography - Rewa Harre
Music - Tim Prebble
Country - New Zealand
Year - 2007
Language - English /Oromo.