முதல் கேபிள் டிவி ஆப்பரேட்டர்.




தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பது தொலைக்காட்சி. என்னதான் தொல்லைக்காட்சியாக இருந்தாலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவம் அடுத்த நிமிடம் நமது வரவேற்பரையில் காணக்கிடைப்பது என்பது பிரம்மிக்கத்தக்க விஷயமாகும். அதற்காக 1008 தொலைக்காட்சி சேனல்கள் கேபிள் அல்லது டிஷ் தொழில் நுட்பத்தில் ஒரு சிறிய ஒயரின் மூலம் நம்மைத் தேடி வருகின்றன. இதற்கெல்லாம் "ஜான் வால்சன்" (John Walson Jr) என்பவரின் மனதில் உதித்த சிந்தனையே காரணம். இவர்தான் "Community Antenna Television" (CATV) என்று சொல்லக்கூடிய கேபிள் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தின் சூத்திரதாரி ஆவார்.

தொலைக்காட்சி பிரபலமடைந்து ஆன்டெனா மூலமாக (பழைய தூர்தர்ஷன் போல) சில சேனல்கள் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலத்தில் அமேரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் Mahanoy நகரத்தில் "General Electric Applience" என்ற கடையை நடத்தி வந்தார் ஜான் வால்சன். 1947-ஆம் ஆண்டில் தொலைக்காட்சி என்ற சாதனம் பல நகரங்களில் விற்பனையில் கொடிகட்டி பறக்க, அதனை வாங்கி தன் ஊரில் விற்க நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த காலகட்டத்தில் அமேரிக்காவில் "Philadelphia" தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பட்ட நிகழ்ச்சிகளை வால்சன் கடை வைத்திருக்கும் நகரத்தை சேர்ந்தவர்கள் பார்க்க இரண்டு மலைகள் தடையாக இருந்தது. அதாவது தொலைக்காட்சி நிலையத்திலிருந்து பெறப்படும் அலைவரிசைகளை இரண்டு மலையைத் தாண்டி 86 வான் மைல்கள் தொலைவிற்கு பிறகு ஆன்டெனா மூலமாக பெற அந்த நகர மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அதனால் தொலைக்காட்சி சாதனம் அவர்களுக்கு கனவாக இருந்தது அதுவே வால்சன் கடையின் வியாபாரத்தையும் பாதித்தது. தனது வியாபாரத்தை பெருக்க நினைத்த வால்சன் நகரத்தை பிரிக்கும் இரண்டு மலையில் ஒன்றில் சக்திவாய்ந்த ஆன்டெனாவைப் பொருத்தினார். அதிலிருந்து அலைவரிசையைப் பெற்று "Connecting Signal Booster" என்ற கருவியின்மூலம் பிரித்து தடினமான ஒயர்களின் மூலம் மரங்களின் வழியே கொண்டுவந்து நகரத்து வீடுகளுக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளை காண்பித்தார். ஐந்து பத்து எனத் தொடங்கிய அவரது கேபிள் இணைப்பாளர்கள் நகரம் முழுவதும் பரவினர். சீரான துள்ளியமான காட்சிகளுக்காக Connecting Signal Booster -ல் சில மாற்றங்களையும் தற்போது நாம் பயன்படுத்தும் "Coaxial" கேபிளையும் அவரே வடிவமைத்தார். அதன் பிறகு அவரது கடையில் தொலைக்காட்சியின் விற்பனை அமோகமாக இருந்தாலும் அவர் கண்டுபிடித்த தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டது. சொந்தமாக "Service Electric Cable TV (SECTV) என்ற நிறுவனத்தை தொடங்கி பென்சில்வேனியா மாகாணம் வரை தனது கிளைகளைப் பரப்பினார். பிற்காலங்களில் அனைவராலும் மதிக்கப்பட்டு அமேரிக்காவின் "The National Cable Television Association" தலைவராக பதவி வகித்த இவர் 1993 ஆம் ஆண்டு மறைந்தார். கேபிள் டிவி என்ற தொழில் நுட்பத்திற்கு மட்டுமில்லாமல், அரசியல்வாதிகள், நடிகர்கள், சாராயம் விற்கும் தொழிலதிபர்கள் முதல், பில்லி சூனியம் வைக்கும் சாமியார்கள் வரை பெட்டிக்கடை மாதிரி தனியாக ஆளுக்கு ஒரு டிவி சேனல்களைத் தொடங்கவும் வால்சனே காரணமாக விளங்கினார். மேலும் "தம்பி அந்த சேனல் ஒழுங்கா தெரியல" என்றதும் ஒயர்களை சரிசெய்ய கூரை மேல் ஏறிய உலகின் முதல் கேபிள் ஆப்பரேட்டரும், "சார் போன மாசம் கேபிள் காசு" என முதன்முதலாக கதவைத் தட்டி கேட்டவரும் இவரே.