ஹெட்டி - ஒரு நாடோடியின் கதை பகுதி - 6.



(சாப்ளின் தனது முதல் காதலையும் காதலியின் நினைவுகளையும் அசைபோட்டபடி பல வருடங்களுக்குப் பிறகு அவளை மீண்டும் காணப்போவதை நினைத்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கப்பலில் லண்டனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முந்தைய பதிவின் தொடர்ச்சி).

இளம்வயது கனவுகளோடு இருந்த சாப்ளினுக்கு தினசரி பழகும் ப்ரெட் கார்னோ குழுவின் மம்மிங் பேர்ட் என்ற நாடக ஒத்திகை சலிப்புத் தட்டியது, சரி கொஞ்ச நேரம் உலாத்துவோம் என லண்டனின் புகழ்பெற்ற எம்பையர் விடுதியின் வராண்டாவில் சுற்றிக் கொண்டிருந்தார். அதே விடுதியில் மற்றொரு பகுதியிலுந்து பெண்கள் பாலே நடனமாடும் சப்தம் கேட்க சாப்ளின் அங்கு நுழைந்தார். வெள்ளை உடையில் பளிங்குபோன்ற தரையில் அவர்கள் பூப்போல மிதக்க அந்த பெண்களின் ஒய்யாரத்தை சாப்ளின் மறைவாக நின்று ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களின் ஒத்திகை முடிந்து ஒவ்வொருவராக கலைந்து செல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாப்ளின் அங்கிருந்து எவ்வாறு வெயியேறுவது எனத் தெரியாமல் தவறுதலாக பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்றார். 'யாரது இங்கு என்ன செய்கிறாய்?' என மிரட்டிய குரல் கேட்டு திரும்பிய அவரது கையில் அந்த குரலுக்கு சொந்தக்காரி முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றை தினித்தாள். 'ஒரு நிமிசம் பிடிச்சிக்கோ' என புருவத்தை சற்று உயர்த்தி, கண்களை பலமுறை சிமிட்டி, கூந்தலை சரிசெய்து, உதட்டுச் சாயத்தை துடைத்துவிட்டு, தன்னை ஒருவாறு ஒழுங்கு படுத்திக் கொண்டு அங்கிருந்து சிறிது தூரம் நகர்ந்தாள். சற்று நகர்ந்து நின்று நிதானித்து சாப்ளின் நிற்கும் பக்கம் திரும்பிப் பார்த்து தன் ஓரப் பார்வையையும் அவர்மீது வீசிவிட்டுச் சென்றாள். ஒரு சில நிமிடம் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் சாப்ளின் உறைந்து நின்றார்.


யார் அவள்! ஒரு தேவதை போல, அந்த கண்கள், அந்த உதடுகள், அந்த கூந்தல், அந்த வளைவு, அந்த நெளிவு, அந்த மொத்தம் என சாப்ளினால் இருப்புக் கொள்ள முடியவில்லை. முதல் பார்வையில் அணுவரை சிதைத்த அவள் அன்று முழுவதும் பூனைக்குட்டிபோல் அவரது மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாள். பொல்லாத இரவும் வந்தது தங்கியிருந்த விடுதியில் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயான மல்யுத்தப் போட்டியில் சாப்ளீனால் நடுவராக இருக்க நேர்ந்தது. அடுத்தநாள், அதே இடம், அதே ஒத்திகை, அதே நடனம், அதே அவள் இந்தமுறை சாப்ளினைப் பார்த்து இதழ் பூ விரிக்க இளம் வயதில் எல்லோருக்கும் பீடிக்கும் நோயின் தொற்று அவருக்கு தென்பட்டது.

தந்தை இல்லை, தாய் மனநல காப்பகத்தில் இருக்கிறாள், அண்ணன் என்ற ஒரு உறவுக்கும் மனைவி என்ற புதிய உறவு கிடைக்க சாப்ளின் அப்போது யாருமற்ற அநாதையாக இருந்தார். கனவுகளுக்கு தீனிபோட அவ்வபோது நடைபெறும் நாடகமும் அதற்கான ஒத்திகையும் இருக்க, வயிற்றுக்காக சில எடுபிடி வேலைகளை பார்த்துக்கொண்டு லண்டன் தெருக்களில் உள்ள தினசரி விடுதிகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஏதோ வாழ்க்கை வண்டி ஒருபக்கம் ஓட "ஹெட்டி" என்ற பதினைந்து வயது பருவ மங்கை புதிதாக அதில் ஏறியிருந்தாள். ஹெட்டியின் பார்வையும், அந்த புன்னகையும் அவற்றிற்காக அவளைக் காணும் தருணங்களும் சாப்ளினுக்கு ஆறுதலாகக் கிடைத்திருந்தது. தனக்கென தலைசாய ஒரு மடியும், மடி சாய்ந்ததும் முடிகோதும் விரல்களும் கிடைக்கப் பெற்றதாக அவர் உணர்ந்தார்.

ஒரு வீரன் கோழையாகிறான்
ஒரு கோழை வீரனாகிறான்
- காதல் போர்க்களத்தில்.

ஒருநாள் சாப்ளின் ஒட்டுமொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு ஹெட்டியின் முன் தயக்கத்துடன் நின்றார். இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை என்னுடன் சிறிதுநேரம் செலவு செய்வாயா? என அவர் வாய் திறக்க, அவளும் கொஞ்சம் யோசித்து உதட்டை சுழித்து ம்...சம்மத...ம் என தெரிவித்தாள். உடனே சாப்ளினுக்கு தலை கால் புரியாமல் போனது. அந்த நிமிடத்திலிருந்து வரப்போகும் ஞாயிற்றுக்கிழமையை துரத்த ஆரம்பித்தார். அந்த ஞாயிறும் வர தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த உடையை உடுத்திக்கொண்டு வைத்திருக்கும் சிறிது பணத்துடன் ஹெட்டிக்காக சாப்ளின் காத்திருந்தார். ஹெட்டியும் தேவைதைப்போல் அங்கு வர இருவரும் லண்டனில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு நாடகம் நடனம் என பேசிக்கொண்டே வீதிகளில் பட்டாம்பூச்சியைப் போல சுற்றினர். அந்த நாள் வாழ்வின் இனிமையானதாகக் கழிய இருவரும் பிரியும் தருணத்தில் சாப்ளின் மனம் திறந்து 'என்னை திருமணம் செய்துகொள்வாயா' என வெளிப்படையாக தன் காதலை ஹெட்டிக்கு அறிவித்தார்.

அவன் ஒரு 19 வயது இளைஞன், நாடகத்தில் நன்றாகவே நடிக்கிறான், எல்லோரும் அவனது நடிப்பைப்பற்றி பேசுகிறார்கள், அவன் தினமும் எனக்காக காத்திருக்கிறான், புன்னகைக்கிறான், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையை அவனுடன் ஊர்சுற்றி செலவழித்து முடிந்தது அவ்வளவுதான் ஹெட்டியின் மனதில் இருந்தது. சாப்ளினை திருமணம் செய்துகொள்ளுமளவு காதலும் அதற்கான வயதும் அவளிடம் இல்லை. அதனால் சாப்ளினின் காதலை அவள் ஏற்க மறுத்தாள். நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா என அவர் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் சாரட் வண்டியில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள். அடுத்தநாள், அடுத்தடுத்தநாள் சாப்ளினை பார்பதை ஹெட்டி தவிர்த்தாள். சாப்ளினுக்கும் ஹெட்டியின் அந்தப் பார்வை கிடைப்பதும் அரிதாகிப்போனது. அவள் தம்மை காதலிக்கிறாளா? என தெரிந்துகொள்ள முற்பட்டபோது சாப்ளினுக்கு உதாசீனமே மிஞ்சியது.

"உலகிலேயே கொடிய நோய் உதாசீனம்தான்! வாழ்க்கையின் சில மோசமான தருணங்களில் கீழான நிலைக்கு செல்லும்போது நம் இதயம் நாம் மிகவும் நேசிக்கும் உறவுகளைத் தேடித்தான் ஓடும். ஆனால் அந்த சமயத்தில் அந்த உறவுகளே நம்மை உதாசீனப்படுத்தும் போது, உள்ளுக்குள் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது". அதே வலிதான் சாப்ளினிடம் இருந்தது. அவள் ஏன் என்னை வெறுக்கிறாள்? ஒருவேளை தன்னைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பாளோ? இதற்கு தடையாக என்ன இருக்கிறது? அந்தஸ்தா? பணமா? பேரா? புகழா? என ஆயிரம் கேள்விகளை சாப்ளின் மனதிற்குள் கேட்டுக்கொண்டார். "ஒரு பெண் சர்வ ஜாக்கிரதையாக தன் வாழ்க்கைத் துணையை தேர்தெடுத்துக் கொள்கிறாள்" என்ற அறிவியல் உண்மையை சாப்ளின் அப்போது தெரிந்திருக்க வில்லை.

நாட்கள் கடந்து வருடங்கள் உருண்டோடியது. சாப்ளின் நாடகங்களில் ஜொலித்து அமேரிக்கா வந்து சினிமாவில் நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினாலும் ஹெட்டியின் நினைவால் அவர் பலநாட்கள் துன்பப் பட்டிருக்கிறார். தன்னை உதாசீனப் படுத்தியவள் என்ற போதும் அவள் பார்வை கிடைக்க தவித்திருக்கிறார். பதினோறு வருடங்கள் கழிந்த பின்பும் தம் வாழ்க்கையில் ஏதேதோ நடந்த பின்பும் அந்த ஹெட்டியைப் பற்றி தகவலை தெரிந்து கொண்டு தனது லண்டன் பயணத்தில் அவள் எப்படி இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் ஒருமுறையாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் லண்டன் துறைமுகத்தில் வந்து இறங்கினார்.
லண்டன் அவரை வரவேற்க உற்சாகமாக காத்திருந்தது. துறைமுகத்தில் இறங்கிய சாப்ளின் லண்டன் நகருக்கு அங்கிருந்து ரயிலில் புறப்பட்டார். அவருக்காக ஒதுக்கப்பட்ட தனி பெட்டியில் அந்த ரயில் பயணத்திலும் அவர் சிலரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். நகரம் நெருங்கும் வேளையில் லண்டனில் வசிக்கும் நண்பர் ஒருவர் ஆர்தர் என்பவரை சாப்ளினுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த ஆர்த்தர் ஹெட்டியின் சகோதரன் என தெரிந்தபோது அவர் மகிழ்ச்சியில் திழைத்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு சிறிது நேரம்கூட வாய்க்கவில்லை. ஹெட்டி எங்கு இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என தெரிந்துகொள்ள முற்பட்டபோது , ஹெட்டி இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது என்ற செய்தி அவர் இதயத்தில் பேரிடியாக விழுந்தது.

இந்த லண்டன் இப்படித்தான் தன்னை அழ வைத்தே பழகியிருக்கிறது என சாப்ளினுக்கு வாய்விட்டு அழ வேண்டும் போல் தோன்றியது. தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து ரயில் பெட்டியின் படிக்கட்டிற்கு வந்தர். லண்டர் நகரம் நெருங்க நெருங்க ரயில்வே ஸ்டேசன் முழுவதும் அவரைக் காண ரசிகர்கள் சாப்ளின் சாப்ளின் என கத்திக்கொண்டே குவிந்திருந்தனர். ரயில் வண்டியும் மெல்ல அசைந்து நிற்க அதிலிருந்து இறங்கிய சாப்ளின் தன் வலிகளை மறைத்து புன்னகையை கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு ரசிகர்களைத் தாண்டி கையசைத்தபடியே முன்னோறிக் கொண்டிருந்தார். ஆனாலும்

Although I had met her but five times, and Scarcely any of our meetings had lasted longer than twenty minute's, that brief encounter affected for a long time.

என ஹெட்டியும் நினைவும் முதல் காதலும் தள்ளாத வயதிலும் அவரது மனதில் ஆறாத காயமாய் இருந்தது.

துணுக்குச் செய்தி.. 

ஹெட்டி 1893 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். Bert Coutts என்ற அமைப்பின் Yankee Doodle Girls Trop என்ற நடனக் குழுவில் அவள் இருந்த போது 1908 ஆம் ஆண்டு சாப்ளினை சந்தித்தாள். சாப்ளின் காதலை ஏற்க மறுத்த அவள் ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினாள். 1918 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிந்த தருணம் லண்டன் முழுவதும் புளூ காய்ச்சல் தீவிரமாக பரவி பலரை காவு வாங்கியது. துரதிஷ்டமாக ஹெட்டியும் அதற்கு பலியானாள். ஹெட்டிக்கு Edith Kelly என்ற சகோதரியும் Aurthur என்ற சகோதரனும் உண்டு. இந்த ஆர்தர் என்பவரைத்தான் சாப்ளின் லண்டனில் சந்தித்து ஹெட்டி இறந்ததைப் பற்றி தெரிந்து கொண்டார். ஹெட்டிமீது தான் வைத்திருந்த காதலுக்காகவும் மரியாதைக்காகவும் சாப்ளின் அவளது சகோதரனான ஆர்தரை தனது சொந்த சினிமா தயாருரிப்பு நிறுவனமான யுனைட்டட் ஆர்டிஸ்டில் மேலாளராக பதவி கொடுத்து கூடவே வைத்திருந்தார்.

சாப்ளினின் திரைப்பட வரிசையில் அடுத்து.

33. Tillie's Punctured Romance (1914).


34. Getting Acquainted (1914).


35. His Prehistoric Past (1914).




36. His New Job (1915).




37. A Night Out (1915).



38. The champion (1915).