நான் நுஜும் எனக்கு வயது 10 விவாகரத்தானவள்.


வசர அவசரமாக காரிலிருந்து இறங்கிய அவள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஏமன் நாட்டின் நீதிமன்ற வளாகத்திலிருந்த ஒரு பகுதியில் நுழைந்தாள். நீதிபதி எங்கே?... நீதிபதி எங்கே?... என அரபுமொழியில் கத்திக்கொண்டே நுழைந்த அவளை சிலர் அதிசயமாக பார்த்தனர், ஒருசிலர் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவள் எதையும் பொருட்படுத்தாது திரும்பத் திரும்ப நீதிபதி எங்கே? என கேட்டுக் கொண்டிருந்தாள். இங்கு இருப்பவர்கள் அனைவருமே நீதிபதிகள்தான்... இது நீதிபதிகள் தங்கும் அறை... உனக்கு என்ன வேண்டும் சொல்?.. என ஒருவர் கேட்க சற்று ஆசுவாசமான அவள் மூச்சை இழுத்துவிட்டு...எனக்கு விவாகரத்து வேண்டும் தாருங்கள்.. என்றாள். அதனைக்கேட்ட அங்கிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள் அந்த இடம் முழுவதும் சற்று நிசப்தமானது.

பெண்களின் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் நிறைந்த ஏமன் நாட்டில் விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றம் வருவது அரிதானது. அதற்கு அந்த நாட்டின் சட்டத்திட்டங்களும் மதக் கொள்கையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இருந்தும் துணிச்சலாக ஒரு பெண் நீதிமன்றம் ஏறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் அந்தப் பெண்ணிற்கு 10 வயதே நிரம்பியிருந்தது.

நீதிபதிகள் அவளை அரை நாட்கள் காக்க வைத்தனர் பிறகு அவளது கதையை பொருமையாகக் கேட்டனர்.

1998-ஆண்டு ஏமன் நாட்டில் பிறந்தவள் நஜ்ஜீத் அலி . பெண்ணுக்கே உரிய வண்ணக் கனவுகளோடு வளர்ந்த அவளுக்கு அவளது தந்தை 10 வயதில் திருமணம் செய்து வைத்தார். ஏமன் நாட்டில் நிழவும் பழங்குடி மரபின்படி சிறு வயது திருமணங்கள் அங்கு சட்டத்திற்கும் மதத்திற்கும் வழக்கத்திற்கும் உட்பட்டவை என்பதால் அவளது தந்தை வரதட்சணை வாங்கிக்கொண்டு பாஸ் அலி தமார் என்ற 30 வயது ஆசாமிக்கு தன மகளை தாரை வார்த்தார். பள்ளிக்குச் செல்லும் விளையாட்டு பருவத்தில் இருந்த நஜ்ஜீத் அலிக்கு திருமணம் ஒரு விஷேச நாளைப்போல கொண்டாட்டமாக இருந்தது ஆனால் புகுந்த வீட்டிற்கு சென்றபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. குறிப்பாக இரவு நடக்கும் கொடுமை. பருவம் மலராத அந்த பிஞ்சு மொட்டு ஒவ்வொருநாள் இரவையும் ரணமாக கடந்து வந்தாள் இதனையும் தவிர்த்து அடி உதை என அத்தனை துன்பத்தையும் அனுபவித்து வந்தாள். பெண்ணாக இருந்தும் தாய்போல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவளது மாமியாரும் எதையும் கண்டுகொள்ள மறுக்க ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தாள். கையில் வைத்திருந்த கொஞ்சம் பணத்துடன் விடிந்ததும் ஒரு டாக்ஸியைப் பிடித்து நகரத்திலிருந்த நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள்.

அவளது கதையைக் கேட்ட நீதிபதிகளுக்கு குழப்பம் மேலோங்கியது. விவாகரத்து வழங்கலாமா? வேண்டாமா? என்ற சிக்கலில் சட்டத்திற்கு உட்பட்டு எதையும் செய்யாமல் அவளது கணவன் மற்றும் தந்தைக்கு சிலநாட்கள் காவல் தண்டனையை மட்டும் அளித்தனர். அதற்குப்பின் நஜ்ஜீத் அலியின் விவாகரத்து வழக்கை ஷாதா நாசர் என்ற பெண் கையில் எடுத்தார். ஏமனில் பிறந்து சனா நகரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த வழக்கரிஞரான அவர் சில "நல்ல" பத்திரிகைகள் மூலம் இந்த வழக்கை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார். மேலும் நஜ்ஜீத் போல பாதிக்கப்பட்ட சிறுமிகளின் ஆதரவுகளையும் திரட்டினார். பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்களை எதிர்த்து போராடும் அவருக்கு இந்த வழக்கு சவாலாக இருந்தது. இறுதியில் 2008 ஆம் ஆண்டு நஜ்ஜீத் அலிக்கு விவாகரத்தும், அவரது கணவனிடமிருந்து நஷ்டயீடும் பெற்றுத் தந்தார். இந்த வழக்கு அனைவராலும் கவனிக்கப்பட அதுவரை வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் அளித்தது. இருந்தபோதும் ஏமன் நாட்டில் சிறுவயது திருமணங்கள் நடந்தவண்ணமே இருந்தது. 2010 -ஆம் ஆண்டு 10 வயது சிறுமி ஒருத்தி இதேபோன்ற திருமணத்திற்குபின் பாலியல் தொந்தரவில் இறந்துவிட மீண்டும் பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு எதிரான போராட்டம் வழுத்தது. ஷாதா நாசர் போன்றவர்களின் முயற்சியால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் கவனிப்பிற்கு வந்த போராட்டம் ஐநா அமைப்புவரை செல்ல ஏமன் நாட்டிற்கு நெருக்கடி விழுந்தது. ஒருவழியாக 2010 -ஆம் ஆண்டு ஏமன் நாடு பெண்களின் திருமண வயதை 16 என தனது சட்டத்தை மாற்றியமைத்தது.


தனது பாட்டி அப்படித்தான் வாழ்ந்தாள், தன் தாயும் அப்படித்தான் இருந்தாள், தனக்கும் அப்படித்தான் வாழ்க்கை வாய்க்கப்பெறும் என மனதை தேற்றிக்கொள்ளாமல் பண்பாடு பாரம்பரியம் மதம் சட்டம் மண்ணாங்கட்டி என எதையும் பாராமல் துணிச்சலுடன் நீதிமன்றத்தை அடைந்து பூட்டியிருந்த பழமையான சட்டத்தின் கதவுகளை தட்டி அதனை உடைக்க உறுதுணையாக இருந்த நஜ்ஜீத் அலி மற்றும் வழக்கரிஞர் ஷாதா நாசர் இருவரையும் அமேரிக்கா அரசு 2008-ஆம் ஆண்டின் Women of the Year என தேர்ந்தெடுத்து கௌரவித்தது. மேலும் சில நாடுகள் இவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கியது.

படிப்பதில் ஆர்வம் கொண்ட நஜ்ஜீத் அலி இந்த வழக்கிற்குப்பின் கிடைத்த நஷ்டயீட்டுத் தொகையை வைத்துக்கொண்டு தன் பிறந்த ஊரில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள். அவளைப் போலவே அவளது தங்கையான ஹபீபா என்பவளுக்கும் அவளது தந்தை சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்க தன் தங்கையையும் அதிலிருந்து மீட்டெடுத்தாள். தற்போது கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்த அவள் நஜ்ஜீத் அலி (Hidden) என்ற தன் பெயரை நுஜும் (Stars in the Sky) என மாற்றிக் கொண்டாள். சட்டம் படிப்பதே தனது கனவு என சொல்லிக்கொள்ளும் அவளுக்கு அதை தெரிந்துகொண்டு அதில் சிலவற்றை உடைத்தெரியும் துணிச்சல் இயல்பிலே அமைந்திருக்கிறது. அந்த துணிச்சல்காரி நஜ்ஜீத் அலியின் சுயசரிதைதான் இந்த புத்தகம் I am Nujood 'Age 10 Divorced '.

தனது தாய்மொழியான அரபுமொழியில் இந்த சுயசரிதையை நஜ்ஜீத் அலி தாமே எழுதினார். அதனை டெலிபின் மினோய் என்ற பிரபல பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2014 -ஆம் ஆண்டு கதீஜா சால்மி என்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் இந்தக் கதையை திரைப்படமாகவும் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

Movie Trailer 

அடியேன் அதிபுத்திசாலி என நினைத்து நண்பர்கள் சிலர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களை பரிசாகவோ படிக்கவோ கொடுப்பார்கள். நானும் 'அடடா! இந்த புத்தகத்தைதான் தேடிக்கொண்டிருந்தேன் என பெருமையாக அதனை வாங்கிகொண்டு வந்துவிடுவேன். ஆனால் அப்படி வாங்கிய புத்தகங்கள் பிரிக்கப்படாமல் அலமாரியில் கும்பகர்ணனைப்போல் பலநாட்கள் தூங்கும். (ஆங்கிலத்தில் படிப்பதும் ஆன்லைனில் கணினியில் படிப்பதும் அடியேனுக்கு சுவாரசிய மற்ற ஒன்று மேலும் பீட்டரிலும் நாம கொஞ்சம் வீக்) அப்படி கிடைத்த புத்தகம்தான் I am Nujood 'Age 10 Divorced '. புத்தகத்தின் தலைப்பை பார்த்தவுடன் எனது அதிபுத்திசாலித்தனம் என்ற போர்வையை விலக்கிவிட்டு பழைய தடித்த பழுப்புநிற Lifco டிஸ்னரியை வைத்துக்கொண்டு (அதற்கு வயது 25) படிக்க ஆரம்பித்தேன். இயல்பான வர்ணனை குழந்தைத்தனமான நடை பழமையை சுட்டெரிக்கும் வார்த்தைகள் என புத்தகத்தோடு ஒன்றிப்போனேன். இறுதியில் படித்து முடித்து மடித்தபோது மரியாட்டு, ஆணி பிராங்க், பியோனா முட்டோஷி என என்னை கவர்ந்த தன்னம்பிக்கை நாயகிகளின் வரிசையில் நஜ்ஜீத் அலியும் புதிதாக இணைந்திருந்தாள். புத்தகமாகவோ சினிமாவாகவே இந்த துணிச்சல்காரியை நீங்களும் ஒருமுறை சந்தியுங்கள்.