பிரபுதேவா.



கோவில் வாசல் முட்டுசந்து காய்கறி மார்க்கெட் என ஊரே வேடிக்கை பார்க்க மஞ்சள் சிவப்பு பச்சை ஊதா சட்டையில் போட்டிருக்கும் மேக்கப் கலையாமல் ஓடிவந்து கையை காலை தலையை ஆட்டி ஒரு சொட்டு வியர்வைகூட வராமல் ஹீரோ பாடும் அதிரடியான ஓப்பனிங் பாடல். ஹீரோயின் ஒகே சொல்ல யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கோ மலைப் பிரதேசத்திற்கோ சென்று கையும் கையும் மூக்கும் மூக்கும் கண்ணமும் கண்ணமும் ----சும் ----சும் உரச ஒரு டூயட் பாடல். காற்று பலமாக வீச குப்பைகள் எல்லாம் பறக்க  இருட்டில் சுடுகாட்டில் கையில் புட்டியுடன் குட்டியை நினைத்து மழையைவிட தத்துவங்களைப் பொழிந்து முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு நிம்மதியாக இரவில் தூங்கும் குழந்தைகளை பயமுறுத்தும் சோகப் பாடல். தாஜ்மஹால் பிரமிடு அரண்மனை பெரிய இதயம் உதடு என ஆர்ட் டைரக்டர் மாதக்கணக்கில் கண்விழித்து போட்ட செட்டில் பளபளக்கும் லைட் வெளிச்சத்தில் ஜிகுஜிகு உடையில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது போன்ற நடன அசைவில் ஹீரோவும் ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பதைப் போன்று இருபது முறைக்குமேல் இடுப்பை மட்டும் ஆட்டி ஹீரோயினும் பாடும் ஜாலியான பாடல்- என சலித்துப்போன 90 -களின் தமிழ் திரைப்படப் பாடல்களின் மத்தியில் ஒலியும் ஒளியும் பெப்ஸி உங்கள் சாய்ஸ் சூப்பர் டென் நிகழ்சியில் எப்பொழுது அவரது பாட்டு வரும் என BPL Videocon Onida Solider டிவியின் முன் உட்கார வைத்தவர் பிரபுதேவா.

தனது தந்தையின் நடனக்குழுவில் ஒரு  ஓரமாக ஒல்லியாக ஆடிக்கொண்டிருந்த பிரபுதேவா தனியாகப் பிரிந்து தமிழ் சினிமாவின் அதே ஓப்பனிங் டூயட் ஜாலி சோக பாடல்களுக்கு தனது தனித் தன்மையான நடன அசைவுகளால் புது வடிவம் கொடுத்தார். Bad ஆல்பத்தில் வரும் மைக்கேல் ஜாக்சன் மாதிரி உடையணிந்து கொண்டு சிக்குபுக்கு ரயிலே பாடியபோதும், "நான் வாழ்வதா விடைகொண்டு போவதா உன் வார்த்தையில் உள்ளதடி " என உருண்டுதிரண்ட உருளைக்கிழக்குபோல் இருக்கும் நக்மாவைப் பார்த்து கையைவிரித்து கதாநாயகனாக காதலனில் அமைதியாக பாடிய போதும் பலதரப்பட்ட ரசிகர்களிடமும் பிரபுதேவா சென்றடைந்தார். மின்சாரக்கனவில் வெண்ணிலவே பாடலில் உச்சம் தொட்ட அவர், கானா பாடல் வெஸ்டர்ன் குத்துப் பாடல் என ஒரு பாடலின் காட்சிகளை அழகாக்கி அதன் இசையையும் அழகாக்கிவர். குறிப்பாக ரஹ்மானின் பல ஆரம்பகால பாடல்களுக்கு உயிரூட்டியவர்களில் இவரும் ஒருவர். சினிமாவின் உயரம் கிடைமட்டமாக இருக்காது என்பதற்கேற்ப சில காலங்கள் அவர் சறுக்கினாலும் ஹிந்தி திரையுலகில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்து தனது இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கினார். தென்னிந்தியாவின் சில மசாலா படங்களை அப்படியே தூக்கிக்கொண்டு அதில் கொஞ்சம் பட்டாணி தக்காளி உருளைக்கிழக்கு மிளாகாய்ப் பொடி மிளகுப்பொடி தூவி அவர் தயாரித்த ஹிந்தி படங்களும் வெற்றியைக் கொடுக்கத் தொடங்கின. அந்த படங்களின் பாடல்களுக்கு தனது பழைய தனித்தன்மையான நடன அசைவுகளைக் கொடுத்து ஆடவே தெரியாத பாலிவுட் ஹீரோ ஹுரோயின்களை ஆட வைத்து அயோடெக்ஸ் போட வைத்தார்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவின் வெற்றித் தயாரிப்பாளர் பிரபுதேவா, அதைவிட இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குனரும் இவரே. அவரது பழைய புதிய பாடல்களை எப்போதாவது பார்கும்போது ரிமோட்டின் Vol + யை அழுத்திவிட்டு அப்படியே உட்கார்ந்து அந்த நடன அசைவுகளில் மெய் மறந்து போவதுண்டு. அப்படி அடியேன் ரசிக்கும் பிரபுதேவாவின் ஹிந்தி பாடல்கள் இவை தங்களின் ரசனைக்காகவும்.

Saree Ka Fall Sa - Rajkumar.

Sun Saathiya - ABCD2

Go Govinda - OMG

Aa Re Pritam Pyaare - Rowdy Rathore.

Chal Maar - Tutak Tutak Tutiya.

AJ Theme - Action Jackson.

Key Sara Sara - Pukar.

Jadoo ki Jhappi - Bollywood Sing Alone