இவளே கானல்.




ன்கு குளித்துமுடித்துவிட்டு மேக்கப் போட்டுக்கொண்டு Axe அடித்து கமகமக்கும் வாசனையுடன் தலைவன் (ஹீரோ) தலைவியைத் (ஹீரோயின்) தேடி அவள் வசிக்கும் நெய்தல் நிலம் என சொல்லக்கூடிய கடற்கரை பகுதிக்குச் செல்கிறான். முதல் பார்வையில் மனதிற்குள் மணியடித்து மூளைக்குள் பல்பை எரியவிட்டு காதினில் சங்கை ஊதிய அவளைப் பார்க்காமல் அவனால் இருப்புக்கொள்ள முடியவில்லை. அங்கு சுற்றித்திரியும் அவனை தலைவியின் தோழி பார்த்துவிடுகிறாள். சங்க இலக்கிய காதல்களில் தோழி மிக முக்கியமானவள். காதலுக்காக தூது சென்று தலைவியின் நிலையை தலைவனுக்கும், தலைவனின் நிலையை தலைவிக்கும் எடுத்துரைக்கவும், தேவையானபோது இருவருக்கும் அறிவுரை வழங்கவும் என இரண்டு இலக்கிய இதயங்களுக்கிடையே 40 சதவீத கமிஷன் இல்லாமல் பாலம் கட்டுபவள் தோழி. அத்தகைய தோழி வெள்ளையும் ஜொல்லையுமாகத் திரியும் இந்த கொக்கு அந்த மீனைத்தான் தேடிவந்திருக்கும் என அறிந்துகொள்கிறாள்.


தலைவனோ ஊரிலிருக்கும் எல்லா வங்கிகளிலும் கடனை வாங்கிக்கொண்டு திருப்பிக் கட்டாமல் முடிந்தால் பிடித்துக்கொள் என ஆஃப் டிராயருடன் உலகம்சுற்றி வலம்வரும் அளவிற்கு வசதிபடைத்த தொழிலதிபர் ஒருவரின் மகன். தலைவியோ, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று புயல் வருமா? இலங்கை கடற்படை பிடிக்குமா? கச்சத்தீவு யாருடையது? என உயிரை கையில் பிடித்துக்கொண்டு கரை திரும்பும் சாதாரண மீனவனின் மகள். சாதாரண நிலையில் இருக்கும் தலைவி மிகவும் வசதிபடைத்த தலைவனை சந்தித்து கண்ணும் கண்ணும் நோக்கி, காதல், கத்திரிக்காய், புடலங்காய், பூசனிக்காய் என முற்றி துன்பக்கடலில் விழுந்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்சிக்கு வந்துவிடுவாளோ என தோழி அச்சப்படுகிறாள். முன்பே சொன்னதுபோல் காதலுக்கு தூது மட்டுமில்லாமல் நல்லது கெட்டதையும் தோழி அறிவாள் அதனால் அவர்கள் சந்திப்பதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டுமென நினைக்கிறாள். திருவிழாவில் காணமல் போனவனைப்போல அங்கு திரியும் தலைவனிடம் சென்று தலைவியின் நிலையை உரைத்து "உன் வாழ்க்கை வேறு எங்கள் வாழ்க்கை வேறு, இதெல்லாம் சரிபட்டு வராது பேசாமல் வந்த வழியே போய்விடு "என மிகவும் நாசுக்காக கூறுவதாக அமைந்தது இந்தப் பாடல்.

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீர் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

பொருள்.

என் தோழியோ கடற்கரை சோலையின் அருகில் அழகிய சிற்றூரில் உள்ள, கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் (மீனவன்) மகள். நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடைவீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்து செல்லும் தேரை உடைய (அந்த கால Benz, BMW, Audi கார்) பணக்காரரின் அன்பு மகன். கொழுத்த சுறா மீனை அறுத்து காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்? இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது. அதனால் நிற்காமல் போய்விடு. பெரிய கடல் தரும் பயனால் நாங்கள் எளிமையான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம். எங்கள் நடுவிலும் உயர்ந்தவர்கள் உள்ளனர்.