☰ உள்ளே....

Chotodar Chobi - தொட முடியாத உயரம் ..* இஞ்சி மரப்பா, புளிப்பு மிட்டாய், பாப்பின்ஸ் என கத்திக்கொண்டே ஒவ்வொரு பேருந்தாக ஏறி தன் பலகுரல் வித்தையால் குழந்தைகளை மகிழ்வித்து இருந்ததை விற்றுவிட்டு இறங்கிச் செல்லும் அவரை, சிறுவயதில் எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் பார்ப்பதென்றால் குதுகலமாக இருக்கும். தோற்றம், பலகுரல் மற்றும் செய்யும் சேட்டை என குழந்தைத்தனமான செயல்களுக்காக அவரிடம் மிட்டாய்களை வாங்கிய பயணச் சிறுவன்களில் நானும் ஒருவன்.

* வேட்டி சட்டை, கண்ணாடி, தலையில் எப்பொழுதும் மப்ளர் சகிதம் இருக்கும் அந்த பெரியவருக்கு வயது ஐம்பதைத் தொடும். தினமும் காலையில் கொடுவாயிலிருந்து திருப்பூருக்கு வரும் ஆறாம் நம்பர் பேருந்தில் தன் நண்பருடன் அவரை இப்பொழுதும் காணலாம். இறங்க சிரமப்படும் அவருக்கு பல சமயங்களில் கை கொடுத்து உதவியிருக்கிறேன். தேங்ஸ்டா என வயிற்றில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்வார். (அவரை மனதில் வைத்து ஒரு கவிதையும் கிறுக்கியிருக்கிறேன்).

* B.Com CA படித்துவிட்டு கணக்கராக எங்கள் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு தினமும் வந்து விடுப்பு எடுக்காமல் சலிக்காமல் வேலைபார்க்கும் அவளது சுறுசுறுப்பைக் கண்டு பொறாமைப்பட்டதுண்டு. பேசிக்கொண்டே நடக்கலாம் என்றால் அவளுடன் ஓட வேண்டிவரும் என்பதால் அவளுக்கு "Road Runner" என்ற செல்லப் பெயரை வைத்திருந்தோம். தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டு "அக்கா"டா என தன் சொந்த ஊரான ஆந்திராவின் கிராமத்திற்கு வேலையை விட்டுவிட்டு சென்ற பிறகு அவளுக்கென விஷேசமாக வடிவமைக்கப்பட்ட எங்கள் அலுவலக இருக்கை காலியாகவே இருந்தது. தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும் சில சோர்ந்து போகும் தருணங்களில் அந்த Road Runner மனதிற்குள் ஓடுவாள்.

கொஞ்சம் நெருக்கமாக நான் பார்த்து பழகிய இந்த மூவரும் குள்ளமானவர்கள் அவர்களின் உயரம் இரண்டு அல்லது மூன்று அடி மட்டுமே இருக்கும். இதனையும் தவிர்த்து சில சர்க்கஸ் கோமாளிகளையும், சினிமா நடிகர்களையும், அன்றாடம் குறுக்கிடும் சில குள்ள மனிதர்களையும் பார்த்து, சிரித்து, ஆச்சரியப்பட்டு, அய்யோ! பாவம் என்ற அனுதாபத்தை வீசிவிட்டு அடுத்த நொடி வாழ்க்கைக்காக நகர்ந்ததுண்டு.

பரம்பரை சொத்து, வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சுரப்பு, மரபணு குளறுபடி என கடவுளின் குறையால் பிறந்த இவர்களைப் போன்ற குள்ளமான மனிதர்களின் உலகம் எப்படியிருக்கும்? வாழ்கைதான் எப்படி கடக்கும்? கடந்திருக்கும்? அதனை அழகாகக் காட்டுகிறது இந்த வங்கமொழி திரைப்படம் "Chotodar Chobi".


அந்தரத்தில் கயிற்றில் தாவி சர்க்கஸ் வித்தை காட்டும் தலைமை ஜோக்கரான ஷிபு என்பவனுக்கு விபத்து நிகழ்கிறது. எப்படியோ உயிர்பிழைத்துக் கொண்டாலும் வாழ்க்கை முழுவதையும் படுக்கையில் கழிக்கும் கடைசி வாய்ப்பு கிடைக்கிறது. சர்க்கஸ் நிர்வாகம் விபத்திற்கு 15000 ரூபாயை மட்டும் நஷ்டயீடாக கொடுத்து சரிகட்ட நினைக்க, ஷிபுவுடன் வேலைசெய்யும் மற்ற ஜோக்கர்கள் அதனை எதிர்க்கின்றனர். அதிலும் ஷிபுவின் நண்பனான கோஹா என்பவன் சர்க்கஸ் நிர்வாகத்தை பகைத்துக்கொண்டு தன் பிழைப்பையும் உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். மேலும் ஷிபுவின் குடும்பத்தை தாங்கும் முழு பொறுப்பையும் ஏற்கிறான். வேலையின்மை, வறுமை, புதிதாக பெற்ற குடும்ப பொறுப்பு என இந்த போராட்டத்திற்கிடையே ஷிபுவின் மகள் சோமாவின்மீது அவனுக்கு காதலும் மலர்கிறது. அதிசயிக்கும் பார்வைகள், அலட்சியம், கேலி, கிண்டல்கள், புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம் நிறைந்த இந்த சமுதாய வாழ்க்கையினூடே கோஹா எப்படி பிழைத்தான்? நண்பனின் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றினான்? தன் காதலை அடைந்தானா? என்பதுதான் கலங்க வைக்கும் உணர்ச்சி மிகுந்த இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

டிரெய்லர் 

திரைப்படத்தின் நாயகன் கோஹா, அவனது நண்பன் ஷிபு அவனது மகள் (நாயகி) சோமா மற்றும் பல கதாபாத்திரங்கள் அனைவருமே நிஜ குள்ள மனிதர்கள். அழுகை சிரிப்பு கோபம் இயலாமை பொறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி திரைப்படம் முழுவதும் உலாவரும் அவர்களுக்கு முன் மற்ற கதாபாத்திரங்கள் சற்று உயரம் குறைவாகவே தெரிகின்றனர். குறிப்பாக கோஹாவாக நடித்த "Dulal Sarkar" மற்றும் சோமாவாக நடித்த "Deblina Roy" இருவரும் மிகச் சிறந்த தேர்வு. இருவருக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் மனதை ஏதோ செய்கிறது. முழங்காலுக்கு மேலே செல்லாத ஒளிப்பதிவு மாலை வேளை, இருள், நிழல் என அனைத்தையும் அழகாகக் காட்டி உயர்ந்து நிற்கிறது. கதையோட்டத்தை கெடுக்காத இசை உணர்சிகளுக்குப் பின்னால் ஒரு அடி தள்ளி நின்று தாலாட்டுகிறது. அதிலும் "Khelna Bati Ranna" என்ற பாடல் மனதை மயக்குகிறது. வங்கமொழி சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குனர் Kaushik Ganguly, அவரது தோற்றத்தை போலவே அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கணமானவை மற்றும் கவணிக்கப்பட வேண்டியவை. இந்த படத்திலும் அந்த க(வ)ணம் தெரிகிறது.

Khelna Bati Ranna  பாடல்

சிறுசிறு சண்டைகள், கவணிக்கப்படாத அவமானங்கள் அர்த்தமில்லா கோபங்கள், நிலையில்லா உறவின் பிரிவுகள், என அர்ப்பமான சிலவற்றைக் கண்டு நாம் வாழ்க்கையில் சோர்ந்து போகிறோம். ஆனால் இவற்றையெல்லாம் தம் அன்றாட வாழ்கையின் ஒருபகுதியாக ஒட்டிக்கொண்டு நடைபோடும் இவற்களைப் போன்றவர்களின் வாழ்க்கை கதை நமது தன்னம்பிக்கையை உயர்த்தும் என்பது சந்தேகமில்லை. குட்டி உலகம், குட்டியான மனிதர்கள், அவர்களுக்கு குட்டிக் கதை, அதில் குட்டிக் காதல், குட்டிகுட்டியாக உணர்சிகள் என நிறைந்திருக்கும் இந்த குட்டித் திரைப்படத்தை தவறாமல் ஒருமுறை தரிசியுங்கள்.

Chotodar Chobi
(A Short Story).


  • Directed by - Kaushik Ganguly.
  • Cinematography - Soumik Haldar.
  • Music by - Indradeep Dasgupta.
  • Year - 2015.
  • Country - India.
  • Language - Bengali.