☰ உள்ளே....

ரசவாதம்...ரச சாதம் கேள்விப்பட்டிருக்கிறோம் (மனைவி புராணத்தின்படி கொடுக்கப்படும் மகா தண்டனை) அது என்ன ரசவாதம்?. இரும்பு ஈயம் பித்தளை போன்ற சாதாரண உலோகங்களை ஜொலிக்கும் தங்கமாகவோ மதிப்புமிக்க உலோகமாகவோ மாற்றும் தில்லாலங்கடி வேலைதான் ரசவாதம். ஆங்கிலத்தில் இது பொதுவாக "Alchemy" என அழைக்கப்படுகிறது. பாதரசம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுவதால் தமிழில் இது ரசவாதம் என பெயர் பெற்றது. அறிவியலில் இதனை "Pseudo science" (போலி அறிவியல்) என்கின்றனர். சாதாரண ஒரு உலோகத்தை நீர்மமாக உருக்கி அதனுடன் இன்னபிறவற்றை சேர்த்து கலக்கி தங்கமாக மாற்ற முடியுமா? ரசவாத கலை என்பது உண்மையா? அல்லது வாயிலிருந்து லிங்கத்தை எடுக்கும் சாமியார்களின் சித்துவேலையா? வாருங்கள் ஒரு கை பார்த்துவிடலாம்.
கிரேக்கர்களே ரசவாதத்தை உருவாக்கியவர்கள். அதனை அவர்கள் எகிப்தின் மம்மிகளை பதப்படுத்த பயன்படுத்தினர் என்றும், அவர்களின் ஹெர்ம்ஸ் (Herms) என்ற கடவுளே ரசவாத கலையின் முன்னோடி என்றும், அவர் உருவாக்கிய ஹெர்மெடிக் தத்துவங்களில் இதனைப்பற்றி ஆங்காங்கே ஆப்பாயில் மீது பெப்பர் போல தூவியிருக்கிறார் என்றும் பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். இன்னும் சிலரோ இது மொஸபடோமியா நாகரீகத்தின் தொழில்நுட்பம் என்றும் கிரேக்க தத்துவஞானிகள் எம்படகில்ஸ் (Empedocles), மைல்டஸின் தேல்ஸ் (Thales of Miletus) மற்றும் ஹெராகிளிடஸ் (Heraclitus) போன்றவர்களால் இந்த கலைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது என்றும் நம்புகின்றனர். ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் Alchemy என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான "Alchimia" என்பதிலிருந்தும், "al-kimia" என்ற அரேபிய வார்த்தையிலிருந்தும் வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே ரசவாதம் அரேபிய தத்துவங்களிலிருந்து தோன்றியது என ஒருசாராரும் நம்புகின்றனர்.

அறிவியல் வளர்ச்சியடையத் தொடங்கிய 16 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் சிலர் ரசவாத ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டிருந்தனர். ரோமை ஆண்டு வந்த இரண்டாம் ருடால்ப் என்ற மன்னன் தனது அரண்மனையின் பெரும்பகுதியை (அந்தப்புரத்தைத் தவிர) இந்த ஆராய்ச்சிக்காக ஒதுக்கியிருந்தான். ரசவாதம் என்ற அந்த ரசாயனத் தேடலை மேற்கொள்பவர்கள் நோய்கள் தீண்டாத தன்மை பெற்றவர்களாகவும், இறப்பு என்பது என்ன? என்பதை அறியாதவர்களாகவும், ஞானம் பெற்றவர்களாகவும், கடவுளிடம் ரேட் கட்டர் போடாமல் எப்பொழுது வேண்டுமானாலும் மணிக் கணக்கில் பேசுபவர்களாகவும் விளங்கினார்கள். அவர்கள் ரசவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி சங்கம் சங்கத் தலைவர், அடிப்பொடிகள், கட்சிக் கொடி, கொள்கை, சந்தா, எல்லாம் இருந்திருக்கிறது. பேய், பிசாசு, பூச்சாண்டி, அஞ்சுகண்ணன் அளவிற்கு இவற்களைக் கண்டு அஞ்சிய மக்களும், இவர்களுக்கு நாட்டில் தடைவிதித்த ராஜாக்களும் வரலாற்றின் பக்கங்களில் இருக்கிறார்கள். ஆப்பிள் மரத்தடியில் அகில உலகின் ஈர்ப்புவிசை ரகசியத்தை கண்டுபிடித்த ஐசக் நீயூட்டன் கூட ரசவாதத்தை முடிந்த அளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதைவிட நம் ஜெகஜால கில்லாடி உலகமகா ஜோசியர் நாஸ்டிரடாமஸ் ரசவாத கொள்கையை கற்றுக்கொண்டு அதில் கைதேர்ந்து விளங்கியிருக்கிறார். பிறகு தகரத்தை தங்கமாக்கி என்ன செய்யப் போகிறோம் என கைவிட்டிருக்கிறார். இவர்களைவிட "தகரத்தை என்ன? ஜூஜுபி மண்ணையே பொன்னாக்குவேன் " என்ற சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.


ஒரு வாணெலியில் சிறிதளவு எண்ணெய்யுடன் நறுக்கிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, தேவையான அளவு மிளகு சேர்த்து நன்கு வதக்கி - என்ற சமையல் குறிப்பைப் போல மண்ணை பொன்னாக்கும் எளிமையான ரசவாத ரெசிபி நம் சித்தர்களிடம் இருந்தது. ஆனால் அவர்கள் அதை உலக நன்மைக்காக பரம ரகசியமாக பாதுகாத்து வந்தனர். அதில் ஒருசிலர் போனால் போகட்டும் அடுத்த தலைமுறை அல்வா கிண்டிக்கொள்ளட்டும் என இந்த சமையல் குறிப்பை தன் பாடல்களில் மறைமுகமாக சொல்லிவிட்டும் சென்றிருக்கின்றனர்.

எட்டான போன்னத்துவத்தை தகடடித்து
எழிலாய்ப் புடமிட்டால் தங்கமாகும்
கட்டான தங்கமது என்ன கூறுவேன்
காசினியில் நாதாக்கள் கண்ட தங்கம்
பட்டான தங்கமதை பூசை கொள்வீர்
பாங்கான சிவபூசை உறுதி காண்பீர்
மட்டான தங்கமென்று
எண்ணவேண்டா
மகத்தான குருபூசைத் தங்கமாமே"

- என்பது கருவூர் சித்தரின் குறிப்பாகும்.

செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"

-என திருமூலரும் கூறியிருக்கிறார்.

கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே…”

என்ற பாடல்களில் ஒளிந்திருக்கும் சூட்சுமம் ரசவாத கலையை உணர்த்துகிறது. மேலும் அக்காலகட்டத்தில் வாழ்ந்த கோராக்கர், சிவவாக்கியர் மற்றும் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கூட மண்ணை பொன்னாக்கி ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர்.

"அனைத்து ஆச்சரியங்களுக்குப் பின்னால் அறிவியல் ஒளிந்துகொண்டிருக்கக் கூடும்" என்பதற்கேற்ப ஒரு உலோகத்தை தங்கமாக மாற்ற அறிவியலில் வழியிருக்கிறதா என்றால்? நிச்சயம் இருக்கிறது. அதற்கு ரூதர்போர்டு, ரான்ட்ஜென் போன்றவர்கள் கோடுகிழித்து அம்புகுறியிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒவ்வொரு அணுவும் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்  என்ற அயனிகளைக் கொண்டது. எலெக்ட்ரான் எதிர்மின்சுமை கொண்டது, புரோட்டான் நேர்மின் சுமை கொண்டது, நியூட்ரான் எந்த கட்சியும் இல்லாமல் நடுநிலை வகிப்பதாக உள்ளது. இந்த மூன்றில் புரோட்டானும் நியூட்ரானும் சேர்ந்து ஒரு அணுவின் உட்கருவை தோற்றிவிக்கிறது. சும்மா இருக்கும் எலெக்ட்ரான் வேறுவழியில்லாமல் உட்கருவைச் சுற்றிவருகிறது. இவைகளே ஒரு தனிமத்தின் பண்பினை தீர்மானிக்கின்றன. காரியம் (Lead) என்ற தனிமத்தின் உட்கரு எடை 207 இதில் 82 புரோட்டான்களும் 125 நியூட்ரான்களும் அடங்கும். சைக்ளோட்ரான் எனும் கருவியின் மூலம் காரியத்தின் உட்கருவை துளையிட்டு அதிலிருக்கும் புரோட்டான்களில் மூன்றையும் நிட்ரான்களில் சிலவற்றையும் ஹாலிவுட் வேலை செய்து வெளியேற்றினால் தங்க அணு கிடைக்கும். ஆனால் அதனுடன் சில கதிரியக்க ஐசோடோப்புகளும் கிடைக்கும் அதனை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறைகளும், கருவிகளும், ஆய்வுகளும் மிகவும் சிக்கலானவை
அதற்கு தேவைப்படும் செலவும் கண்ணைக் கட்டுபவை.

புகழ்பெற்ற உலக விஞ்ஞானிகள் முதல் பில்லி சூனியம் ஏவல் வைக்கும் உள்ளூர் மாந்திரீகர்கள் வரை அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலும் ரசவாதத்தை ஒருபுறம் கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ரதவாத கொள்கைகளைப் பயின்று சித்தர்களின் பாடலை புரிந்துகொண்டு அணுவை துளையிட்டு தங்கத்தை பெறுவதைவிட, செய்கூலி இல்லை சேதாரம் இல்லை அறிய கற்களுக்கு 5% தள்ளுபடியில் நம்பிக்கை நாணையம் கைராசி நம்ம கடை நம்பிக்கையான கடையில் வாங்கிக்கொள்வதே சாலச்சிறந்தது.