பறந்த சாதனை .





1986 -ஆம் ஆண்டு செப்டம்பர் 5 -ஆம் நாள் 379 பயணிகளுடன் "Pan American World Airways" நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானம் "Pan Am Flight 73" மும்பையிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றது. மும்பை விமானநிலையத்தில் புறப்பட்டு பாகிஸ்தானின் விமான நிலையத்தில் தரையிறங்கி அங்கு சூடாக வடை, போண்டா, சமோசா, டி சாப்பிட்டுவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனியின் விமான நிலையத்தை தொட்டு இறுதியில் அமேரிக்காவை அடைவதே அதன் பயண ஏற்பாடாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் தரையிறங்கி புறப்படும் சிறுதுநேரத்தில் விமானத்தில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு அனைவரையும் துப்பாக்கியின் முனையில் சிறைபிடித்தனர். விமானம் தீவிரவாதிகளின் கைக்குள் என அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் அமேரிக்கர்கள், இந்தியாவையும் பாகிஸ்தானையும் மற்ற சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலரும் இருந்தனர். மேலும் 18 விமான சிப்பந்திகளும் அதில் அடங்குவார்கள். அவர்களில் ஒருவர்தான் "நீர்ஜா" (Neerja Bhanot).




பஞ்சாபில் உள்ள சண்டிகரில் 7 செப்டம்பர் 1963 -ஆம் ஆண்டு பிறந்தவர் நீர்ஜா. விளம்பரங்களில் மாடலிங் செய்துகொண்டிருந்தவர் முறையாக படித்து விமான பணிப்பெண்ணுக்கான பட்டமும் பெற்றார். வரதட்சணைக் கொடுமையால் தனது திருமணம் முறிந்துபோக தன் பெற்றோருடன் மும்பையில் வசித்து வந்த அவர், விமானம் கடத்தப்படுவதற்கு முன்பு தன் பயணத்தை முடித்துவிட்டு திரும்பிவந்து தனது 23 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என அவர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டு புறப்பட்டிருந்தார். ஆனால்! விதி வேறுவித கணக்கை கையில் வைத்திருந்தது. பாகிஸ்தான் விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்களைப் போல சலாம் வைத்துவிட்டு எளிதாக நுழைந்த தீவிரவாதிகள் அந்த விமானத்தை சிறைபிடித்திருந்தனர். தலைமை விமான பணிப்பெண்ணான நீர்ஜா இந்தத் தகவலை காக்பிட் என சொல்லக்கூடிய விமான பகுதியிலிருந்த விமான ஓட்டுனர் மற்றும் பொறியாளர்களுக்கு முதலில் தெரிவித்து அவர்களை அவசரமாக வெளியேறச் செய்தார். மேலும் விமானத்தின் ரேடியோ தொழில் நுட்பத்தை முடக்கி தகவல் தொடர்பையும் துண்டித்திருந்தார். விமானத்தை கடத்திக்கொண்டு பறக்க நினைத்த தீவிரவாதிகளுக்கு இது பேரிடியாக விழுந்தது

லிபியாவை சேர்ந்த "Abu - Nidal Organization" (ANO) என்ற பாலஸ்தீன தீவிரவாத அமைப்பு இந்த முழு கடத்தலுக்கு பொருப்பேற்றிருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்க போராளிகள் சிலரை சிறையிலிருந்து விடுவிக்கும் நிபந்தனையையும் விதித்திருந்தது. அமேரிக்க அரசு அதிகாரிகளும் Pan American விமான அதிகாரிகளும் போட்டதை போட்டபடி விட்டுவிட்டு இரண்டு ரொட்டித் துண்டுகளை பிய்த்து உள்ளே தள்ளிவிட்டு தனது மேலதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தனி விமானத்தில் பாகிஸ்தான் வந்தடைந்தனர். இந்திய அதிகாரிகளும் தன் பங்கிற்கு மேலதிகாரியிடம் கா.....த்திருந்து உத்தரவு வாங்கிக்கொண்டு குளித்து முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு சாப்பாட்டு மூட்டையுடன் சாவகாசமாக பாகிஸ்தானுக்கு வந்தனர். இதற்கிடையில் பாகிஸ்தானின் Army's Special Service (ASSG) மற்றும் Pakisthan Rangers படைகள் கடத்தப்பட்ட விமானத்தையும் அந்த விமான நிலையத்தையும் சூழ்ந்தனர். உலகமும் பயணிகளின் உறவுகளும் இந்நிகழ்வை கவணிக்கத் தொடங்கினர்.



பதட்டமான சூழ்நிலையில் விமானத்திலிருப்பவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் கொடுக்கும் தன் கடமையைச் செய்ய நீர்ஜா தீவிரவாதிகளிடம் கேட்டுக் கொண்டார். விமானத்திலிருந்த ரேடியோ தொழில் நுட்பத்தை சரிசெய்ய தீவிரவாதிகள் முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில் தகவல்கள் கிடைக்கப் பெறாததால் அடுத்தது என்ன செய்வதென்ற குழப்பத்திற்கு அவர்கள் ஆளாகினர். மேலும் விமானத்தை கடத்திக்கொண்டு சென்று 9/11 சம்பவம்போல எங்காவது வெடிக்க வைக்கும் அவர்களின் திட்டமும் நீர்ஜாவால் விணாகியிருந்தது. நேரம் கடந்துகொண்டே போக பாகிஸ்தானின் அதிரடிப்படையினர் தாக்குதலுக்கு தயாராகினர். தீவிரவாதிகள் செய்வதறியாது குழப்பத்தில் விமானத்தில் இருக்கும் அமேரிக்கர்களை மட்டும் கொண்று தங்களது எதிர்ப்பை தெரிவிக்க நினைத்தனர். நீர்ஜா பயணிகளின் பாஸ்போட்டை மறைத்தும் அதனை மாற்றியும் அமேரிக்கர்களை அடையாளம் காண தாமதம் செய்திருந்தார். ஒரு கட்டத்தில் பயணிகள் சிலரை தீவிரவாதிகள் சுட நம்பிக்கையிழந்த மற்றவர்களுக்கும் தன் சக ஊழியர்களுக்கும் நீர்ஜா அறுதலையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தார்.



விமானம் தீவிரவாதிகளின் கைப்பிடியில் சிக்கி 17 மணிநேரம் கடந்திருந்தது. விமானத்தின் மின்சாரம் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. இது தீவிரவாதிகளுக்கு மேலும் பின்னடைவை தந்தது. தீவிரவாதிகள் விமானத்திலிருப்பவர்களை முடிந்தளவு சுட்டுவிட்டு விமானத்தை எரித்துவிட முடிவு செய்தனர்.  இதனை உணர்ந்த நீர்ஜா விமானத்தின் அவசரகால வழியைத் திறந்து பயணிகளை வெளியேற்றினார். உள்ளே சிறிது கலவரம் நிலவ தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். அதில் ஒருவனின் துப்பாக்கி மூன்று அமேரிக்க குழந்தைகளை நோக்கி குறிபார்க்க நீர்ஜா ஓடிச்சென்று குழந்தைகளை கட்டிகொண்டு அரணாக துப்பாக்கி குண்டுகளை தன் முதுகில் வாங்கிக் கொண்டார். பாகிஸ்தான் படையினர் அதிரடியாக விமானத்திற்குள் நுழைந்து தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் உயிருடன் பிடித்தனர். அதிஷ்டவசமாக விமானத்திலிருந்து மொத்தம் 359 பயணிகள் மீட்கப்பட ஒருவழியாக ஒரு நீண்ட கடத்தல் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் துரதிஷ்டம் 20 பயணிகளுக்கு உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை கொடுத்திருந்தது. அவர்களில் குழந்தைகளை காப்பாற்றிய நீர்ஜாவும் ஒருவர்.

தன் உயிரையும் பொருட்படுத்தாது விமானப் பணிப்பெண்ணாக பயணிகளை மீட்ட நீர்ஜாவிற்கு இந்திய அரசு "அசோக சக்ரா" விருதை வழங்கி கவுரவித்தது. பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் உயரிய விருதான "Nishan - o- Pakistan" விருதை வழங்கியது. "Justice of Crime" என்ற அமேரிக்காவின் விருதும் மறைந்த நீர்ஜாவிற்கு கிடைத்தது. நீர்ஜா பணிபுரிந்த Pan American World Airways நிறுவனம் வருடந்தோறும் சிறந்த விமானப் பணிப்பெண்களை தேர்ந்தெடுத்து "Neerja Bhahot Award " என விருது வழங்கி நீர்ஜாவை இன்றளவும் கௌரவித்து வருகிறது. அந்த துணிச்சல் மிக்க 23 வயது பெண் நீர்ஜாவின் கடைசி 17 மணிநேரம்தான் இந்தத் திரைப்படம்.


நீர்ஜாவின் மறைவிற்குப் பிறகு அவரது சகோதரன் அனிஷ் (Anish Bhanot) அவரது நினைவுகளை "The Neerja I knew " என புத்தகமாக வெளியிட்டார். அதனைத் தழுவியும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலும் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்  Ram Madhvani. நீர்ஜாவாக நடித்த சோனம்கபூர் நிஜத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். பதட்டமான சூழ்நிலை, நீண்ட நேர காத்திருப்பு, அடுத்தது என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு, கடைசி நிமிட கலவரம் என நிஜ கடத்தல் நிகழ்வைப் போலவே திரைக்கதையும் பயணிக்கிறது. அதற்கு Mitesh Mirchandani யின் ஒளிப்பதிவும் Vishal Khurana இசையும் பக்கத்துணையாக இருக்கிறது. நமக்குத் தெரியாத கதைகள் சுவைக்க ஏராளமாக இருக்கிறது. நாம்தான் அரைத்தமாவையே அரைத்து வெறும் சக்கையை சுவைத்துக் கொண்டிருக்கிறோம் என இது போன்ற திரைப்படங்களை பார்க்கும்போது தோன்றுகிறது. கொஞ்சம் புதுமையை விரும்பினால் தாராளமாக இந்த நீர்ஜாவை சுவைக்கலாம்.