☰ உள்ளே....

Queen of Katwe - ராணியம்மா ...ரஷ்யாவின் Khanty Mansiysk நகரம், 7 'C குறைவான வெப்பநிலை, பளபளக்கும் கண்ணாடிச் சுவர், பளிங்குபோல் மிண்ணும் தரை, ஜொலிக்கும் மின்விளக்குகள், சீராக அடுக்கப்பட்ட மேசைகள் கொண்ட அந்த அரங்கத்திற்குள், 148 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மிடுக்கான உடையணிந்த 1304 வீரர்கள் நிறைந்திருக்கும் சூழலில், கருத்த நிறம், மழித்த தலை, ஆணா? பெண்ணா? எனத் தெரியாத தோற்றம், பொருத்தமில்லாத உடை, திருதிருவென விழிக்கும் முழியோடு, தன் சகநாட்டு வீராங்கனை மற்றும் பயிற்சியாளருடன் உள்ளே நுழைந்த "Phiona Mutesi" என்பவளைப் பார்த்த அனைவரும் சற்று முகம் சுழித்தனர். தண்ணீர் கொடுக்கும் சர்வர் உட்பட "யாரைய்யா இவர்களை உள்ளே விட்டது" என ரின் விளம்பரத்தில் வருவதைப்போல பார்க்க, தனக்கான ஒதுக்கப்பட்ட இருக்கைக்குச் சென்று அமர்ந்து உகாண்டா நாட்டிற்காக 39 வது ஒலிம்பியாட் செஸ் போட்டியில்   Phiona Mutesi விளையாடத் தொடங்கினாள். அற்புதமான தொடக்கம், இயல்பான கவணிப்பு, மிகத் துள்ளியமான காய்நகர்த்தல் என முதல் சுற்றில் எளிதாக வெற்றிபெற்ற அவள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குச் சென்று ஆனந்தத்தில் மிதக்கத் தொடங்கினாள். மிகப்பெரிய கட்டிடங்களையும் வசதியான அறையையும் வாய்க்கு ருசியான உணவையும் அவள் பார்ப்பது இதுவே முதல்முறை என்பதே அவளது ஆனந்தத்திற்கு காரணமாக இருந்தது. அறையின் குளியறை ஷவரில் குளித்து கும்மாளமிட்டு, மெத்தையில் ஆட்டம்போட்டு, வயிறுமுட்ட சாப்பிட்டு முடித்து, களைத்துப்போய் ஒரு குழந்தையைப் போல அவள் அன்று தூங்கிப்போனாள் (அவள் அவ்வாறு தூங்குவதும் அதுவே முதல்முறை).

அடுத்தடுத்த நாள், அதே அற்புதமான தொடக்கம், அதே இயல்பான கவணிப்பு, அதே அசத்தலான காய்நகர்த்தல், அதே வெற்றி எனத் தொடர மொத்தம் 7 போட்டிகள் 1.5 புள்ளிகள் பெற்று தனக்கான ஆட்டத்தை Phiona Mutesi முடித்திருந்தாள். ரஷ்யா, சீனா,  அமேரிக்கா போன்ற ஜாம்பவான் நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளைக் கொண்டு குழுப்போட்டியாக நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட்டில் அவள் பெற்ற வெற்றி பெரிதானதாக இல்லையென்றாலும் தடகள போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ளும் மிகவும் பின்தங்கிய உகாண்டா நாடு இதில் கலந்துகொண்டது ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் ஆரம்பத்தில் ஏளனமாக பார்த்த Phiona Mutesi- யை அனைவரும் சற்று கவணிக்கத் தொடங்கினர். அவளது திறமை அனைவரையும் கவணிக்கச் செய்தது. யார் அவள்? அற்புதமாக வெகு இயல்பாக விளையாடுகிறாள்! வருங்காலத்தில் இவளுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என புகழ்ந்து பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் விளையாட்டு ஆர்வலர்களும் பேசத் தொடங்கினர். தான் பெற்ற வெற்றியையும் திறமையையும் செஸ் உலகம் கவணிக்கிறது எனத்தெரியாது உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு வந்து இறங்கிய அவள், பத்திற்குபத்து அறை, ஒரு கால் உடைந்த மேசை, ஒழுகும் மண்ணெண்ணெய் அடுப்பு,  இரண்டு தண்ணீர் பிடிக்கும் பாத்திரம், மூன்று மாற்று உடைகள்,  நான்கு தட்டுகள், ஐந்து குவளைகள், மட்டுமே சொத்தாக இருக்கும் தனது வீட்டிற்குள் நுழைந்து வழக்கமாக அணியும் உடையை மாற்றிக்கொண்டு வேகவைத்த சோளக்கதிர்களை எடுத்துக்கொண்டு அதனை சந்தையில் விற்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த அவளது தோற்றமும், செஸ் விளையாட்டின் நுணுக்கமும், அதில் பெற்ற வெற்றியையும் போல அவளது பின்னணியும் முற்றிலும் முரண்பட்டது.

வறுமை மட்டுமே ஆட்சி செய்யும் உகாண்டா நாட்டின் Kampala நகரத்தின் அருகிலிருக்கும் "Katwe" எனும் ஊரில் 1996- ஆம் ஆண்டு Phiona Mutesi பிறந்தாள். எய்ட்ஸ் நோயால் தன் தந்தையையும், மர்ம காய்ச்சலால் தன் தங்கையையும் இழந்து தாயுடன் வசித்து வந்த அவளுக்கு தேவதைகளின் ஆசிர்வாதம் மிகுந்த சிரமப்பட்டே கிடைத்தது. வறுமையால் பள்ளிப்படிப்பை கைவிட்ட அவள் சற்று தொலைவிலிருக்கும் சந்தையில் வேகவைத்த சோளக்கதிர்களை விற்றுவந்தாள். சந்தைக்கு சென்று திரும்பும் வழியில் இருக்கும் கிரிஷ்டியன் மிஷனரி பள்ளிக்கூடத்தின் (தகரக் கொட்டகை பள்ளி) வாசலில் நின்று அங்கு படிக்கும், விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்பதை அவள் தினமும் வாடிக்கையாக வைத்திருந்தாள். அவ்வாறு அவள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டுகளில் செஸ் விளையாட்டும் ஒன்று. இது என்ன புது விளையாட்டு என அதில் மனதை பறிகொடுக்கத் தொடங்கினாள். தினமும் பள்ளியின் வாசலில் தென்படும் அவள் ஒருநாள் விளையாட்டு ஆசிரியர் "Robert Ktende" என்பவரின் கண்ணில் பட, அவரது புண்ணியத்தில் தன் விரல்களால் முதன் முதலில் செஸ் ராணியை தொட்டுப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றாள். செஸ்சின் மீது அவளுக்கு இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்ட அந்த விளையாட்டு ஆசிரியர் சந்தைக்குச் சென்று திரும்பும் நேரம்போக அவளுக்கு செஸ்சைப் பற்றி மேலோட்டமாக சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். நாட்கள் நகர Phiona Mutesi -ன் விளையாட்டுதிறன் மேம்பட தன் சொந்த செலவில் உள்ளூர் பள்ளிகள் மற்றும் வெளியூர்களுக்கு அவளை அழைத்துச் சென்று Robert ஊக்குவித்தார். தினமும் ஆறு மைல் தூரம் நடந்து சென்று அன்றாட வேலையையும் முடித்து செஸ் விளையாட்டை அவள் முழுதாக கற்கத் தொடங்கினாள். வறுமை ஒருபக்கம் இருந்தாலும் வெற்றி தேவதை அவளுக்கு செல்லுமிடமெல்லாம் சிவப்பு கம்பளம் விரிக்கத் தொடங்கியிருந்தது. 2008- ஆம் ஆண்டு உகாண்டாவின் ஜீனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை முதன்முதலாக வென்ற அவள், 2009- ஆம் ஆண்டு சூடான் நாட்டில் நடந்த "Africa International Children's Chess Champion" போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றாள். மேலே குறிப்பிட்டதுபோல் 2010 ரஷ்யாவின் ஒலிம்பியாட்டில் அவள் கவணிக்கப்பட சொல்லி வைத்ததுபோல் 2012 செஸ் ஒலிம்பியாட்டில் "Women's Candidate Master" (WCM) பட்டத்தையும் பெற்றாள்.

Documentary. 

வசதியான பின்னணி, புத்திசாலி ஜீன்கள், வலுவான பயிற்சி என பலர் சாதிக்கும் செஸ் போட்டிகளில் படிப்பறிவு இல்லாத, மிகவும் பின்தங்கிய நாட்டின் கிராமத்தின் ஒரு சேரியிலிருந்து வந்து சாதித்த பெண் Phiona Mutesi -யை அனைவரும் போன்றுகின்றனர். இன்றைய நிலவரப்படி வறுமை அவளுடன் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்தும், 14 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் குழந்தை பெற்றுக்கொண்டும் எய்ட்ஸ் நோய்க்கும் பலியாகும் உகாண்டா நாட்டில், பெண்கள் எதையும் சாதிக்கலாம் என காட்டும் முன்னோடியாகவும் அவளது ஊரில் ராணியாகவும் அவள் திகழ்கிறாள். அந்த நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த செஸ் உலகமும் அவளை "Queen of Katwe" என கொண்டாடுகிறது. அவளின் உண்மைக் கதைதான் இந்த திரைப்படம்.

Trailer. 

எழுத்தாளர் "Tim Crothers" என்பவர் Phiona Mutesi -யின் வாழ்க்கையை Queen of Katwe என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அதை திரைப்படமாக்க பல நிறுவனங்கள் போட்டிபோட அதிஷ்டம் Walt Disny - க்கு கிடைத்தது. உகாண்டாவில் உள்ள சொந்த ஊரின் தெருக்களில் அங்கு வசிக்கும் முகங்களைக் கொண்டு வெகு இயல்பாக இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்  "Mira Nair". கதைக்கு வெகு நேர்த்தியாக Phiona Mutesi கதாபாத்திரத்திற்கு "Madina Nalwanga" என்ற நடிகையும் அவளது பயிர்ச்சியாளராக "David Oyelow" என்பவரும் நடித்து திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருந்தனர். Phiona Mutesi போலவே அவளது கதையைத் தாங்கிய இந்த படமும் உலகமெங்கும் பல விருதுகளைப் பெற்றது. தவறாமல் ஒருமுறை இந்த தன்னம்பிக்கை ராணியை சந்தியுங்கள்.

About the Movie.


QUEEN OF KATWE

  • Directed By - Mira Nair.
  • Screenplay - William Wheeler.
  • Music - Alex Heffes.
  • Cinematography - Sean Bobbitt.
  • Based on - The Queen of Katwe: Tim Crothers.
  • Year - 2016.
  • Country - US.
  • Language - English.
Back to Life பாடல் "தற்போது"

Phiona Mutesi -க்கு செஸ் விளையாட பயிற்றுவித்த அந்த விளையாட்டு ஆசிரியர் "Robert Ktende" என்பவரே அவளுக்கு இன்றளவும் பயிற்சியாளராக இருக்கிறார். Phiona Mutesi -யின் வாழ்க்கையைவிட Robert வாழ்க்கை மிகக் கொடுமையானது. விபச்சாரியின் மகனாய் பிறந்து தெருவில் அநாதையாக விடப்பட்டு போதை, திருட்டு என தொடர்ந்த அவர் தற்போது வறுமை மிகுந்த உகாண்டாவின் சேரிப்பகுதியிலிருந்து Phiona Mutesi போல பலரையும் பல திறமைசாலிகளையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

Whst is your Name? எனக் கேட்டால் புரியாமல் விழிக்கும் Phiona Mutesi பயிற்சியாளர் உதவியுடன் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டாள். தற்போது தனது உயர்நிலை பள்ளிப்படிப்பை தொடரும் அவள் Robert உடன் இணைந்து செஸ் பயிற்றுவித்து வருகிறாள். உகாண்டா நாட்டின் செஸ் சாம்பியன் 2012 ஒலிம்பியாட் WCM, என விரல்விட்டு எண்ணமுடியாத Phiona Mutesi வைத்திருக்கும் பட்டங்களில் மிக முக்கியமானது "African Grand Master".

வாழத் தகுதியற்ற ஒரு நாட்டில், ஒரு சாதாரண கிராமத்தின் சேரிப் பகுதியில் வசிக்கும் பெண் செஸ் விளையாட்டில் எப்படி சாதித்தாள் எனத் தெரிந்துகொள்ள இந்த திரைப்படத்தை பார்த்த போதும், அவளைப் பற்றிய தேடுதலைத் தொடர்ந்த போதும் ஆச்சரியமாக இருந்தது. செஸ்ஸின் மீது தங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது என்ற கேள்விக்கு ஒருமுறை Phiona Mutesi அளித்த பதில் அதைவிட ஆச்சரியப்பட வைத்தது.

When I first saw chess, I thought "What could make all these kids so silent "

Than I watched them play the game and get happy and exited, and I wanted a chance to be that happy.