☰ உள்ளே....

ஜுராசிக் பார்க், தி மம்மி, கிங்காங் (டிரைலர் டைம்).அதிரடியாக நுழைந்து, சந்தையில் மாமுல் வாங்கும் லுங்கி கட்டிய ரவுடிகளை துவைத்தெடுத்து, அங்கிருக்கும் சட்டி பானை அண்டா குண்டா தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் உடைத்து சந்தையையே நாசமாக்கி (அதற்கு பதிலாக மாமூலே கொடுத்திருக்கலாம்), வில்லனை பகைத்துக்கொண்டு, மாடர்ன்டிரஸ் போட்டிருக்கும் அவர் மகளையே டாவடித்து, கட்டிப் புரண்டு முத்தம் கொடுத்து மலையைச் சுற்றி டூயட் பாடி, கடத்திக்கொண்டுபோன அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாற்றி, வில்லனை பழிவாங்கி, கடைசியில் முதலிரவு அறையில் விளக்கை அணைத்து சுபம் போடும் வழக்கமான தொன்னூறுகளின் சினிமாவிற்கு மத்தியில் ஹாலிவுட் திரைப்படங்கள் உச்சரிப்பு பிழையின்றி தமிழில் அழகாக பேசத் தொடங்கின. கற்பனைக்கெட்டாத கதைகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், ஆச்சரியமூட்டும் கிராபிக்ஸ், அதிசயமூட்டும் கதாபாத்திரங்கள், வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என அவ்வாறு வெளிவந்த திரைப்படங்களில் "ஜுராசிக் பார்க், தி மம்மி, கிங்காங்" என்ற மூன்றையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

ஜுராசிக் பார்க் (Jurassic Park).


60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமி முழுவதும் வாழ்ந்த உயிரினங்கள் இவை, அதற்கு பெயர் டைனோசார், அவற்றுள் இத்தனை வகைகள் உள்ளது, அது இவ்வாறு பிறந்தது, இப்படித்தான் நடக்கும், இதைத்தான் சாப்பிடும், இங்குதான் தூங்கும் என உலகின் கடைக்கோடி மூலையில் இருக்கும் சாமானியனுக்கும் உலகின் ஆச்சரியத்தை காட்டிய பெருமை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை சேரும். பல வருடங்களாக பதப்படுத்தப்பட்ட கொசுவிலிருந்து டிஎன்ஏவை எடுத்து அழிந்த ஒரு உயிரினத்தை உருவாக்கி அதற்கென ஒரு தனி இடத்தை அமைத்து மனித தவறை சுட்டிக்காட்டி இயற்கைக்கு முன்பு எதுவும் இல்லை என்ற செய்தியை அழகாகக் சொன்ன "Michael Crichton" என்பவரின் நாவலைத் தழுவி ஸ்பீல்பெர்க் எடுத்த ஜுராசிக் பார்க் திரைப்படம் உலக சினிமாவின் உச்சம் தொட்டவை. அதன் வரிசையில் ஐந்தாம் பாகத்தை (Jurassic Word II ) அவர் மீண்டும் தொடங்கியிருக்கிறார். முந்தையை பாகங்களில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களான Sam Neill, Laura Dern, Jeff Goldblum, Richerd Attenborough, Jullianne Moore மற்றும் Chris Pratt, Bryce Dallas Howard போன்றவர்களை மீண்டும் திரைக்கு கொண்டுவந்திருக்கிறார். அவர்களுடன் நவீன தொழில்நுட்பத்தில் Tyrannosaurus, Velociraptor, Spinosasaurus, Mosasaurus, Ankylosaurs என்ற ஐந்து வகை டைனோசார்களும் இணைந்து 2018 -ல் நம்மை மிரட்ட தயாராகிக் கொண்டிருக்கிறது.

தி மம்மி (The Mummy).


உலக அதிசயம் என்பதைவிட உலக ரகசியம் என சொல்வதே சிறந்தது. 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எகிப்தில் உள்ள பிரமிடுகளை ஆராய்ச்சியாளர் ஹவார்ட் கார்ட்டர் (Haward Carter) என்பவர் தோண்டித் துருவிக் கொண்டிருந்தார். பாலைவன மணலில் புதைந்த ஒரு பிரமிடை அவர் கண்டுபிடித்த போது அதில் உடைந்த நிலையில் ஒரு கதவு தென்பட்டது. கார்ட்டர் அந்த பிரமிடின் கதவிற்குள் இறங்கிச் சென்றபோது அந்த இடம் முழுவதும் தங்கத்தால் மின்னியது. விலையுயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்கள் முதல் தட்டு கூஜா குவளை கரண்டி மற்றும் நாற்காலி வரை தங்கமாக அவருக்கு கிடைத்தது. அவர் மேலும் ஆழமாகச் செல்ல தங்கத்தால் ஆன சவப்பெட்டி ஒன்று கிடைத்தது அந்தப் பெட்டியை அவர் திறக்க அதற்குள் ஒரு சவப்பெட்டி இருந்தது அதனையும் திறக்க அதற்குள் ஒரு பெட்டி காணப்பட்டது. பொருமையிழந்த கார்ட்டர் அதனை உடைக்க கி.மு. 1350 ஆம் ஆண்டு இறந்த எகிப்தின் மன்னன் ட்யூடன்கமென் (Tutankhamun) என்பவனின் தங்க முகமுடி அணிந்த பதப்படுத்த உடல் கிடைத்து. அதன்பிறகுதான் மம்மி என்றால் என்ன? பிரமிடுகளில் என்ன இருக்கிறது என்ற ரகசியம் உலகிற்கு தெரிந்தது. அந்த காலத்தில் எகிப்தில் வாழ்ந்த மன்னர்கள் கடவுளாக கருதப்பட்டனர். அவர்கள் இறந்த பிறகு அவர்கள் ஆன்மா வாழும் என நம்பினர். ஆன்மாவும் அஜால் குஜாலாக இருக்க மன்னன் இறந்ததும் அதற்கு தேவைப்படுமே என்று மன்னனின் உடமைகளையும் (மனைவி மற்றும் ஆசை நாயகிகளைத் தவிர்த்து) அவனோடு சேர்த்து புதைத்து பிரமிடுகளை எழுப்பினர். கார்டர் உடைத்தது ஒரு சிறிய பிரமிடுதான் என்றாலும் எகிப்தின் மற்ற பிரமிடுகளில் என்ன இருக்கிறது? யார் மம்மியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. பிரமிடுக்குள் என்ன உள்ளது என்பது பல வருடங்களாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது அதற்காக பல கதைகள் சொல்லப்பட்டும் வந்திருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்ட கதைகளை தொகுத்தால் அதுவும் ஒரு மிரமிடு அளவிற்கு இருக்கும் என்பதே உண்மை. அந்த கதைகளை தூசுத்தட்டி 1999-ல் வெளிவந்த திரைப்படம்தான் தி மம்மி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைப்பில் வெளிவந்த மம்மி திரைப்படம் பிரமிடுகளையும் அதன் ரகசியங்களையும் அந்த கதைகளின் வழியே நமக்கு வெகு அருகில் காட்டியது. அதனைத் தொடர்ந்து மம்மியின் நான்காவது பாகம் ரகசியங்களுக்கு இன்னும் சற்று அருகில் நம்மை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது.

கிங் காங் (King Kong).


குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் சொன்னபோது அதை ஏற்றுக்கொள்ளாத மனித ம(இ)னம். பிறகு தாம் செய்யும் சேட்டைகளை தாமே உணர்ந்துகொண்டபோது ஆமாம் உண்மைதான் என ஒப்புக்கொண்டது. குரங்கிலிருந்து நாம் வந்தோம் என்றால் முதல் குரங்கு எப்படி சிந்தித்திருக்கும் குரங்கு சிந்தித்தால் என்னவாகும்? அதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் எக்கச்சக்கம் அதில் குறிப்பிடத் தகுந்தது கிங்காங். கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் 1933 ஆம் ஆண்டு "Edgar Wallance" மற்றும் "Merian C. Cooper" இருவர் இணைந்து கற்பனையாக கிங்காங் கதையை உருவாக்கினர். ஸ்கல் ஐலேண்ட் (Skull Island) என்ற தீவில் வசிக்கும் கிங்காங் என்ற குரங்கிற்கும் ஆனி (Ann Darrow) என்ற பெண்ணிற்கும் இடையேயான அன்பே படத்தின் கதை. தொழில்நுட்பம் வளர்ச்சியில்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பிறகு வந்த காலங்களில் பலமுறை ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் 2005 ஆம் ஆண்டு நவோமி வாட்ஸின் அழகான நடிப்பில் (இவ்ளோ அழகா இருந்தா எல்லா குரங்கும் விரும்பும்) வெளிவந்த கிங்காங் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த கதையைத் தழுவி Queen Kong, Son of Kong, King Kong live, King Kong vs Godzilla, King Kong Escaps என பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் அதே கதையைத் தழுவி இன்னும் பிரம்மாண்டமாக கிங்காங் "Kong Skul Island" என நம்மை கவர மார்ச் 10 2017 -ல் அருகில் காத்திருக்கிறது.