☰ உள்ளே....

மேடம் பவாரி.பிரெஞ்சு இலக்கியம் உலக இலக்கியத்திற்கு கொடுத்த கொடைகள் ஏராளம். இதுவரை 15 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பிரெஞ்சு இலக்கியங்கள் அதிகபட்சமாக பெற்றதே அதற்கான சாட்சியாகும். 18 ஆம் நூற்றாண்டில் Voltaire, Jean, Jacques Rousseau, Danies Diderot மற்றும்; 19 ஆம் நூற்றாண்டில் Honore De Balzac, Gustare Flaubert, Emile Zola மற்றும்; 20 ஆம் நூற்றாண்டில் Macel Proust, Jean Ganet, Louie Ferdinaud Celine போன்ற எழுத்தாளர்களும், கவிதைக்கு Victor Hugo, Arthuer Rimbaud, Lafontaine நாடகத்திற்கு Moliere, Samual Beckett, சரித்திரத்திற்கு Blaise Pascal சிந்தனைக்கு Lespenseas போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இதற்காக அரிய பணியாற்றி பிரெஞ்சு இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினர். (இவற்களைத் தவிர்த்து இன்னும் பலர் இருக்கிறார்கள்). அவர்களின் வரிசையில் 1856 ஆம் ஆண்டு "குஸ்தாவ் பிளாபெர்ட்" (Gustave Flaubert) என்பவர் எழுதிய இலக்கிய படைப்புதான் இந்த புத்தகம் "மேடம் பவாரி" (Madame Bavary).

இந்த புத்தகத்தின் களம் பிரான்ஸ் தேசம். இது எழுதப்பட்டு கிட்டத்தட்ட 160 வருடங்களை கடந்திருக்கிறது இருந்தும் எங்கும், எக்காலத்திற்குமான ஒரு பெண்ணின் ஏக்க உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறது. கட்டுப்பாடுகள், பழமை, அடிமைத்தனம் என்பதிலிருந்து பெண்கள் வெளிவந்து இன்று சுகந்திரமாக பறக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களின் கற்பனைகளும் கனவுகளும் உணர்வுகளும் இன்னமும் ஏதோவொரு மாய கம்பிகளுக்குள்ளே சிறைபட்டுதான் கிடக்கிறது. சிறைபட்ட அவைகள் தனிமையாய் வெறுமையாய் நீருக்குள் மூழ்கும் காகித கப்பலை வேடிக்கை பார்க்கும் குழந்தைத்தனத்தைப் போல காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது. நவீனமயமாகிவிட்ட இன்றைய வாழ்கையில் காட்சிப்பிழைகளிலும், நுகர்வு கலாச்சாரத்திலும், பாலியல் வேட்கையிலும் எதோ ஒருவிதத்தில் அந்த தனிமையையும் வெறுமையையும் ஒரு பெண் தொலைக்க முற்பட்டால் கூட அதுவும் சலிப்பான சூன்யத்திலே முடிந்து விடுகிறது. இந்த நாவலின் நாயகி எம்மாவின் கதையும் அத்தகையதே.

சிறுவயது முதல் பியானோ வாசிப்பது, இயற்கையை ரசிப்பது, அழகிய வேலைப்பாடுகளில் ஈடுபடுவது என ரசனையோடு வாழும் எம்மாவிற்கு கதைகளையும் கவிதைகளையும் வாசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த கதைகளில் வரும் நாயகனைப் போல சாகசம் நிறைந்தவன் ஒருவனே தனக்கு கணவனாக காதலாக வரவேண்டும் என அவள் நினைத்திருந்தாள். ஆனால் டாக்டர் சார்லஸ் என்பவருக்கு அவள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைத் துணையானது துரதிஸ்ட வசமாகிப்போனது. திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றபின் சிறிது காலத்திலேயே வாழ்க்கை சலிப்புத்தட்ட அவளது கற்பனைகளும் கனவுகளும் பொய்க்கத் தொடங்கியது. இதற்கிடையில் தற்செயலாக அவள் சந்தித்த லியோன் என்பவன் அவளது வாழ்க்கையை, நினைவுகளை திசைதிருப்ப அவன் மீது எம்மா காதலில் விழத் தொடங்குகிறாள். ஓரளவிற்கு வாழ்க்கையின் ஆறுதலாக கிடைத்த லியோனும் அவளை விட்டு விளகிச் செல்ல தனிமை துரத்த ஓடுகிறாள். புத்தகம் வாசிப்பது, தையல், தோட்ட வேலை, பிரார்த்தனை என தன் மனதை திசைத் திருப்புகிறாள். அதுவும் சில காலத்திற்குமேல் தொடர முடியாமல் போக, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவள் மீது ரூடால்ப் பௌலங்கர் என்பவன் மோகம் கொள்கிறான். ரூடால்பின் பேச்சு செயல் தந்திரம் இவற்றில் மயங்கி அவனுடன் நட்பைத் தொடரும் எம்மா உலக நாகரிகத்தோடு ஆடம்பர வாழ்க்கையை தன் மனதிற்கு பிடித்த வாழ்வு என வாழ்கிறாள். ஆணாதிக்க ஆசை தீர்ந்து ரூடால்ப்பும் அவளை விட்டு விலகியதும் தனிமை ஏக்கம் கனவு கடன் என தவிக்கும் அவள் தனது கற்பனையும் காதலும் பொய்யென அறிந்து எதார்த்தத்தை உணர்கிறாள். அனைத்தும் கேலியாகிப் போனபின் கடைசியில் அந்த துயர முடிவையும் எடுக்கிறாள். அவளோடு அவள் கனவுகளும், கற்பனைகளும், உணர்வுகளும், காதலும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது.


மேடம் பவாரி என்ற இந்த நாவலை எழுத குஸ்தாவ் பிளாபெர்ட் ஐந்தாண்டு காலம் எடுத்துக் கொண்டார். புத்தகம் வெளிவந்த புதிதில் கள்ளக்காதலின் சரியான விளக்கம் என பலரால் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் சில கலாச்சார காவல் அய்யனார்கள் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர். பிறகு வழக்கு விசாரணை கைது நிரபராதி என அவர் விடுவிக்கப்பட்டு இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தை அமைத்துக் கொண்டு கடைசியில் வறுமையுடன் இறந்து போனார். பிறகு வந்த காலங்களில் இந்த புத்தகம் உண்மையை உறக்கச் சொல்ல எதுவும் தடையில்லை என இலக்கிய உலகத்தால் போற்றப்பட்டது. மேலும் அவரது தன்மையான எழுத்து நடை பலரால் பின்பற்றப்பட்டது. இதுவரை இந்த புத்தகத்தை தழுவி பல நாடகங்களும் திரைப்படங்களும்    வெளிவந்துள்ளன. அதில் 1934 ஆம் ஆண்டு 1949 மற்றும் 1991 ஆண்டு வெளிவந்த திரைப்படமும், சமீபத்தில் 2014 ஆம் ஆண்டு Sophie Barthes இயக்கத்தில் ஆஸ்திரேலியா நடிகை Mia Wasikowska நடிப்பில் வெளிவந்த திரைப்படமும் குறிப்பிடத்தக்கது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த புத்தகம் பிரெஞ்சு இலக்கியம் மட்டுமில்லாமல் உலக இலக்கியத்திலும் தனக்கான தனி இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அத்தகைய சிறப்புமிக்க இந்த கிளாசிக் நாவலை தவறாமல் வாசியுங்கள்.

Madame Bovary Movie Trailer (2014).