பாணர்கள்.


"வாழ்க்கை கர்மவினையின் சுழற்சியாக கருதப்பட்டாலும் கொண்டாட்டங்களால் நிறைந்தது". ஆடல், பாடல், இசை, நாடகம் போன்ற கலைகளால் சங்ககாலம் முதல் இன்றுவரை அந்த கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் அந்த கலைகளும் கொண்டாட்டங்களும் வேறொரு பரிணாமத்தில் நம் வீடுதேடி வரவேற்பறைக்கே வருகிறது. அவற்றிற்கெல்லாம் சங்க காலத்தில் வாழ்ந்தவர்களே அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவ்வாறு சங்க காலத்தில் பாடல்களைப் பாடி இசைக்கருவிகளை வாசித்து அதற்கு தகுந்தார்போல் நடனமாடி மக்களை மகிழ்வித்து கலைகளை வளர்த்தவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர், அவர்களின் பெண்பால் பாடினிகள். ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இவர்களைப் பற்றி அழகாக குறிப்பிட்டுள்ளார்.

இசையுடன் பண்ணப்படுவது பண்.
பண்ணிசையுடன் பாடுபவர் பாணர்.
பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்.
பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.
கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.

சுருக்கமாகச் சொன்னால் இவர்கள், அன்றைய கால சூப்பர் சிங்கர் மானாட மயிலாட அசத்தப்போவது யாரு சூப்பர் ஜோடி கோஸ்டிகள்.

பாணர்களுக்கு தனி இடம், ஊர், நாடு என எதுவும் கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதுதான் அவர்களின் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஊர் ஊராகச் சென்று இயற்கையையும் கடவுளையும் மன்னனையும் நாட்டையும் பற்றி பாடியாடி மக்களை கவர்ந்து பரிசு பெற்று அவர்கள் ஜீவன் நடத்தி வந்தனர். சிலர் ஒற்றர்களாகவும் தூதுவர்களாகவும் நாட்டிற்காக வாழ்க்கையை அற்பணித்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பாணர்களில் இசைப் பாணர்கள், யாழ் பாணர்கள், மண்டைப் பாணர்கள் என மூன்று வகையினர் உண்டு. சீறியாழ், பேரியாழ் என அழைக்கப்படும் யாழ் (Oldest verson in Guitar) வாசிப்பில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். பாணர்களுக்கென்று தனி சமுதாயமும் அதில் சில பிரிவுகளும் நெறியோடு அமைந்த வாழ்க்கை முறையும் இருந்திருக்கிறது.

சங்க இலக்கியமும் தமிழகமும் பாணர்களுக்கு தனி இடத்தை கொடுத்திருக்கின்றன. பத்துப்பாட்டு நூல்களான சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை எனும் இலக்கியங்களே இதற்குச் சான்றாகும். மேலும் புறநானூறு, அகநானூறு போன்றவற்றில் கூட பாணன் கூற்று என பல பாடல்கள் வருவது குறிப்பிடத்தக்கது. பக்தி இலக்கியங்களின்படி அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்பாணர் மற்றும் பன்னிறு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் போன்றவர்கள் பக்திக்கும் தமிழுக்கும் தொண்டு செய்திருக்கின்றனர். கர்நாடக சங்கீதம் மற்றும் பரதம் ஏன்! தற்போது ரசிக்கும் அனைத்து கூத்திற்கும் பாணர்களே முன்னோடியாக இருந்தனர்.

முகலாய ஆட்சிக்குப்பின் பாணர்களும் பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்து தொலையத் தொடங்கினர். கலையோடு பின்னிப் பிணைந்த அவர்களது வாழ்க்கை காலப்போக்கில் கோவில்களுக்கு தொண்டு செய்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பிறகு அவர்களது தொழில் கூலித் தொழிலுக்காக மாறியது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி சென்னை, செங்கோட்டை, நாகர்கோவில் போன்ற தற்போதைய பகுதிகளில் அவர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் இருக்கின்றன. நம்மிடம் இருக்கும் 947 ஜாதிப் பிரிவுகளில் பாணான், மேஸ்த்திரி, தையல்காரர்பிள்ளை மற்றும் பாண்டிய வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் பாணர்களின் வழித் தோன்றலாக இன்றும் தம் அடையாளங்களை மறந்து வாழ்ந்து வருகின்றனர்.

  • சங்க இலக்கியம் - புறநானூறு
  • பாடல் - 302
  • பாடியவர் - வெறிபாடிய காமக்காணியார்
  • திணை - தும்பைத் திணை

அத்தகைய சிறப்பு வாய்ந்த பாணர்களின் சமூகத்தைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. அதில் புறநானூற்றில் இடம்பெற்ற இந்த பாடல் வீரன் ஒருவனின் பெருமையைப் பற்றி கூறினாலும் சங்கத் தமிழகத்தில் வாழ்ந்த பாணர்களின் வாழ்வு நிலையை நமக்கு அழகாக தெரிவிக்கிறது.

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஓங்கிய,
நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
வின்னவர் விசும்பின் மீனும்,
தண்பெயல் உறையும், உறையாற் றாவே.

பொருள்.

வளைந்த மூங்கில் விடுபட்டதும் அது கிளர்ந்து எழுவதுபோல குதிரைகள் தாவி ஓடித் திரிந்தன. மின்னும் அணிகலன்களை அணிந்த விறலியரின் (பாடினி) கூந்தலில் நாரத்தம் பூவால் பல அடுக்குகளாக தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்டிருக்கிறது. அந்த கூந்தலில் பொன்னாலான பூக்களும் இடம் பெற்றன. மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்கு குறுகிய வழிகளுடைய சாகுபடி நிலங்கள் நிறைந்த சிற்றூர்கள் வழங்கப்பட்டன. தன்னைப் பகைத்து பார்த்த பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு தன் வேலால் கொன்ற யானைகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால் மேகங்கள் பரந்து உலாவும் ஆகாயத்திலுள்ள விண்மீன்களும் குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றை அளவிட ஆகாது.