மதுரமான நகரினில் சிவபெருமான்.




"ஆயிரம் பொற்காசுகள்... அய்யோ ஆயிரம் பொற்காசுகள்.... சொக்கா"- இந்த வசனத்தையும் தருமி நாகேஷையும் திருவிளையாடல் திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சிவாஜிகனேசன், மன்னிக்கவும் சிவபெருமான் விறகுவெட்டியாகவும் புலவராகவும் மீனவனாகவும் கெட்டப் மாற்றிக்கொண்டு திருவிளையாடல் நடத்திய திரைப்படம். தொன்மை வாய்ந்த இந்தியத் திருநாட்டில் கடவுள்களுக்கு பஞ்சமில்லை, அந்த கடவுள்களைப் பற்றிய புராணக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து வாய்வழிக் கதைகளாக சொல்லப்பட்ட புராணக் கதைகளை, உண்மையா? பொய்யா? என காலிபிளவர் மூளையை கசக்கி ஆராய்ச்சி செய்யாமல் அதனை கேட்பதும், பார்ப்பதும், படிப்பதும் அதில் உள்ளம் கரைந்து போவதும் தனி சுகமே.

முன்பொரு காலத்தில் பரஞ்சோதி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். தமிழ் மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்ற அவர் சிவபெருமானின் பக்தராக விளங்கினார். ஊர்ஊராகச் சென்று சிவபெருமானின் புகழை பாடிக்கொண்டிருந்த அவர் மதுரை மாநகரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அலைந்து திரிந்து கவியெழுதி களைத்துப்போன அவரது உடல் Please give me rest என கேட்க, வரும் வழியில் ஒரு சத்திரத்தில் தங்கி காலை நீட்டி விட்டத்தைப் பார்த்து சாவகாசமாக உறங்கத் தொடங்கினார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரது கனவில் Mr. பரஞ்சோதி May i come in என மதுரை மீனாட்சி கிராபிக்ஸில் தோன்றினாள். I know who you are "தங்களின் புலமையை நான் அறிவேன், மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை பதிவு செய்வதற்காக நான் உங்களை தேர்த்தெடுத்துள்ளேன் உங்களின் எழுத்திற்கு துணையாக நானும் இருப்பேன்" டீலா? நோ டீலா? எனக்கேட்டு வழக்கமாக உதிக்கும் டிரேட்மார்க் புன்னகையை வீசிவிட்டு கிராபிக்ஸ் கலைந்தார். கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த பரஞ்சோதி முனிவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஓடினார். அங்கு வீற்றிருக்கும் மரகத பச்சை வண்ணம் கொண்ட அம்மனை நோக்கி இருகரம் கூப்பி "அன்னையே பெருமானின் திருவிளையாடல்களை எழுதும் பாக்கியம் கிடைத்ததற்கு பெருமிதம் கொள்கிறேன்" என்ன தவம் செய்தேன் என்னதவம் செய்தேன்" I am so Happy. அடியேனின் அறிவை நீ நின்று வழி நடத்துவாயாக எனக் கூறி வணங்கிவிட்டு கொண்டுவந்த பனை ஓலையில் பிள்ளையார்சுழி போட்டு எழுதத் தொடங்கினார். மேலே குறிப்பிட்ட நாம் பார்த்து ரசித்த திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் புராணக் கதைகளையும், சிவபெருமானைப் பற்றி உலாவரும் ஏனைய கதைகளையும் இந்த பரஞ்சோதி முனிவர் எழுதியதாக நம்பப்படுகிறது. அவர் எழுதிய பனை ஓலைகள் கூகுளில் தேடியும் கிடைக்காததால் பல ஆண்டுகளாக அவை வாய்வழிக் கதைகளாக சொல்லப்பட்டு வந்தன. அவ்வாறு சொல்லப்பட்ட 54 தெய்வீகக் கதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

இந்த கதைகளில் சிவபெருமான் யாசகனாக, துறவியாக, அரசனாக, வணிகனாக, மீனவனாக, வேடனாக, போர் வீரனாக, விறகுவெட்டியாக வேடம் கொண்டு தீமை செய்த வில்லன்களை அழித்து விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளலோகம் என மூன்று உலகங்களைக் காப்பவராக விளங்குகிறார். அதேபோல் சிவபெருமான் பல முகங்கள் கொண்ட கலவையாக இதில் சித்தரிக்கப் பட்டுள்ளார். சிறிய ஊடலில் கோபத்தில் பார்வதிக்கு "மனிதனாய் பிறக்கக் கடவாய்" என திருவாய் உளரி சாபமிட்டு, பிறகு மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவரும் மனிதனாய் பிறப்பெடுத்து பார்வதியை கை பிடித்த காதல் கதையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மென்மையான காதலனாக, குருவாக, பழி தீர்கும் அசுரனாக, கருணை மிக்கவனாக, குறும்புக்காரனாக, அதர்மத்தை Delet செய்து, தர்மத்தை Inbox -ல் வைத்து, வேதத்தை Hard disk -ல் சேமித்து வைப்பவனாக சிவபெருமான் இந்த கதைகள் முழுவதிலும் உலா வருகிறார்.
  • Shiva in the city of Nectar.
  • Preethi Rajha Kannan.
  • மதுரமான நகரினில் சிவபெருமான்.
  • திருமதி.சூரியா சிதானந்த்.
  • ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்.
இல்லத்தரசியான "ப்ரீத்தா ராஜா கண்ணன்" என்பவர் குழந்தைகளுக்கான சிறுகதைகளை எழுதக் கூடியவர். தான் வசிக்கும் மதுரையின் வீதிகளில் அவர் கேட்டு ரசித்து ஆனந்தப்பட்ட சிவபெருமானின் திருவிளையாடல் புராணக் கதைகளை அதே குழந்தைத்தனமான நடையில் எளிமையாக அழகாக ஆங்கிலத்தில் "Shiva in the city of Nectar" என்ற இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இதனை தமிழில் சூரியா சிதானந்த் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். நம்பிக்கை, மதம், அறிவியல் இவற்றைத் தாண்டி வாசிப்பு அனுபவத்தை அழகாக்க தாராளமாக இந்த புத்தகத்தை கையில் எடுக்கலாம்.