பூ பார்வதி.



டைட்டான உடை பொருந்தும் அளவிற்கு வெயிட்டான கதாபாத்திரம் பொருந்தும் வாய்ப்பு பல நாயகிகளுக்கு கிடைப்பதில்லை. அங்கங்களைத் தவிர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவங்களை ரசிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைப்பதில்லை. இவை இரண்டும் கிடைக்கப்பெற்ற நல்ல கதைகளும் வெகு குறைவு. இருந்தும் சில திரைப்படங்களில் அரிதாக பூக்கும் "பூ" போல சில நாயகிகள் தோன்றி, ஒரு கதாபாத்திரத்தை நடிப்பால் மெருகேற்றி, கதையோட்டத்தை அழகாக்கி ரசிகர்கள் மனதில் நின்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட நாயகிகளில் ஒருவர்தான் "பார்வதி மேனன்".

கேரளாவில் உள்ள கோலிக்கோட்டில் பிறந்தவர் பார்வதி (Parvathi Tiruvoth Kottuvata). கிரன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவருக்கு 2006-ல் "Out of Syllabus" என்ற மலையாளத் திரைப்பட வாய்ப்பு வந்தது. முதல்படமே இளம்வயது பெண்களின் கர்பத்தை விளக்கும் அழுத்தமுள்ள கதையாக அமைந்தது. அதில் நடித்த மூன்று நாயகிகளில் தன் பங்கிற்கு நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் பார்வதி. அதன்பிறகு வெளிவந்த Notebook, Flash, Milena போன்ற திரைப்படங்கள் அவரைப்பற்றி பேச ஆரம்பித்தது. 2008-ல் சசியின் இயக்கத்தில் வெளிவந்த "பூ" தமிழ் திரைப்படத்தில் அப்பாவி மாரியாக நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தார். ஊறுகாய் போன்ற கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு கதைத்தேர்வில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறிய வேடங்களில்கூட தனது தனி முத்திரையை பதித்துவருகிறார். இரண்டு பிலிம்பேர் விருதுகள், இரண்டு மாநில விருதுகள் என அவரது விருதுகளுக்கும் பஞ்சமில்லை. Prithive, City of God, மரியான், Bangalore Days என விரல்விட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும், ஓ! பார்வதி மேனனா நடிப்பு நன்றாக வரும் என்ற அளவிற்கு நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கிறார்.

சுருள்முடி, வளைய மூக்குத்தி சகிதம் நவநாகரீகப் பெண்ணாக சமீபத்தில் அவர் நடித்த சார்லி திரைப்படத்தை பார்த்தேன். அதற்குமுன் 60 -களின் கேரள பெண்ணாக காஞ்சனமாலாவாக நிஜக்கதைக்கு உயிரூட்டிய அவரது எண்ணு நின்டே மொய்தீன் திரைப்படத்தை பத்துமுறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அடடா! நேர்த்தியான நடிப்பு, அரிதாக பூக்கும் பூ போல அவர் ஒரு சிறந்த நடிகை எனத் தோன்றியது. அதனை பார்வதி மேனனின் பாடல்கள் சிலவற்றோடு கொஞ்சம் அசைபோடுகிறேன்.

Aavaram Poo - Poo.

Kaathirunnu - Ennu Ninte Moideen.

Innum Konjam Naeram - Maryan.


Mukkuathe Penne - Ennu Ninte Moideen.

Pularikalo - Charlie.

Ethu Kari Raavilum - Bangalore Days.