பரிசு.




தியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்டுவந்த குறுநில மன்னன். தகடூர் என்பது தற்போது தருமபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியாகும். அந்த அதியமானிடம் பரிசு பெறுவதற்காக "ஔவையார்" பாடல் ஒன்றை எழுதிக்கொண்டு சென்றார். அந்த காலகட்டத்தில் பரிசு பெறுவதற்காக மன்னனைப் புகழ்ந்து பாடல் எழுதுவது புலவர்களின் வழக்கம். அவற்றை வைத்துக்கொண்டு சில புலவர்கள் தம் பானையை வளர்த்தார்கள், சில புலவர்கள் தமிழை வளர்த்தனர். அந்த பாடல்களைக் கேட்டு சில மன்னர்கள் உள்ளம் குளிர்ந்து பரிசுகளை வாரியிறைத்து கஜானாவையே காலி செய்தனர், சில மன்னர்கள் இதனை தமிழ்த்தொண்டு என நினைத்து பிற்கால சந்ததிகளுக்கு உதவும் என்று சேமித்து வைத்தனர். ஔவையாரும் அதியமானும் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்.


ஔவையாரைப்பற்றி சொல்லத் தேவையில்லை தமிழுக்காக தமிழே என வாழ்ந்தவர். அதியமானும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்று சிறந்த வீரனாக விளங்கினாலும் தமிழுக்காக பல தொண்டுகளை செய்து வந்தான். சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகியவற்றில் கூட அவனைப்பற்றிய குறிப்புகள் உள்ளது. பரணர், மாமூலனார், அரிசில்கிழார், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார் போன்ற புலவர்களும் அவனைப்பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள். இதனையும் தவிர்த்து அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஔவையாருக்கும் அதியமானுக்கும் இடையே இருந்த அன்பும் அலாதியானது. ஒருமுறை தனக்கு கிடைத்த சாகாவரம் பெற்ற நெல்லிக்கனியை நாம் சாப்பிட்டு என்ன செய்யப்போகிறோம் என்று மிளகாய்ப்பொடி தூவி தமிழ் தொண்டு செய்யும் ஔவையாருக்கு கொடுத்தவன். அத்தகையை சிறப்பு வாய்ந்த அதியமானிடம் பரிசுபெறத்தான் ஔவையார் சென்றிருந்தார்.

ஔவையார் இயற்றிய பாடலை கேட்ட அதியமான் மெய்மறந்து போனான். Excellent, Mind blowing சும்மா கிழி கிழி கிழித்துவீட்டீர்கள் என மானாட மயிலாட, வாயார புகழ்ந்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டான். அயல்நாட்டு சுற்றுப்பயணம், எதிரி நாட்டு ஊடுரூவல், கருப்புப்பணம் ஒழிப்பு, டிஜிட்டல் வர்த்தகம், பற்றாக்குறைக்கு மணிக்கு ஒருமுறை பேஸ்புக், டுவிட்டரில் எதாவது அறிக்கை விடவேண்டும் என ஆயிரத்தெட்டு வேலைகள் அவன் தலைக்குமேல் இருந்தது. அதியமான் மிகவும் நல்லவன்தான். இல்லை என வருபவர்க்கு வாரிவாரி வழங்குபவன் ஆனால் இந்தமுறை ஔவையாருக்கு பரிசு தராமல் ஒரு லைக் மட்டும் போட்டுவிட்டு காலம் தாழ்த்தினான். மற்ற புலவர்களாக இருந்தால் இந்த கால தாமதத்திற்கு கோபப்பட்டு மன்னனை சபித்து நீ கல்லாக சமைவாய், மண்ணாக மடிவாய், உன் கஜானாவிற்கு ரெய்டு வர, உன் ஆட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலைய, என ஏதாவது சாபம் விட்டுருப்பார்கள். ஔவையார் அமைதியானவர் அதனால் ஏடிஎம் வாசலில் நிற்பவர்களைப்போல் பொறுமையாக காத்திருந்தார். ஆனால் அவர் மனம் கேட்கவில்லை மன்னன் ஏன் இப்படி செய்கிறான் என்ற எண்ணம் உறுத்தியது. "அதியமான் அப்படிப்பட்டவன் இல்லை ஏதோ பிஸியாக இருக்கிறான் தமக்கு தரவேண்டிய பரிசை நிச்சயம் தருவான் அதுவரை பொறு மனமே" என தனது மனதை தேற்றிக்கொள்ள அப்பொழுது அவர் இயற்றியதுதான் இந்தப் பாடல்.


ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பன்னாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல்தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.


பொருள்.

ஒரு நாள் அல்ல இரண்டு நாள்கள் அல்ல நான் பலரோடு கூடிப் பல நாட்கள் சென்ற போதும் முதல் நாள் போல அன்பு செய்தவன் அவன். அழகிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்ட யானையையும், அழகு பொருந்திய தேரையும் கொண்ட அதியமான் அஞ்சியிடமிருந்து பரிசில் பெறும் காலம் நீண்டதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் யானையின் தந்தங்களுக்கிடையே வைக்கப்பட்ட உணவு உருண்டை எப்படி தவறாமல் யானைக்கு உணவாக சென்று சேருமோ அதுபோல அதியமான் தரவேண்டிய பரிசும் நம் கைகளை வந்தடையும். அதை ஆசையுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் மனதே! நீ வருந்த வேண்டாம்! அதியமானின் முயற்சி வாழ்க.