☰ உள்ளே....

Dogani - The Crucible - அமைதி ...எதார்த்தங்கள், உண்மைச் சம்பவங்கள், புத்தகங்கள் இவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களே தரமான திரைப்படங்களாக மக்கள் மனதில் நிற்கும். அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஒரு திரைப்படம் வித்திட்டால் அதைவிடச் சிறந்த படைப்பு வேறெதுவும் இருக்காது. அத்தகைய தரமான படைப்புதான் இந்த கொரியன் திரைப்படம் "The Crucible". தென் கொரியாவில் உள்ள Gwangju மாகாணத்தில் 2005 -ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை "Gong-Ji-Yong" என்பவர் புத்தகமாக எழுதினார் அதனை "Hawang Dong -Hyuk" என்பவர் திரைப்படமாக எடுத்திருந்தார். இந்த இருவர்களின் உழைப்பு வெளிவந்த பிறகு பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அரசாங்கத்தையும் சட்டத்தையும் அது போட்டிருக்கும் அழுக்குச் சட்டையையும் பிடித்து உலுக்கிப் பார்த்தது. அப்படி என்ன நடந்தது? அந்த சம்பவத்தையும் அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.

நிகழ்ந்த உண்மைச் சம்பவம்.

தென் கொரியாவில் உள்ள Gwangju மாகாணத்தில் 1961 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "Gwangju Inhwa" என்ற காதுகேளாதவர் பள்ளிக்கு 2000 ஆம் ஆண்டு காங் (Kang) என்பவர் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட தன் மனைவியின் பிரிவையும் நோய்வாய்ப்பட்ட தன் குழந்தையின் கவலையையும் மறந்து, இங்கு அந்த பள்ளியில் பயிலும் பேசும் கேட்கும் திறனற்ற குழந்தைகளுடன் தன் வாழ்க்கையை கழிக்க அவர் நினைத்தார். ஆனால் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து அவர் விசித்திரமாக எதையோ உணர்ந்தார். அங்கு படிக்கும் மாணவர்களிடம் நிலவும் ஒருவித இறுக்கத்தையும் அச்சத்தையும் அவர் கண்டுபிடித்தார். இதற்கிடையில் பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவனின் மரணமும் சிறுமி ஒருத்தியின் தற்கொலை முயற்சியும் இங்கு ஏதோ தவறு நிகழ்கிறது என அவரது மனதிற்கு சுட்டிக் காட்டியது. மிகுந்த நம்பிக்கைக்கு இடையே மாணவ மாணவிகளிடம் பழகிய அவருக்கு பிறகுதான் உண்மை புரிந்தது. பள்ளியின் நிர்வாக தலைவர் முதல் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் வரை மாணவ மாணவிகளுக்கு கொடுத்துவந்த பாலியல் கொடுமைகளைப் பற்றிய அந்த உண்மை தெரிந்ததும் அவர் அதிர்ந்து போனார். என்ன நடந்தது என வெளியே தெரிவிக்க இயலாத வாய் பேச காது கேட்க முடியாத அந்த குழந்தைகளுக்காக காங் போராட நினைத்து மனித உரிமை கழகத்தை அனுகினார். மேலும் கொரியாவின் தொலைகாட்சி ஒன்றின் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் சாட்சியங்களையும் அவர் திரட்டினார். காங் தொடங்கிய அந்த உரிமை போராட்டம் குற்ற வழக்காக மாற்றப்பட்டது. காவல்துறையும் விசாரணை நடத்தி பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆறு பேரை குற்றவாளி என அறிவித்தது. சட்டம் பள்ளியின் முதல்வருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், மேலும் ஒருவருக்கு நான்காண்டுகளும், மீதமுள்ள ஆசிரியர்களுக்கு அபராதமும் விதித்து மீண்டும் அவர்களை ஆசிரியர் பணிக்கு அனுமதியும் அளித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. முறையில்லாத சட்டமும் அதிகார பலமும் பணமும் இதற்கு காரணமாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து பலமான புகார் இல்லை என சாக்குபோக்கு சொல்லி சட்டம் சாதாரண தீர்ப்பைக் கூறி இந்த வழக்கை ஒருவாறு முடித்தது. மக்களும் அதை பெரிதாக நினைக்காமல் காலப் போக்கில் மறந்து போனார்கள்.

திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்.

இந்த சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்குப் பின்பு தென்கொரியாவின் எழுத்தாளர் "Gong-Ji-Yong" அதனை ஆராய்ந்து கதையாக புத்தகமாக வெளியிட்டார். அதற்குப்பின் இரண்டு வருடங்கள் கழித்து 2011 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் "Hawang Dong -Hyuk" அதனை திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். சிறப்பான காட்சிகள், ஆசிரியர் காங்காக நடித்த "Gong Yoo" என்பவரின் நடிப்பு, தேர்ந்த இசை, வாய் பேச காது கேட்க இயலாத அந்த குழந்தைகளின் உணர்வுகள், நெஞ்சை சுடும் வசனங்கள் இவற்றோடு உண்மைச் சம்பவத்தை அந்த திரைப்படம் அப்பட்டமாக வெளிக் காட்டியது. வெளிவந்த புதிதில் தென்கொரியாவில் உள்ள 4.7 மில்லியன் மக்களை (பத்தில் ஒரு பங்கு) அது சென்றடைந்தது. வெறும் பாப்கார்னையும் கடலையையும் கொறித்துக் கொண்டு திரைப்படம் பார்த்த மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும் இந்த திரைப்படம் ஏற்படுத்தியது. மேலும் திரைப்படத்தின் உருக்கமான முடிவு நாட்டின் நிலவும் நீதியின் மீது அவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. தென் கொரியாவின் நாடளுமன்றம் வரை அதன் தாக்கம் இருந்தது. முதற்கட்டமாக 12000 பிறகு 50000 மக்கள் இணைந்து இந்த பள்ளியின் வழக்கை மறுபரிசீலனை செய்ய மனு கொடுக்க மீண்டும் இந்த வழக்கை தூசுத்தட்ட அரசாங்கம் உத்தரவிட்டது. விசாரணை சூடுபிடிக்கத் தொடங்க இந்த பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்கள் துணிந்து வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கினர். மேலும் 73 வயதான "Kim Yong" என்ற அந்த முன்னால் ஆசிரியர் ஒருவரும் பள்ளியில் நடந்த கொடுமையைப் பற்றி விளக்க அந்த பள்ளியின் ஐம்பதாண்டு கால அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிர்வாகத் தலைவர் இடைப்பட்ட வருடங்களில் இறந்து போனாலும் பள்ளியின் அமைப்பாளர் மற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தொடங்கினர். இதற்கிடையில் மக்களும் போராட்டத்தில் இறங்க குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கடும் தண்டனையும், அந்த பள்ளியை நிறந்தரமாக மூடவும் அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் தென் கொரியாவில் சிறுவர் சிறுமியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொடர்பான குற்ற சட்டத்தினையும் அரசாங்கம் மாற்றி அமைத்தது.

Trailer. 

சினிமா என்பது ஒரு கலை, அதைவிட அது மிகப்பெரிய ஊடகம். வெறும் பொழுதுபோக்கு வியாபாரம் என இல்லாமல் அதன் மூலம் ஒரு திரைப்படம் ஒரு உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது என்றால் நிச்சயம் பாராட்டத் தகும். அந்த தரமான திரைப்படத்திற்கு விமர்சனம் எதுவும் தேவையிருக்காது என்பதால் அந்த சம்பவத்தோடு இங்கு அதனை அறிமுகப்படுத்தி உள்ளேன். தவறாமல் தரிசியுங்கள்.

Dogani - The Crucible.

  • Directed by - Hawang Dong - Hyuk.
  • Music - Mowg.
  • Cinematography - Kim -Ji- Yong.
  • Based on Naval - The Crucible.
  • Written by - Gong - Ji - Yong.
  • Country - South Korea.
  • Language - Korean and Korean sign.