☰ உள்ளே....

மடந்தை.அந்த அழகான ஜோடிக்கு (தலைவன் - தலைவி) புதிதாக திருமணம் முடிந்திருந்தது. சின்னஞ்சிறுசுகள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கேற்ப அப்படி இப்படித்தான் இருந்தார்கள். கோவில் குளங்களுக்கு செல்வது, ஷாப்பிங் செய்வது, இயற்கையை ரசிப்பது, நண்பர்கள் மற்றும் சொந்தபந்தங்களின் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொள்வது, ஒரு இளநீர் இரண்டு ஸ்ட்ரா, ஒரு ஐஸ்கிரீம் ஒரு கரண்டி, ஒரு கடலை இரண்டு வாய் என காதல் பறவையாக சுற்றித் திரிந்தனர். என்னதான் பகலில் ஊர் சுற்றினாலும் இரவானதும் கூட்டில் அடைந்து ஈருடல் ஓருயிராக கலந்தனர்.

"பெற்றோர்கள் பார்த்து மணமுடிக்கும் திருமணத்திற்கு பின்பு வரும் காதல் அலாதியானது இன்னார்க்கு இன்னார் என எழுதிவைத்ததின் படி
உனக்கு நான் எனக்கு நீ என போடப்பட்ட முடிச்சினை பற்றிக்கொண்டு வாழ்க்கை பின்னலைத் தொடங்கும் தருணம் அது".

'என்னடா! ஒரு சுத்து பெருத்துட்ட பேல' என புதிதாக திருமணம் முடிந்த ஆண் நண்பர்களை கேலி செய்திருப்போம் அதுபோல இந்த தலைவனும் ஒரு சுற்று பெருத்திருந்தான். இரவு மட்டுமே அவிழும் அவனது வேட்டி தெப்பையிலிருந்து அடிக்கடி நழுவியது. தலைவியைப் பொருத்தவரை முகம் முழுவதும் பூரித்திருந்தாள். பூப்பெய்தும் காலம், திருமணம், தாய்மையடையும் காலம், குழந்தைக்கு மார்புநீட்டி பால் புகட்டும் காலம், தாயாக தன் மகளை தாரைவார்க்கும் காலம் என ஒரு பெண் பூரிப்படையும் காலங்களின் வரிசையில் இரண்டாவது நிலையை அவள் தாண்டியிருந்தாள். ஆனால் இப்படியே எத்தனை நாட்களை கழிப்பது? ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் அல்லவா! அதனையும் தவித்து இனிதான் அவர்கள் பொறுப்புகளை தொடங்கவே வேண்டும். இன்று ஈருயிர் இணைந்திருக்கிறது நாளை மூன்றாவதாக ஒரு உயிர் இணையும் இன்னும் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஊடலும் ஊடல் நிமிர்த்தமுமாக இல்லரத்தின் முதல் படியிலே நின்றால் எப்படி?

சங்க காலமாக இருந்தாலும் இந்த காலமானாலும் பொருளீட்டுதலே வாழ்க்கைக்கு முதன்மையானது அதுவே ஆண்மகனின் தலையாய கடமையும் கூட. அதிலும் மணலும் மணலும் மணல்சார்ந்த பாலை நிலத்தில் பிழைப்பது என்பது கடிணமான ஒன்று. அதனை எல்லாம் மனதில் கொண்டு தலைவன் தலைவியைப் பிரிந்து பிழைக்க நீண்ட தூரம் செல்ல முடிவெடுக்கிறான். ஊரில் உள்ள சொந்தக்காரர்களும் மற்றவர்களும் அதனை வரைவேற்கின்றனர். நல்ல குடும்பத் தலைவனின் அறமும் அதுவே மேலும் அறிவுடையவர் செய்யும் காரியமும் ஆகும் என அவனை பாராட்டுகின்றனர். தலைவியும் ஏதோ கடமைக்கு தலையாட்டி தமக்கும் இதில் சம்மந்தம் என தெரிவிக்கிறாள். இருந்தும்,

நாணத்தை இறுக்கி போர்த்திக் கொண்டு முதலிரவு அறையில் பயபக்தியுடன் நுழைந்து காலில் விழும்போது முதல்முதலாக தொட்டுத் தூக்கி உன்னை கனவிலும் பிரிவேன் என, முன் கரம் பிடித்து பின் புறம் பற்றியவன் இன்று பிரிகிறான் என்றதும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பூசிய மஞ்சளும் சந்தனமும் மனம் குறைவதற்குள் பிரிந்து செல்லும் தலைவனின் நிலையை ஏற்றுக்கொள்ள அவள் மனம் மறுக்கிறது. எல்லோரும் பொருளீட்டுவதையும் பிரிவதையும் அறம், அறிவுடைய செயல் என்கிறார்கள் அவ்வாறு செய்பவர்கள் அறிவுடையவர்களாகவே இருக்கட்டும் நான் முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறேன் என அந்த பிரிவின் துயரை தன் தோழியிடம் மனம் நொந்து இந்த பாடலில் புலம்புகிறாள்.

அரக்க பரக்க இருந்தாலும் எப்படியோ தயார்படுத்தி கணவனை கதவிற்கு பின்னால் நின்று கையசைத்து வழியனும் வாழ்க்கை கிடைத்த பெண்கள் (கிடைப்பெற்ற ஆண்களும்) அதிஷ்டசாலிகள். கடல் கடந்த வெளிநாடு வேலை, ஊர் சுற்றும் வாழ்க்கை கிடைக்கப்பெறும் வாழ்க்கைதான் வருந்தத்திற்கும் ஏகத்திற்கும் உரியதாக அமைந்துவிடுகிறது. அதிலும் புதிதாக திருமணமான புதிதில் பிரிதல் என்றால்?. அதனை அழகாக பதிவு செய்கிறது இந்தப் பாடல்.

அருளும் அன்பும் நீக்கித் துணை  துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்

உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.


அன்பையும் அருளையும் விலக்கி விட்டு, துணையான என்னை விட்டு விலகி, பொருளுக்காக செல்லும் தலைவர் அறிவுடையவர் என்றால், அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். நான் அறிவற்றவளாகவே இருந்துவிட்டு போகிறேன்.

சங்க இலக்கியம் - குறுந்தொகை
பாடல் - 20
பாடியவர் - கோப்பெருஞ்சோழன்.
திணை - பாலைத்திணை.