☰ உள்ளே....

சாப்ளின் - ஒரு நாடோடியின் கதை அறிமுகம்.

அந்த ஹீரோ எழுந்தார், நடந்தார், பாத்ரூம் போனார், பல்லு வெளக்கினார், குளித்தார், உட்கார்ந்தார், சாப்பிட்டார், தும்மினார், தூங்கினார், அவர்தான் அடுத்த முதல்வர், இந்திய பிரதமர், அமேரிக்க ஜனாதிபதி, ஐநா சபை தலைவர், போப் ஆண்டவர் என்ற செய்திகளை தினமும் நாம் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் கடந்து வந்திருப்போம். அவற்றிற்கெல்லாம் காரணம் ஒரு பிரபலத்தின் மீது நாம் வைத்திருக்கும் கண்மூடித்தனமாக காதலாக இருக்கக்கூடும். சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளைச் சார்ந்த சிலரை நாம் கவணமெடுத்து ரசிப்பதும் அந்த பிரபலத்தைப் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் காட்சிகளையும் சேமித்து வைத்து அழகு பார்ப்பதும் அந்த இனம்புரியாத காதலாகவே இருக்கக்கூடும். அதற்கும் ஒருபடி மேலே சென்று பாக்கெட்டில் படத்தை வைத்துக்கொள்ளுவதும், பச்சைக் குத்திக்கொள்வதும், மொட்டை போடுவதும், சோசியல் மீடியாக்களில் சொல்லெடுத்து சண்டை போடுவதும் அதே வகைதான். ஒரு நாயகன் ஏதோ ஒரு வகையில் வாடகை தராமல் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் குடியிருக்கிறான்.

கல்லூரிக் காலங்களில் போஸ்டர் அடித்து, கட்டவுட் வைத்து, மாலை போட்டு சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, பால் பண்ணீர் பாதாம்கீர் ரோஸ்மில்க் அபிஷேகம் செய்து, முதல்நாள் ரசிகர்களின் முதல் காட்சியில் பூத்தூவி, விசிலடித்து, கத்தி கதறி ஆட்டம் போட்டு, பக்கத்து இருக்கையில் உள்ளவனிடம் சண்டைபோட்டு அடிவாங்கி (அன்பாக கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் நல்ல பழக்கம் உண்டு), களைத்துப்போய் கடைசியில் படத்தின் கதைதான் என்ன? எனத் தெரியாமல் வியர்வையோடு வெளிவந்த அனுபவம் எனக்கும் உண்டு. காலம் செல்லச்செல்ல சினிமாவைத் தவிர்த்து விளையாட்டு, கலை, இலக்கியம், வரலாறு, புத்தகம் என ரசனைகள் மாற அடியேனின் மனம் கவர்ந்த நாயகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. மிகப்பெரிய பட்டியலில் இருக்கும் அந்த நாயகர்களைப் பற்றி கட்டுரையாக தொடராக எழுதலாம் எனத் தோன்றியது. யாரைப்பற்றி முதலில் எழுதலாம் என நினைக்கையில் ஆனந்தத்திலும் அதிர்ச்சியிலும் உறையவைத்து அந்த பட்டியலில் முதலில் நின்றவர் சினிமா உலகின் ஒப்பற்ற நாயகன் "சார்லி சாப்ளின்".

சிறுவயதில் பள்ளிக்கூடம் சென்று வீடுதிரும்பி அவசர அவசரமாக உடையை மாற்றி, மேரி பிஸ்கட்டை ஓரமாக கடித்து, அம்மா கொடுக்கும் காபியை குடித்துவிட்டு டியூசன் புறப்படும் நேரத்தில் ராஜ்டிவியில் சாப்ளினின் நகச்சுவை துணுக்குகளை ஒளிபரப்புவார்கள். அமர்ந்து ரசிக்க நேரமின்றி நின்றுகொண்டே பார்த்து வயிறு குளுங்க சிரித்த அந்த நிகழ்சியின் மூலமே சார்லி சாப்ளின் என்ற ஒப்பற்ற கலைஞனின் முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவரது வேடிக்கை சேட்டையில் மனம் தொலைத்து பள்ளி மாறுவேடப் போட்டியில் கோட்சூட் தொப்பி ஹிட்லர் மீசையுடன் தம்பிக்கு சாப்ளின் வேடம் போட்டு சிறியதாக ஒரு மேடை நிகழ்சியை நடத்தி கைதட்டலும் சோப்பு டப்பாவும் பரிசாக பெற்றிருக்கிறேன். சிறந்த திரைப்படங்களுக்கான தேடுதலில் சென்னை பாண்டி பஜார் தெருக்களில் கிடைத்த சாப்ளினின் டிவிடி தொகுப்பு அவரை இன்னும் நெருக்கமாக கொண்டுவந்தது. ஆனந்த விகடனில் அஜயன் பாலா எழுதிய நாயகன் தொடரில் அவரைப்பற்றி படித்து தெரிந்து கொண்டபோது சாப்ளின் மனம் கவர்ந்த நாயகனாக நிரந்தரமாக என்னுள் தங்கிப்போனார். அவரது திரைப்படங்கள், அரிய புகைப்படங்கள், அவரைப் பற்றிய சுவாரசியங்கள், வாழ்கை வரலாறு புத்தகங்கள் என சேமிக்கத் தொடங்கினேன். அதனை அசைபோடும்போது "The most sweet hearted people are the most mistreated people" என்ற அந்த வேடிக்கை மனிதனின் வாழ்க்கை எத்தனை விசித்திரமானது என உணர்ந்தேன். அந்த விசித்திரங்களை சாப்ளின் என்ற பகுதியில் எழுத நினைக்கிறேன்.

சாப்ளின் பிறந்தார் வளர்ந்தார் என வரலாற்று பாடம் போல் சலிப்புத் தட்டாமல் அவரைப் பற்றிய சுவாரசியங்கள் சிறுசிறு கதைகள் மற்றும் தகவல்களுடன் முன்னுக்குப் பின் முரணாக இதில் இருக்கும். மேலும் சாப்ளினின் அரிய புகைப்படங்களும் அவரது ஆரம்பகால ஒரு ரீல் திரைப்படங்களும் ஒவ்வவொரு பகுதியிலும் இணைக்கப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வகையில் என்னை கவர்ந்த இந்த நாயகன் உங்களையும் கொள்ளையடிப்பான் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன்.