மடலேறுதல்.


காளையை அடக்கி கல்லைத் தூக்கினால்தான் என் மகளை உனக்கு கட்டித் தருவேன் என கண்டிஷன் போடும் அப்பாக்களுக்கு மத்தியில், டைனோசாரை அடக்கினால்கூட உனக்கு என் பெண்ணை கட்டித் தரமாட்டேன் என முரண்டுபிடித்த தளபதி திரைப்படத்தில் வரும் சாருஹாசன் அப்பாக்கள் சங்க காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே செய்கூலி சேதாரம் எல்லாம் போக இரண்டு இதயங்களை எக்ஸ்சேஞ் செய்தபின் மாட்டேன் என முரண்டுபிடிக்கும் அந்த அப்பாவையும் ஊரில் உள்ள மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து ஒரு ஆண் தன் காதலியை கைப்பிடிக்க அந்த காலத்தில் செய்யத்துணிந்த காரியம்தான் மடலேறுதல். அதனையும் தவிர்த்து இதெல்லாம் சரிபட்டுவராது நான் எங்க அப்பா சொன்னவரைத்தான் கட்டிக்கொள்வேன் என அடம்பிடிக்கும் பெண்களை அடிபணிய வைக்கவும் இந்த மடலேறுதல் என்ற அஸ்திரத்தை ஆண்மகன் கையில் எடுத்தான்.  அது என்ன மடலேறுதல்? 

பனை மரத்தின் மட்டையின் அடிப்பகுதியில் தடித்து முட்கள் போன்ற அமைப்புடன் காணப்படும் அந்த பகுதியைக்கொண்டு குதிரை போன்ற ஒரு வடிவத்தை உருவாக்கி அதன் மேல் காதல் கைகூட நினைக்கும் ஆண்மகனை அமர்த்துவார்கள். அவனது உடம்பில் சாம்பலை பூசி பூவிளைப்பூ, எருக்கம்பூ, ஆவிரம்பூ இவற்றாலான மாலையை அணிவிப்பார்கள். குதிரை வடிவத்திலிருக்கும் அந்த அமைப்பின் கீழ் நகரும் அளவிற்கு உருளைகள் பொருத்தப்பட்டிருக்கும். நண்பர்கள் அல்லது ஊரார் அந்த குதிரையை இழுக்க அதன்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் தன் காதலியின் உருவம் வரைந்த துணியை பிடித்தபடி அவளைப் பற்றி பாடிக் கொண்டே தெருவைச் சுற்றி வருவான். அவ்வாறு செய்வதன் மூலம் தன் காதலை ஊராரருக்கும் காதலிக்கும் வெளிப்படையாக தெரிவிப்பதாக ஆண்மகன் நம்பினான். இதுவே சங்ககாலங்களில் மடலேறுதல் என வழங்கப்பட்டு வந்தது. ஒருமுறை மடலேறிய பின்பும் தன் காதல் நிறைவேறவில்லை என்றால் மறுமுறையும் மடலேறி ஆண்மகன் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வான். சங்ககால ஆண்மகனுக்கு மடலேறுதல் மீசையில் மண் ஒட்டும் சமாச்சாரமாக இருந்தாலும் தான் காதலுக்காக அதனை செய்யத் துணிந்தனர்.

மடலேறுதலைப்பற்றி அகப்பொருளை விளக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவற்றில் பாடல்கள் உள்ளன. திருவள்ளுவரும் தன் பங்கிற்கு

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி (1131).

- என திருக்குறளிலும் குறிப்பிட்டுள்ளார்.

சங்க இலக்கியங்கியங்களில் மடல் இலக்கியம் என தனியே பிரிவு அமைந்து மடலேறுதல் போற்றப்பட்டு வந்தது. ஆண்களுக்கு மட்டும்தான் காதலா? அவர்கள்தான் மடலேறுவார்களா? என்ற மரபைமீறி திருமங்கை ஆழ்வார் என்பவர் திருமாலின் மீது காதல் கொண்டு அவரை தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் பாவித்து மடலேறியதாக அமைத்து சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் என்ற சிற்றிலக்கியங்களை படைத்திருக்கிறார். ஆண்களைப் பொருத்தவரை காமத்துயரம் நீங்க மடலேறுதல் ஒரேவழியாகவும் காமமாகிய பெருங்கடலை நீந்த தெப்பமாகவும்  சங்க காலங்களில் விளங்கியிருக்கிறது. இந்தப் பாடலிலும் அதுவே வலியுறுத்தப்படுகிறது.
  • சங்க இலக்கியம் - குறுந்தொகை 
  • பாடல் - 14
  • பாடியவர் - தொல்கபிலர்
தலைவன் தலைவி இருவரும் காதலிக்கிறார்கள் இவர்களின் காதல் அரசல்புரசலாக வீட்டிற்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியவருகிறது. தலைவிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க அவளைக் காண தலைவன் வருகிறான். சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காததால் மனம் நொந்து அவளின் தோழியிடம் "எங்கள் காதல் புனிதமானது அதனை பெற மடலேறவும் தயங்கமாட்டேன் அவ்வாறு செய்தபின் இப்போது எங்களைத் தூற்றும் இந்த ஊர் இவனைப்போல ஒரு கணவன் உண்டோ என பாராட்டுவார்கள் என சூழுறைக்கிறான்.

அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்  
பெருகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.

பொருள்.

என் காதலியின் நாக்கு அமிழ்தம் நிறைந்தது. அவளுடைய பற்கள் கூர்மையானதாகவும் ஒளிபொருந்தியும் இருக்கின்றன. பற்களின் கூர்மையைக் கண்டு அவள் நாக்கு அஞ்சுவதால் அவள் அதிகமாக போசுவதில்லை. நான் அவளை அடைந்தே தீருவேன். வேண்டுமானால் மடலேறவும் தயங்க மாட்டேன். நான் அவளை மனைவியாக பெற்றபின் அந்தச் செய்தியை இவ்வூரில் உள்ளவர்கள் தெரிந்துகொள்வார்கள் இந்த நல்லவளின் கணவன் இவன்தான் என்று பலரும் கூறுவதைக் கண்டு நாங்கள் சிறிது வெட்கப்படுவோம்.