என் தமிழ் - புதிய பகுதி அறிமுகம்.


முதுகுத்தண்டு பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நவீன கருவிகளைக் கொண்டு மிக எளிமையாக சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவதைப்போல் அறுவைசிகிச்சை செய்து மறுநாளே நீங்கள் போகலாம் என அனுப்பிவைத்தனர் (கவணிக்க அந்த மருத்துவமனை அப்பல்லோ அல்ல). இதுவரை முன்றுமுறை பஞ்சர் ஒட்டியிருக்கிறேன் இந்தமுறை எல்லாம் நல்லபடியாக தெலுங்கு சினிமாவைப்போல் முடிந்தாலும் சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடக்க இயலாமல் போனது. நண்பர் ஒருவர் உடல்நலம் சீரகும் வரை எங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார், எனக்காக அவரது வீட்டில் அவரது மகள் படிப்பதற்காக பயன்படுத்தும் அறையை தனியாக ஒதுக்கியிருந்தார். காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாமல் அசைவின்றி சிலநாட்கள் கிடைக்கப் பெற்ற வரத்தை விட அங்கு அவரது வீட்டில் நேரத்தை கொல்லுவதுதான் பெரும்பாடாக இருந்தது. புத்தகத்தை கட்டித் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. அறையிலிருந்த வாரப்பத்திரிக்கைகள் மற்றும் சில புத்தகங்களை ஓரே நாளில் எந்திரன் ரோபோ கணக்காக முடித்து தூக்கியெறிந்தேன். தமிழ் இலக்கியம் படிக்கும் நண்பரின் மகளின் பாட புத்தகங்கள் மட்டும் அங்கு மீதமிருந்தது. அவைகள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு என எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கிய புத்தகங்கள். வேறு வழியில்லாத அரசியல்வாதியைப் போல் தமிழை கையில் எடுத்தேன். அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களும் மூன்றுவேளை உணவு, முதுகுவலி, முத்தமிழ் மட்டுமே.


மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்து பள்ளிப்பருவத்தில் படித்த அதே தமிழ். உடலியலும் நுண்ணுயிரியலும் வேதியியலும் சலிப்புத்தட்டாமல் இருக்க கல்லூரிக் காலங்களில் தமிழ் அய்யா பாட்டுப்பாடி நடத்திய அதே தமிழ். "இலக்கியமா? அய்யய்யோ! அது வேற ஏரியா" என ஹாரி பாட்டரை கையில் பிடித்தபடி நூலகங்களில் ஒதுக்கி வைத்த அதே தமிழ். இந்தமுறை, எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் படுக்கையில் படுத்தபடியே அவற்றை வாசித்து கரைந்த பொழுது வேறுவித கோணத்தில் எனக்குத் தெரிந்தது.

காதல், காமம், வீரம், பக்தி, இல்லறம், துறவு, அரசியல், வணிகம் என வாழ்வின் அத்தனை அம்சங்களையும் அழகாகச் சொன்ன இலக்கியங்கள் வேறு எந்த மொழியிலாவது உண்டா? என்ற கேள்வி மனதில் எழுந்தது. அப்படி இருந்தால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்மொழியில் எழுதப்பட்ட இந்த இலக்கியங்களைத் தழுவியே இருக்கக்கூடும் என மனதிற்கு பட்டது. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ்வின் அனைத்து சுக துக்கங்களையும் கடந்து வாழ்ந்து வந்த பண்டைய தமிழர்களின் வாழ்க்கைக்கு இந்த சங்க இலக்கியங்களே சான்று. ஆனால் நாம் அவற்றையெல்லாம் மறந்து ஜல்லிக்கட்டையும் வேட்டிக்கட்டையும் மட்டுமே பண்பாடக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என உறுத்தியது. Apes -லிருந்து (குரங்கு இனம்) வந்த மனிதன் Apps -க்கே (Applications) சென்று விட்ட ஆண்ராய்டு மயமான யுகத்தில் இருக்கும் நாம், அவர்களின் நெறிமுறையான வாழ்க்கையை கடைபிடிக்க முடியுமா? என்பதெல்லாம் கேள்விக்குறியான விஷயமாக இருந்தாலும், நம் முன்னோர்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை நினைத்து ஆனந்தப் படலாம். அப்பவே நாங்கெல்லாம் அப்படி என மார்தட்டிக் கொள்ளலாம். அதைவிட தொன்மையான ஒரு மொழியின் அழகை அதன் சுவையை அசைபோடலாம் எனத் தோன்றியது.

சினிமா, பாடல்கள், புத்தகம், அறிவியல் என ரசித்தவைகளை எனது பக்கங்களில் எழுதிவரும் நான், ஏன் இந்த சங்கத் தமிழ் இலக்கியங்களை கொஞ்சம் தொட்டுப் பார்க்கக் கூடாது? என நினைத்தேன். ஒரு நல்ல கவிதையைப் போல, அழகிய புகைப்படங்களைப் போல, ரசிக்கவைக்கும் நகைச்சுவை துணுக்குகளைப் போல சங்கத் தமிழ் இலக்கியத்தை ஏன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் மனதில் அலையடிக்கத் தொடங்கியது. ஒரு கால் மறந்தும், சின்ன லா-வா பெரிய ளா-வா என குழம்பியும், எங்கு கமா வைக்க, எங்கு புள்ளி வைக்கத் தெரியாது சிலநேரங்களில் எழுத்துப் பிழையோடு தட்டுத்தடுமாறும் எனக்கு இது சரிபட்டுவருமா? என்ற அச்சம் இருந்தது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்க சாதாரண அணில் என்ன செய்துவிட முடியும் என்ற தயக்கமும் இருந்தது. "அதெல்லாம் ஒன்னும் ஆகாது உன்னோட ஸ்டைலில் சும்மா அடிச்சி தூள் பண்ணு மாமு" என லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு இல்லாத மீசையைத் தடவி, உள்ளுக்குள் இருந்த லோக்கல் ஆசாமி தைரியம் கொடுக்கத் தொடங்கினான். அந்த லோக்கல் ஆசாமியுடன் நான் ரசித்த சங்க இலக்கிய தமிழ்பாடல்கள் சிலவற்றை "என் தமிழ்" என்ற இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தத் தொடங்குகிறேன்.