☰ உள்ளே....

மன்மதலீலை - ஒரு நாடோடியின் கதை பகுதி - 4.
1928-ஆம் ஆண்டு சாப்ளினின் இரண்டாவது மனைவி லின்டா கிரே விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல் ஏறினார். பிரபலங்களின் வழக்குகள் என்றால் பத்திரிக்கைகளுக்கு கொழுத்த தீணியாக அமைந்துவிடுவது வாடிக்கையான ஒன்று. அதிலும் பிரபலங்களின் படுக்கையறையை ஆராய்ந்து அசைபோடுவது தனிசுகமே. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று காத்திருந்த பத்திரிக்கைகள் சாப்ளினைப் பற்றி தாறுமாறாக எழுதத் தொடங்கின. ரசிகர்களின் வாய்க்கு மெல்ல நல்ல அவலும் கிடைத்திருந்தது. இதனையும் தவிர்த்து சாப்ளினின் புகழை கெடுக்கவும் சிலர் முயன்று வந்தனர். அவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து அதுவரை இருட்டாக இருந்த சாப்ளினின் அந்தரங்க அறையில் முதன்முறையாக LED பல்பை மாட்டினர்.

சாப்ளின் 1918 ஆம் ஆண்டு தன்னுடன் திரைப்படங்களில் நடித்த "மில்ட்ரெட் ஹாரிஸ்" என்ற நடிகையை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்களின் அன்புக்கு பிறந்த குழந்தை "நார்மன் ஸ்பென்ஸர்" இறந்துவிட இருவருக்குமிடையே கருத்து வேறுபாடும் இடைவெளியும் விழுந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். "முதல் குழந்தை கடவுளின் வரம்" என சொல்வார்கள் அந்த வரம் சாப்ளினுக்கு கிடைத்தாலும் நீண்டநாள் நிலைக்கவில்லை. மகன் இறந்த சோகம் சாப்ளினை வெகுவாக பாதித்திருந்தது அந்த தாக்கத்தினை தி கிட் என்ற ஒப்பற்ற திரைப்படத்தை எடுத்து அவர் தேற்றிக்கொண்டார். தி கிட் திரைப்படம் வெற்றிக்குப்பின் சாப்ளின் முழுநீள திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கினார். அதன் விளைவாக வெளிவந்த வுமன் ஆஃப் பாரிஸ் என்ற திரைப்படம் வெகுவாக பலரின் பாரட்டுகளைப் பெற்றது அதனைத் தொடர்ந்து கோல்டு ரஷ் என்ற திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்த நேரம், திரைப்படம் வளர அதில் நடித்த நடிகை லின்டா கிரேவின் வயிறும் வளரத் தொடங்கியது. அவசர அவசரமாக அவரை சாப்ளின் திருமணமும் செய்து கொண்டார். சார்லஸ் சாப்ளின், சிட்னி சாப்ளின் என்ற இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின் லின்டா கிரே நீதிமன்ற வாசலை மிதித்தாள். மேலும் சாப்ளினைப் பற்றிய குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். வளர்ந்த நாடுகளில் திருமண பந்தம் என்பது தாமரை இலை தண்ணீர் போல தொடரும் பந்தம் என்பதற்கேற்ப சாப்ளின் நஷ்ட ஈடாக 8272414 அமேரிக்க டாலர்கள் கொடுத்து விவாகரத்து பெற்றார். சாப்ளினின் அந்தரங்கமும் அப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது.

முறிந்துபோன திருமண பந்தங்களில் சாப்ளினுக்கு நம்பிக்கை குறைந்திருந்தது. தனது வாழ்க்கைப் பயணத்தில் அடுத்தடுத்த சாவல்களை அவர் சந்திக்கவும் நேர்ந்தது. கலை சேவையில் தி சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ் போன்ற படங்களை சாப்ளின் தயாரித்து வெற்றிகண்டார். அவரது புகழ் மேலும் பரவத் தொடங்கியது. அவருடன் மாடர்ன் டைம்ஸ திரைப்படத்தில் நடித்த யூத வம்சத்து பெண் "பௌலட் கோடார்ட்" மீது சாப்ளினுக்கு ஈர்ப்பு வந்தது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றக் கிளம்பினார்கள். வெளி உலகத்திற்கு மறுத்தாலும் சிலவருடங்கள் இவர்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார்கள். இதனையும் தவிர்த்து அந்த காலகட்டத்தில் அவருடன் சேர்ந்து நடித்த நடிகைகள் "போலாநகரி, ஜார்ஜியா, மரியோன் டேவிஸ், மே ரீவ்ஸ்" என பலருடனும் சாப்ளின் கிசுகிசுக்கப்பட்டார். கதை திரைக்கதை இயக்கம் நடனம் பாட்டு இசை என சினிமாவின் அனைத்து பிரிவிலும் சகலகலா வல்லவனாக விளங்கிய சாப்ளின் திரைக்கு வெளியே மன்மதலீலையிலும் கலக்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவையெல்லாம் தன் திரையுலக வாழ்க்கையை பாதிக்காமல் சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரம் சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை வெளியிட்டு ஓய்விலிருந்தார். தன் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு பெண்ணை அவரது உதவியாளர் அறிமுகப்படுத்தி வைத்தார். 17 வயதே நிறம்பிய அவளை கண்டதும் சாப்ளினின் இதயம் போட்டிருந்த கோட்டிற்கு வேளியே வந்து சிறிதுநேரம் துடித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று அடங்கியது. நோபல் பரிசு மற்றும் புலிட்சர் பரிசை வென்ற நாடக எழுத்தார் யூஜின்-ஓ-நீல் என்பவரின் மகளான "ஊநா-ஓ-நீல்" என்ற அந்த பெண்ணை வசிகரிக்க சாப்ளினுக்கு நீண்ட நாட்கள் தேவைப்படவில்லை (தன் நடிப்பால் உலகையே கவர்ந்தவராயிற்றே). ஆனால் அவளது தந்தை முரண்டு பிடிக்க ஊநாவிற்கு பதினெட்டுவயது வரும்வரை சாப்ளின் காத்திருந்தார். பதினெட்டாவது வயது பிறந்தநாளை கொண்டாடி கேக் ஊட்டியதும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். 18 வது ஊநாவை கைபிடிக்கும்போது சாப்ளினுக்கு வயது 53.

சாப்ளினின் வாழ்க்கையை ஆராய்ந்து எழுதியவர்கள் அவரது தொடர்பிலிருந்த பெண்களின் எண்ணிக்கை அவர் நடித்த படங்களை விட மூன்று மடங்கு என குறிப்பிட்டிருந்தனர். சாப்ளின் சாதாரண நிலையிலிருந்து வந்ததாலும், தோற்றத்தில் ஐந்தடி மட்டும் கொண்டிருந்ததாலும் அவருக்குள் தாழ்வு மனப்பான்மை மேலோங்கி இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 28 வயதில் மில்ட்ரெட் ஹாரிஸ், 34 வயதில் லின்டா கிரே, 46 வயதில் பௌலட் கோடார்ட், 53 வயதில் ஊநா-ஓ-நீல் என சாப்ளின் திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்டவர். சாப்ளின் தன் வாழ்வில் சந்தித்த அனைத்து பெண்களிடமும் ஒரே ஒருவரைத்தான் தேடினார். வண்ணக் கனவுகளோடு ஏதுமற்றவனாய் இளமைப் பருவத்தில் லண்டன் வீதிகளில் சுற்றித்திரிந்தபோது தன்னை வேண்டாம் என உதாசீனப்படுத்திய அவரது முதல் காதலி "ஹெட்டி".

துணுக்குச் செய்தி ..

சாப்ளின் தன் கடைசி காலத்தில் தன் மனைவி ஊநா-ஓ-நீல் மற்றும் எட்டு குழந்தைகளுடன் ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தார். அவரது குழந்தைகளில் முதல் பெண்குழந்தையான ஜெரால்டின் என்பவரும் பின்னாளில் நடிகையாக விளங்கினார். சாப்ளினைப் பற்றிய ஆவணப்படத்தில் அவரது தாய் ஹென்னாவாக நடித்து தன் பாட்டிக்கு கௌரவத்தையும் அவர் தேடித் தந்தார்.

சாப்ளினின் திரைப்பட வரிசையில் அடுத்து

19. Mabel's Married Life


20. Laughing Gas (1914)


21. The Property Man (1914)


22. The Face on the Bar room Floor (1914)


23. Recreation (1914)


24. The Masquerader (1914)


25. His New Profession (1914)


26. The Rounders (1914)