☰ உள்ளே....

நந்திபுரத்து நாயகி.


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் பொண்ணியின் செல்வன் என்ற மகா சமுத்திரத்தில் மூழ்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறலாம். சோழர்களின் வரலாற்றை மட்டுமல்லாமல் ஒரு வரலாற்றுப் புதினத்தை அத்தனை அழகுடனும் உயிர்ப்புடனும் வேறு எந்த மொழியில் வேறு எவராவது ஒருவர் எழுதியிருக்கிறார்களா? என்பது சந்தேகமே. சோழர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் இராஜராஜ சோழன், "அருண்மொழி வர்மன்" என்ற இயற்பெயர் கொண்ட அவர் அரசனாக முடிசுடுவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், அதற்காக செய்யப்பட்ட அரசாங்க சூழ்ச்சிகளையும், இராஜராஜனுக்கு அண்ணனாக முடிசூடும் பட்டத்து அரசனாக இருந்த ஆதித்த கரிகாலன் என்பவரின் மர்மமான மரணத்தையும் அதனைத் தொடர்ந்த அரண்மனை குழப்பங்களையும் சரித்திர ஆய்வுகளோடு கதாபாத்திரங்களின் வழியோடு வெகுஜன மக்களும் வரலாற்றை புரிந்துகொள்ளும் அளவிற்கு எழுதியிருந்தார் அமரர் "கல்கி கிருஷ்ணமூர்த்தி".
65 வருடங்களுக்கு முன்பு வாரஇதழில் தொடராக வெளிவந்தபோதும், புத்தகமாக அடுத்த தலைமுறைக்கு சென்றபோதும் பொண்ணியின் செல்வன் வரலாற்றின் காலகட்டத்திற்கே வாசிப்பவர்களை அழைத்துச் சென்றது.

காஞ்சி மாநகரம், அங்கு மயில்போன்று அமைந்த கோட்டை, அரச மாளிகை , பாலாறு, அதில் செல்லும் படகுகள், வானுயர்ந்த கோவில்கள், பழவூர் அரண்மனை, தஞ்சைக் கோட்டை, செல்வம் கொழிக்கும் நாணையச்சாலை, பாதாள சிறை, இயற்கை எழில் கொஞ்சும் முல்லைத் தீவு, அலைகடல் மாமல்லபுரம், அதன் சிற்பங்கள், கற்கோவில், ஆனைமலைக் காடுகள், வஞ்சிநகரம்,  திருக்குடந்தை, திருக்கோவிலூர், நந்திபுரம், பழையாறை, திருநாராயணபுரம், தில்லையம்பதி என வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும், வானவன் மதேவியார், குந்தவை பிராட்டியார், கல்யாணி பாட்டி, செம்பியன் மதேவியார்,  சுந்தர சோழர், வல்லவரையர்,  வந்தியத்தேவன், பார்த்திபேந்திர பல்லவர்,  அருண்மொழி வர்மன்  ஆதித்த கரிகாலன்,  சிறிய பழுவேட்டரையர், சோமன் சாம்பவன், மதுரன் கண்டாதித்தன், பரமேசுவரன், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், காளமுகன், இன்பவள்ளி,  திலகவதி பாட்டி,  மாணிக்கம், சுமதி, கார்மேகன், கலபதி, குடந்தை சோதிடர், சிற்பி, சதுராணப் பண்டிதர் மற்றும் அந்த ஒப்பற்ற பாண்டியநாட்டு தலைவி நந்தினி இந்த கதாபாத்திரங்களையும் பொண்ணியின் செல்வன் வாசகர்கள் எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

சோழர்களில் தலைசிறந்தவனாக விளங்கிய இராஜராஜன் எவ்வாறு ஆட்சிபுரிந்தான்? புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எவ்வாறு கட்டினான்? அவனது அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணம் எப்படி நிகழ்ந்தது? ஆதித்த கரிகாலனின் நண்பனான வந்தியத்தேவனின் மீதிதிருந்த சந்தேகம் எவ்வாறு நீங்கியது? குந்தவை வந்தியத்தேவனின் காதல்? பொண்ணியின் செல்வன் புதினத்தின் மையப் புள்ளியான அந்த பாண்டியநாட்டு தலைவி என்ன ஆனாள்?  சோழர்களின் தலைநகராக தஞ்சை எப்போது மாறியது? என்ற முடிச்சுகளை அவிழ்க்காமல் கல்கி அவர்கள் பொண்ணியின் செல்வன் புதினத்தை முடித்திருந்தார். தொடர்ந்து மூன்று வருடங்கள் "மணியம்" அவர்களின் ஓவியங்களுடன் தொடராக வெளிவந்த காலகட்டத்தில் அதனைப் படித்த வாசகர்களுக்கு முடிவு சற்று பேரதிர்ச்சியாக இருந்தது அதற்கு அமரர் கல்கி அளித்த விளக்கம் ஆச்சரியப்படவும் வைத்தது. அதாகப்பட்டது சாதாரண ஒரு கற்பனைக் கதையை எடுத்துக் கொண்டால் கதாநாயகனும் நாயகியும் இணைந்தார்கள் திருமணம் செய்துகொண்டார்கள் குழந்தை பிறந்தது சுபிட்ஷமாக வாழ்ந்தார்கள் சுபம் என இன்பவியலாகவும், கதாநாயகனும் நாயகியும் பிரிந்தார்கள் அவர்களில் யாராவது ஒருவர் சொர்கத்திற்கோ நரகத்திற்கோ சென்றார்கள் கண்ணீர், சோகம் என துன்பவியலாகவும் முடித்துவிடலாம். ஆனால் வரலாற்று புதினங்களை அப்படி சுபம் போட்டு முடிக்கலாகாது. கதை எந்த காலகட்டத்தில் முடிகிறதோ அதே நிலையில் கதாபாத்திரங்களை விட்டுவிடுவதே வரலாற்று புதினங்களுக்கு உகந்தது. மேலும் தமக்கு பிறகுவரும் எழுத்தாளர்களுக்கும், தழிழுக்கு தொண்டு செய்ய நினைக்கும் ஆராய்ட்சியாளர்களுக்கும் இது பெரிதும் உதவக்கூடும். அவர்கள் வரலாற்றை அறிந்து மேலும் தொடர்ந்து மகத்தான நூல்களை படைக்க இது வழிவகுக்கும் என அமரர் கல்கி அவர்கள் பொண்ணியின் செல்வனில் குறிப்பிட்டிருந்தார். கல்கிக்கு பிறகு வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் அந்த வரலாற்றைத் தேடும் ஆர்வம் இருந்தது எனக் கூறலாம் அதனை "நந்திபுரத்து நாயகி" என்ற இந்த புத்தகத்தின் மூலம் பூர்த்தி செய்திருக்கிறார் "கலைமாமணி விக்கிரமன்".

இராஜராஜசோழன் பட்டத்திற்கு வந்தபின் தொடர்ந்த ஆட்சி, ஆதித்த கரிகாலனின் மரணத்தின் மர்மம், என கல்கி அவிழ்க்காமல் விட்ட அந்த முடிச்சுகளை நந்திரபுரத்தில் விக்கிரமன் தொடர்கிறார். காஞ்சி மாநகரம், மயில் போன்று அமைந்த கோட்டை, கோவில்கள், பழவூர் அரண்மனை, தஞ்சைக் கோட்டை என அதே பொண்ணியின் செல்வனின் இடங்களுக்கும் வானவன் மதேவியார், குந்தவை பிராட்டியார், கல்யாணி பாட்டி, செம்பியன் மாதேவியார்,  சுந்தர சோழர், வல்லவராயர்,  வந்தியத்தேவன், பார்த்திபேந்திர பல்லவர், அருண்மொழி வர்மன்  ஆதித்த கரிகாலன், என அதே கதாபாத்திரங்களையும் மீண்டும் கண்முன் நிழலாடச் செய்திருக்கிறார். எளிய நடை இயல்பான வர்ணனை என ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதாவது கல்கியின் பொண்ணியின் செல்வனுக்கு பிறகு சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்த புத்தகம் உதவக்கூடும். சுருக்கமாகச் சொன்னால் தமிழின் ஒப்பற்ற படைப்பான பொண்ணியின் செல்வன் என்ற புதினத்தின் ஐந்து பகுதிகளுக்கு பக்கத்தில் பொக்கிஷமாக வைக்கப்பட வேண்டிய அடுத்த மூன்று பகுதி இந்த புத்தகம் "நந்திபுரத்து நாயகி".

நந்திபுரத்து நாயகி
கலைமாமணி விக்கிரமன்
யாழினி பதிப்பகம்.