☰ உள்ளே....

கடல் எல்லை - அதுதான் தொல்லை ..சோமாலியாவிற்கு அடுத்தபடியாக கடல் பற்றிய தினசரி செய்தி தமிழக மீனவர்கள் பற்றிய செய்தியாகத்தான் இருக்கும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது, துப்பாக்கி சூடு என தினமும் அவர்களின் வாழ்க்கை கருவாட்டிற்கு காயும் மீனைப்போல கழிந்துக் கொண்டிருக்கிறது. எல்லை தாண்டினார்கள் அதனால்தான் பிடித்தோம், சுட்டோம் என்று இலங்கை தரப்பில் ஒவ்வொரு முறையும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிருக்கும் ஆட்சியாளர்களோ கடிதம் எழுதியே காலத்தை ஓட்டுகிறார்கள் (முதல்ல அந்த லெட்டர் பேடை ஒழிச்சு வைக்கனும்). இதுவரை எழுதிய கடிதம் எல்லாம் டில்லியில் இருக்கும் நாயர் டீ கடைக்கு வடை மடிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனைக்கு அடிப்படையாக பேசப்படுவது "கடல் எல்லை" என்னும் விசயம்தான். இந்த கடலில் ஏது எல்லை? அப்படி எதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், எதை வைத்து கடல் எல்லையை வரையறை செய்கிறார்கள்?.

துவக்கத்தில் கடலில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை மற்றும் அதற்கான சட்டம் ஏதுவும் இல்லை. கரையிலிருந்து 6 கி.மீ. தூரம் அந்தந்த நாட்டிற்கு சொந்தம் மற்ற பகுதிகள் எல்லோருக்கும் பொது என்பதுதான் அனுகுமுறையாக இருந்தது. ஆனால் அவரவர்கள் தங்கள் விருப்பப்படி அதனை மாற்றிக் கொண்டார்கள். 1982- ம் ஆண்டு உருவான UNCLOS (United Nations Convention on the Law of the Sea) என்ற அமைப்புதான் கடலின் எல்லை எவ்வளவு தூரம், யாருக்கு சொந்தம், எங்கே எவ்வளவு அதிகாரம் செலுத்தலாம் என வரையறை செய்து சர்வதேச அளவில் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தது. கிட்டத்தட்ட 158 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் பச்சை இங்க்கில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி ஒவ்வொரு நாடும், அதன் கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தை தன் எல்லையாக்கிக் கொள்ளலாம். 12 நாட்டிகல் மைல் என்பது தோராயமாக 22.2 கி.மீ தூரம். இந்த 22 கி.மீ தூரத்திற்கு முதலாளி அந்த நாடுதான். இந்த வழியாக பிற நாட்டு கப்பல்கள் அனுமதி பெற்று வரலாம் போகலாம்.

இந்த 22 கி.மீ தூரத்தை தாண்டி இன்னும் 22 கி.மீ அந்தந்த நாடுகள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கலாம். இது போர் மற்றும் பக்கத்து நாடுகளிடம் இருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கலுக்காக ஏற்படுத்தப்பட்டது. கடலில் ரோந்து போகவும், யாராவது ஊடுருவல் இருக்கிறதா? என கண்காணிக்கவும் இந்த எல்லையை பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு எல்லைகளைத் தாண்டி மூன்றாவதாக ஓர் எல்லையும் உண்டு அது பொருளாதார எல்லை. கரையிலிருந்து சுமார் 393 கி.மீ தொலைவில் உள்ள எல்லா கடலின் வளங்களும் அந்த நாட்டிற்கே சொந்தம். மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற பொருளாதாரம் சம்மந்தப்பட்டவை அனைத்தும் இதில் அடங்கும். வேறு நாடுகள் கப்பல் ஏறி வந்து ஒரு நெத்திலி மீனைக் கூட இந்த எல்லையில் பிடிக்க முடியாது.

இந்த மூன்று எல்லைகளும்தான் தற்போது அங்கீகரிக்கப்பட்ட கடல் எல்லைகள். அருகருகே நாடுகள் இல்லை என்றால் இந்த வரையறையில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பக்கத்து பக்கத்தில் நாடுகள் இருந்தால் எடுக்கவே முடியாத இடியாப்ப சிக்கல்தான் அதுதான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்சனை. இந்தியா - இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30 கி.மீ இரண்டு நாட்டின் கடல் எல்லை ஒன்றின் மீது ஒன்றாக இருக்கிறது. சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகளின் எல்லையும் அதுபோல்தான் உள்ளது. ஆனால் அவர்கள் தங்களுக்கு 6.கி.மீ தூரம் போதும் என விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளன. இங்கு நிலமை வேறு மதம், இனம், மொழி, அரசியல், கடத்தல் என எல்லையைத் தாண்டிய தொல்லை நமக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கிறது.

எது எப்படியோ கடலுக்கு எல்லை இருக்கலாம், மீனவனுக்கு எல்லை இருக்கலாம் ஆனால் மீனுக்கு எந்த ஒரு எல்லையும் இல்லை. அப்படி இருந்தால் மீனின் கடைசி எல்லை சமையல் அறையிலிருக்கும் எண்ணெய் சட்டியாகத்தான் இருக்கும்.