அரச பாரம்.




தொன்னூற்று இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி விளையாட்டு, விளையாட்டின் முடிவில் ஒரு மரணம், அதனைத் தொடர்ந்து யார் நாற்காலியில் அமர்வது என்ற போராட்டம், இதற்கிடையில் அவர் வருவார், இவர் வருவார், அதுதான் நடக்கும், இதுதான் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கையில் ஏதேதோ நடந்து, எவரோ ஒருவர் அரியணையில் அமர்ந்து, என்னமோ போடா ஆட்சி தற்போது நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசாட்சி நடத்துபவர் தன் ஆட்சிக் காலத்தில் இறந்துவிட்டால் அவருக்கு பதிலாக வேறொருவர் அரியணையில் அமரும் போது ஏற்படும் இந்த குழப்பங்கள் நமக்கு புதிதாக இருந்தாலும் சங்க காலத்திலிருந்து நடந்து வந்திருக்கிறது. மன்னன் இறந்துவிட்டால் அவனது வாரிசுகளில் மூத்தவனா, இளையவனா அல்லது ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட மகன்களில் (அரசன் என்றால் சொந்தப்புரம் அந்தப்புரம் என இருக்குமே) யார்? ஆட்சிக்கு வந்தால் நாடு செழிக்கும் என்ற கவலை அப்போது அரச பாரமாக இருந்து வந்தது.

இந்த அரச பாரம் என்பதைப் பற்றிய கவலையும் சந்தேகமும் சங்க காலத்தில் வாழ்ந்த சோழ மன்னன் "நலங்கிள்ளி" என்பவனுக்கு வந்தது. உடனே தன் நாட்டில் உள்ள அறிஞர்களை கூப்பிட்டு இதைப்பற்றி விவாதிக்க ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தான். சூடான வடை டீயுடன் அறிஞர்கள் மீட்டிங்கில் ஆஜராக அதற்குமுன் மிஸ்டர் நலங்கிள்ளியைப் பற்றி பார்த்துவிடலாம்.



சோழ மன்னர்களில் புகழ்பெற்ற கரிகால் வளவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவனின் பெயர் மணக்கிள்ளி மற்றொருவன் பெயர் வேற்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளி (அவசரத்திற்கு கூப்பிடுவது கஷ்டம்தான்). கரிகால் வளவன் ஆண்ட சோழநாடு அப்போது பரந்து விரிந்திருந்தது. அவன் மறைவிற்கு பிறகு இரண்டு மகன்களும் நாட்டை சண்டையில்லாமல் சரிசமமாக பிரித்துக் கொண்டார்கள். அவரது மகன்களில் மணக்கிள்ளி உறையூரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். மற்றொரு மகன் வேற்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளி பூம்புகாரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தான். நாட்டின் இருபகுதி மக்களும் ஷேமமாக வாழ்ந்தனர். மணக்கிள்ளிக்கு பிறகு அவரது மகன் நலங்கிள்ளி என்பவன் பட்டத்திற்கு வந்தான். வேற்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளிக்கு பிறகு அவரது மகன் நெடுங்கிள்ளி பட்டத்திற்கு வந்தான். அப்போதுதான் சோழ நாட்டில் உள்நாட்டு பிரச்சனை தலைதூக்கியது. இவர்கள் இருவரும் தம் தந்தைகளைப் போல் அல்லாமல் ஒருவரை ஒருவர் முட்டிக் கொண்டனர் (பங்காளியாச்சே). இறுதியில் நலங்கிள்ளி போரில் வென்று நெடுங்கிள்ளியை கொன்று ஒன்றுபட்ட சோழநாட்டை அண்டு வந்தான். பாண்டிய நாட்டில் உள்ள ஏழு அரண்களை அழித்து அங்கு புலிக் கொடியை பறக்கவிட்ட இந்த நலங்கிள்ளி சிறந்த படைவலிமை மிக்கவனாக விளங்கினான். அவனது வீரத்தை கண்டு 'எப்போது நம் நாட்டின்மீது படையெடுத்து வருவானோ படுபாவி' என பக்கத்து நாட்டு அரசர்கள் அஞ்சி நடுங்கினர். அதுமட்டுமல்லாது நலங்கிள்ளி கொடையில் சிறந்தவனாகவும், நல்லாட்சி புரிபவனாகவும், தமிழ் புலமை மிக்கவனாகவும் திகழ்ந்தான். அவன் இயற்றிய பாடல்கள் இரண்டு புறாநானூற்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த நலங்கிள்ளிதான் அரச பாரத்தைப் பற்றிய சந்தேகத்தை போக்க அறிஞர்களை அழைத்து மீட்டிங் போட்டு வடை டீ கொடுத்து அமர வைத்திருந்தான். இறுதியில் அறிஞர்களுடன் கலந்துறையாடி எத்தகைய அரசு முறை சிறந்தது என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தான். மூத்தோர் இறந்தால் அதற்குப்பின் பதவிக்கு வரும் அனுபவமில்லாதவர்களால் வரிச்சுமை அதிகமாகும் அதனால் அரச பாரம் அதிகரிக்கும். அதுவே ஆண்மையும் தகுதியும் உடையவன் ஆட்சிக்கு வந்தால் அரச பாரம் என்பது உலர்ந்த நெட்டியைப் போல் சுமையின்றி இருக்கும் என அரச பாரத்தை எடைபோட்டு இந்தப் பாடலில்  நலங்கிள்ளியே அழகாக எடுத்துரைக்கிறான்.

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே; மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,

பொருள்.

மூத்தவர் மூத்தவர்குறிய இடத்தை அடைந்து விட்டால் (இறந்து விட்டால்) முறைப்படி வந்த பழைய வெற்றிகள் உண்டாக்கிய அரசுரிமையை பெற்றுவிட்டோம் என எண்ணி தன் குடிமக்களிடம் அதிகமாக வரிகேட்கும் ஆண்மையில்லாத சிறியவனின் அரசாட்சி சிறந்ததல்ல. குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்குடையையும் முரசையும் உடைய அந்த அரசாட்சியை துணிந்து போரிடும் மன எழுச்சியையும் வலிய முயற்சியையும் உடைய ஒருவன் பெற்றால், அரசாட்சி என்பது ஆழத்தில் நீர்வற்றிய குளத்தருகில் உள்ள சிறிய சுள்ளி போன்ற வெள்ளிய நெட்டிபோல் மிகவும் சுமையற்றாக இருக்கும்.