மிர்தாதின் புத்தகம்.



அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன குட்டிக்குட்டி கதைகளை அப்படியே சுட்டு; ஆங்காங்கே பொறுக்கிய நறுக்கிய தத்துவங்களை சக்கையாகப் பிழிந்து; கதவைத் திற, சன்னலை சாத்து, மொட்டைமாடிக்கு வா என கிளுகிளுப்பான ஒரு தலைப்பை வைத்து; காவி உடை, கழுத்துவரை நீண்ட தாடி, ருத்ராட்சம், கமண்டலம் இவற்றோடு; புலி, மான், கரடி போன்ற அனிமல் பிளானட் தோலில் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து; ஹைட்டெக்கான இந்த உலகையே தாம்தான் காப்பது போல் கை காலை விரித்து அண்ணார்ந்து பார்த்து ஒரு ரொமான்டிக் லுக்குவிட்டு அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்து; பூஜ்ஜியஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நித்யஸ்ரீ, தத்குரு, -------னந்தா என எதாவது ஒரு பெயரில்; யாரவது ஒரு எழுத்தாளர் அடிமையை வைத்து எழுதும்- எழுதிய ஆன்மீகம், தத்துவம், சித்தாந்தம், வாழ்க்கை ஞானம் இவற்றை உள்ளடக்கிய புத்தகங்களை அடியேன் சீண்டிப் பார்த்ததில்லை.

சில வாரப்பத்திரிக்கைகளைத் திறந்தால் ஏதாவது ஒரு நடிகையின் உ.பி, ம.பி, இ.பி தெரிகிறதா என பார்க்கும் வயதுதான் ஆகிறது என்பதாலும், இன்னும் கொஞ்சம் முடிகள் நரைக்கட்டும் பிறகு ஆன்மீக தத்துவ ஞானங்களை ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பதாலும் அத்தகைய புத்தகங்களின் மீதான பார்வையை தவிர்த்தே வந்திருக்கிறேன். மேலும் அவ்வாறு எழுதப்பட்ட புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ குறிப்பிட்ட கடவுளையோ தனி ஒரு நபரையோ சார்ந்து நம்மை இரை(றை)யாக விழுங்க சிலந்திவலைபோல் பின்னப்பட்டிருக்கும் என்பதால் அதில் சிக்கிக்கொள்வோமோ! என்ற அச்சத்துடன் தொடாமல் இருந்திருக்கிறேன். அவற்றை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு விதிவிலக்காக சமீபத்தில் உள்ளுணர்வோடு வாசித்த வாழ்வின் தேடலுக்கான புத்தகம்தான் "The Book of Mirdad" (மிர்தாதின் புத்தகம்).

இந்த புத்தகம் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. எந்தக் கடவுளும் இதில் கதாநாயகன் அல்ல. இதை எழுதியது பெருந்தலைக்கு சிலை வைக்கும் கார்ப்பரேட் சாமியாரும் அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத்தன்மை பரந்து விரிந்திருக்கிறது, அது அறியாமை என்னும் இருளில் மறைந்து ஒளிந்திருக்கிறது. ஒரு துளி வெளிச்சம் போதும் இருள் விலக - ஒரு குறிப்பிட்ட தூரத்திற்காவது ஒளி பரவ. அதைத்தான் இந்த புத்தகம் செய்கிறது. சுறுக்கமாகச் சொன்னால் உள்ளுக்குள் இருக்கும் 'நான்' கடவுளை சுயதரிசனம் செய்ய உதவுகிறது. இந்த புத்தகம் ஒரு நாவலைப்போல் தெளிவாகத் தொடங்குகிறது பிறகு மெல்ல ஞானப் பாதையில் பயணித்து கடைசியில் சரியான இடத்தில் முடிகிறது. அதாவது ஒரு மலையின் உச்சியைத் தொட சமதளத்திலிருந்து செங்குத்தான பாதைவழியே பயணிப்பதை போன்று அமைந்திருக்கிறது.

திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் நோவாவின் புதல்வன் "சேம்" என்பவரால் உருவாக்கப்பட்ட மடம் "அராரத்" என்னும் மலையின் மேல் உள்ள பலிபீடச் சிகரத்தில் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் ஆறு மற்றும் ஏழாம் பாகத்தில் வரும் ஆதி வெள்ளப்பெருக்கு என்ற கதையின் படி உலகம் அழியும்போது நோவா தன் குடும்பம் மற்றும் 38 உயிர்களுடன் கப்பல் போன்ற பேழையில் 150 நாட்கள் மிதந்து இந்த அராரத் மலையில் அடைந்ததாக நம்பப்படுகிறது. அந்த உன்னதமான இடத்தையும் அங்கிருக்கும் பாழடைந்த மடத்தையும் காணும் ஆர்வம் இளைஞன் ஒருவனுக்கு ஏற்படுகிறது. பல்லாயிரம் அடி உயரமான அந்த மலை உச்சியை அடைய அவன் செங்குத்தான பாதையை தேர்ந்தெடுக்கிறான். ஒரு ஊன்றுகோல் ஏழு ரொட்டித் துண்டுகளை வைத்துக்கொண்டு அவன் புறப்படுகிறான். அவன் பயணிக்கும் பாதை கரடுமுரடாகவும் பாறைகளாகவும் கற்கள் நிரம்பியதாகவும் இருக்கிறது. அதனூடே காயம் பட்டு சதை கிழிந்து இரத்தம் வடிய முழங்காலிட்டு கைகளை ஊன்றியபடி நிர்வாண நிலையில் மூச்சுவிடக்கூட முடியாத நிலையில்கடைசியில் அந்த மலை உச்சியை அவன் அடைகிறான். அவனது பயணத்தில் பல அதிசயங்கள் நிகழ்கிறது. இறுதியில் அவன் உச்சியை அடைந்தவுடன் துறவி ஒருவர் அவனை சந்திக்கிறார். மயக்க நிலையில் இருக்கும் அவனைத் தேற்றி, உனக்காகத்தான் 150 வருடங்களாக காத்திருக்கிறேன் எனக் கூறி அவனிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு கல்லாகிப் போகிறார். அவர் கொடுத்த புத்தகம்தான் "மிர்தாதின் புத்தகம்"

அந்த இளைஞனுக்கு புத்தகத்தை கொடுத்த துறவியின் பெயர் "சாமதம்".  150 வருடத்திற்கு முன்பு செழிப்பாக விளங்கிய அந்த மலை உச்சியிலிருந்த மடத்தின் தலைவராக பொறுப் பேற்றிருந்தார். மடத்தின் கொள்கையின்படி அங்கு ஒன்பது துறவிகள் மட்டும் சேவை செய்ய வேண்டும் என்பது நோவாவின் கட்டளையாக இருந்து வந்தது. ஒன்பது துறவிகளில் யாராவது ஒருவர் இல்லாமல் போனால் அந்த இடத்தை கடவுள் நிரப்புவார் என நம்பப்பட்டு வந்தது. சாமதம் தலைவராக இருந்தபோது அவ்வாறு ஒரு துறவி காலமாகிறார். மடம் அவருக்குப் பதிலாக ஒருவரைத் தேட "மிர்தாத்" என்பவர் அங்கு வருகிறார். பார்ப்பதற்கு பிச்சைக்காரனைப்போல் இருக்கும் மிர்தாத்தை சாமதம் ஏற்க மறுக்கிறார். சரி போனால் போகட்டும் என அவரை மடத்தில் எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்கிறார். நாட்கள் நகருகிறது மடத்தின் ஒன்பதாவது துறவி கிடைக்காததால் வேறு வழியின்றி மிர்தாத்தை ஒருமனதாக துறவியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு சாமதத்திற்கு விருப்பமே இல்லை என்பதால் மிர்தாத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார். அவன் வாய் திறந்து பேசக்கூடாது என்பதற்காக அடக்கியே வைத்திருக்கிறார். மிர்தாத் துறவியானதிலிருந்து மடத்தின் போக்கு மாறுகிறது அதுவரை செல்வச் செழிப்போடு விளங்கிய மடத்தின் சொத்துக்களை (மடம் என்றாலே செல்வச் செழிப்பு தானே) மலையடிவாரத்திலிருக்கும் மக்களுக்கு மிர்தாத் தானமாக வழங்குகிறார். இதனால் மடத்திலும் துறவிகளுக் கிடையேயும் குழப்பம் நிகழ்கிறது. இதற்கிடையே மிர்தாத் தான் மேற்கொண்ட மௌன விரதத்தை கலைத்து வாய் திறந்து பேசத் தொடங்குகிறார். தன் பேச்சின் வல்லமையால் சிதறிப்போன துறவிகளை இணைக்கிறார். மடம் என்பது என்ன? கடவுள் என்பவர் யார்? எது வாழ்க்கை? என ஞானத்தை அவர்களுக்கு போதிக்கிறார். அந்த மிர்தாத்தின் பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் மற்றொரு இளம் துறவியான "நாரோண்டா" என்பவர் பதிவு செய்கிறார். அவர் பதிவு செய்த மிர்தாத்தின் தத்துவ ஞான உபதேசங்களால் இந்த புத்தகம் நிறைந்திருக்கிறது.

மிர்தாத் அப்படி என்ன உபதேசித்தார்? புத்தகத்திலிருந்து சில-

👉இங்கே சொற்கள் முக்கியமல்ல. சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம்.

👉சிறந்த பேச்சு - ஒரு நேர்மையான பொய். மோசமான மௌனம் - ஒரு நிர்வாண உண்மை.

👉மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும். பற்று விடுங்கள். பற்றியவை பற்றற்றுப் போகும்.

👉வியர்வையும் ஆக்கத்திறனும் இல்லாமல் ஒரு சிறிய ரொட்டித் துண்டைக்கூட உருவாக்க முடியாது.

👉ஒருவனை அளக்க, கால் முதல் தலை வரை அளந்து விட்டு, அவனை அளந்து கண்டுவிட்டதாக சிறுபிள்ளைத் தனமாக நினைத்து விடாதீர்கள்.

👉வேர்களை விட ஒரு மரம் அதிக கிளை பரப்பாது.

👉காமம், அச்சம், சிரிப்பு, கண்ணீர் இவற்றை வெளிப்படுத்தாத பார்வை ஒன்றுகூட இல்லை.

👉பிரார்த்தனை செய்வதற்கு உதடுகளோ நாக்கோ தேவையில்லை. அமைதியாக விளித்துக் கொண்டிருக்கும் இதயம் வேண்டும். 

👉சாவிற்கும் அழிவிற்கும் கவலைப்படுகிற முட்டாள்தனத்தைப் போன்றதுதான், வாழவும் வளரவும் ஆனந்தப் படுவது.

👉நிதானம் வேகத்தின் தாய்.

👉ஏக்கம் கொண்டவர்களே வெற்றி பெருவார்கள்.

👉இறந்து போனவர்கள் உயிர் வாழ்பவர்களுக்கான அடிமண்.

👉உயரமும் உறுதியும் கொண்ட மரங்கள் மட்டுமே காடு ஆகிவிடாது.

👉மேலே ஏறுகிற அளவிற்கு இறங்கி வாருங்கள்.  இல்லாவிடில் சமநிலையை இழக்க நேரிடும்.

👉ஏழ்மையும் இல்லை; செல்வமும் இல்லை. பொருட்களை பயன்படுத்துவதில் சாமர்த்தியம் மட்டும் இருக்கிறது.

👉அடுத்த காலடி வைப்பில் சந்தேகம் இருந்தால், அப்படியே அசையாமல் நின்று விடுங்கள்.

👉மௌனத்தின் சிரமத்தைக் குறைக்க மட்டும் பேசுங்கள்.

👉காதலரை வெல்லும் காதல், காதலே அன்று. இரத்தமும் சதையும் சாப்பிட்டு வளரும் காதல், காதலே அன்று. ஆண் பெண் பிள்ளைகளைப் பெறவும், உடலின் பந்தத்தை உறுதிப் படுத்தவும் ஆணுக்கு பெண் ஏற்படும் ஈர்ப்பு காதலே அன்று.

👉ஒரு வீட்டிற்கு விளக்குமாறு எப்படியோ அப்படித்தான் சுயதேடல் இதயத்திற்கு. நன்றாக கூட்டிப் பெருக்குங்கள்.

👉எது உங்களை வந்தடைகிறதோ அது உங்களுடையது. எது கிடைக்க தாமதமாகிறதோ அதற்காக காத்திருப்பது சரியன்று. அது தகுதியற்ற பொருளும் ஆகும். அது வேண்டுமானால் உங்களுக்காக காத்திருக்கட்டும்.

👉உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது.
உண்மையான வேகம்
எப்போதும் மெதுவானது.
மிகவும் உணர்ச்சியுள்ளது
மரத்துப் போனது.
பெரிய பேச்சாளன், ஊமை.
ஏற்ற வற்றம், ஒரே அலையில்தான்.
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி.
மிகப் பெரியதென்பது
மிகச் சிறியதுதான்.
எல்லாம் கொடுப்பவனே
எல்லாம் பெற்றவன்.

மிர்தாத்தின் இத்தகைய உபதேசங்களைக் கேட்ட மற்ற துறவிகளுக்கு ஞானம் பிறக்கிறது. மடத்தின் தலைவரான சாமதமும் மிர்தாத்தின் சிந்தனைக்கு மனம் திருந்தி அடிமையாகிறார். "இதயமும் மனமும் கொள்வதே துறவு; அவர்கள் துறவிகளின் மடத்தில் இருந்தாலும் சரி,  மக்களோடு மக்களாக சந்தையில் இருந்தாலும் சரி" என மிர்தாத் மலை உச்சியிலிருந்த அந்த மடத்தை கலைக்கிறார். துறவிகளை மக்களோடு மக்களாக கலக்கச் செய்கிறார். மேலும் மடத்தின் தலைவராக இருக்கும் சாமதத்திடம் ஒரு இரும்புப் பெட்டியைக் கொடுத்து நீங்கள் மட்டும் இதை இங்கேயே பாதுகாத்து வாருங்கள், சரியான நேரத்தில் நான் ஒருவனை இங்கு அனுப்புகிறேன் உங்கள் உள்ளுணர்வால் அவனை கண்டுகொள்வீர்கள், அவனிடம் அதை ஒப்படைத்துவிட்டு இந்த பூமியிலிருந்து மோட்சம் பெறுங்கள் என சொல்லிவிட்டு அவரும் மலை உச்சியிலிருந்த அந்த மடத்திலிருந்து வெளியேறுகிறார். 150 வருடங்களுக்குப் பிறகு மலை உச்சியை சிரமப்பட்டு அடந்த இளைஞனுக்கு அந்த பெட்டியும் அதிலிருக்கும் மிர்தாத்தின் புத்தகமும் கிடைக்கிறது.
  • The Book of Mirdad
  • Mikhail Naimy
  • தமிழில்
  • மிர்தாதின் புத்தகம்
  • கவிஞர் புவியயசு
  • கண்ணதாசன் பதிப்பகம்.
சாதாரண வாசகர்கள் பக்கத்தில் வரவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் இந்த புத்தகத்தை எழுதியவர் லெபனான் நாட்டைச் சேர்ந்த "மிகெய்ல் நைமி" (Mikhail Naimy). இவர் மிகப்பெரிய எழுத்தாளர் இல்லை என்றாலும் எழுதிய ஒரே புத்தகம் ஓராயிரத்திற்கு சமமாக விளங்குகிறது. லெபனானின் புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரனின் நண்பரான இவர் அவரையும் தாண்டி ஒரு படி மிஞ்சி நிற்கிறார். மலை உச்சியில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்ள புறப்பட்ட அந்த இளைஞனை, இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என படிக்க நினைக்கும் வாசகர்களோடு உருவகம் செய்திருக்கிறார் மிகெல் நைமி. மேலும் தத்துவங்களை மறைமுகமாகவும் மேம்போக்காகவும் சொல்லாமல் இந்த புத்தகத்தில் வரும் ஒன்பதாவது துறவியாக தன்னை பாவித்து சொற்களால் விளையாடி எழுத்துக் கலைக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறார். " இங்கே சொற்கள் முக்கியமல்ல. சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம்" என்பதற்கேற்ப அந்த அதிர்வை புத்தகத்தை வாசிப்பவர்களால் உணர முடியும்.

கதைகள், கட்டுறைகள், வரலாறு, அறிவியல் என பிச்சைக்கார வாசிப்புப் பழக்கம் அடியேனுக்கு உண்டு. முன்பே சொன்னதுபோல் ஆன்மீகமா? தத்துவமா? என பயந்து மொழிபெயர்ப்பின் சிக்கல்களோடு இந்த புத்தகத்தை முடித்தேன். படித்து முடித்த பின்பு உணர்ந்தேன், அடடா! 'ஒரு இருபது வருடங்களுக்குப் பிறகு (இருந்தால்) இந்த புத்தகத்தை தொட்டிருக்கலாம்'.