☰ உள்ளே....

லண்டன், கென்னிங்டன் சாலை, தெரு எண் 12 - ஒரு நாடோடியின் கதை பகுதி - 2.
அது ஒரு பனிக்காலம் சாப்ளின் லண்டன் வருகிறார் என்ற செய்தியைக் கேட்டு லண்டன்வாசிகள் மகிழ்ச்சிக் கடலில் குதித்தனர். சாப்ளினை வரவேற்க வீதியெங்கும் தோரணங்கள் வானவேடிக்கைகள் என கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் போல் லண்டன் தெருக்கள் கலைகட்டத் தொடங்கியது. அவரது தாயின் கனவுகளை சிதைத்து, அவளுக்கு வறுமையை கொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளி, பசியோடும் வலியோடும் அலைய வைத்த அதே லண்டன் தெரு. தந்தையின் பாசம் என்பது என்ன? எனத் தெரியாதவனாக, பேப்பர் போடும் சிறுவனாக, தினக் கூலியாக, வாய்ப்புத் தேடும் கலைஞனாக, மறுக்கப்பட்ட இதயத்தின் காதலனாக சாப்ளின் சுற்றித்திரிந்த அதே லண்டன் தெரு தற்போது அவரின் பாதம் பட காத்திருந்தது. குறித்த தேதியில் சாப்ளின் லண்டன் வந்து இறங்கினார். வழியெங்கும் மக்கள் கூட்டம் அவரைக் காண மொய்க்கத் தொடங்கினர். சிறிய புன்னகை மற்றும் சம்பிரதாய கையசைப்புடன் சாப்ளின் தான் தங்கப்போகும் ரிட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றார். ஹோட்டலைச் சுற்றிலும் கூட மக்கள் அவரைக் காண காத்துக் கிடந்தனர். உள்ளே நுழையவே பெரும் சிரமப்பட்ட அவர், ஒருவழியாக ஹோட்டல் அறைக்குச் சென்று பால்கனியில் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுத்துவிட்டு மீண்டும் சிறிய புன்னகை மற்றும் கையசைப்புடன் விடைபெற்று அறைக்குத் திரும்பினார்.

சார், 10.00 மணிக்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, 11.00 மணிக்கு பிரதமருடன் டி பார்ட்டி, 12.00 மணிக்கு முக்கிய புள்ளிகளுடன் விவாதம், 1.00 மணிக்கு பக்கிங்ஹாம் பேலஸில் மகாராணியுடன் மதிய உணவு, 3.00 மணிக்கு திரைப்பட அதிபர்களுடன் ஒப்பந்தம் 5.00 மணிக்கு நாடக நிகழ்ச்சி என அன்றைய நாளின் நிகழ்சிகளின் அட்டவணையை அவரது உதவியாளர் வரிசையாக ஒப்பிக்க, அனைத்தையும் முடித்துவிட்டு சாப்ளின் தங்கியிருக்கும் அறைக்கு அன்று வந்துசேர நள்ளிரவு இரண்டுமணியைத் தாண்டியிருந்தது. "சார் குடிக்க ஏதாவது கொண்டுவரவா" என உதவியாளர் கேட்க "அரைமணிநேரம் கழித்து கொண்டு வா நான் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்'" என சாப்ளின் அவரை அனுப்பினார். அரைமணிநேரம் கழித்து உதவியாளர் சாப்ளினின் அறைக்கு நுழைய அதிர்ச்சி காத்திருந்தது. சாப்ளின் அங்கு இல்லை. பலத்த பாதுகாப்புடன் இருந்த ஹோட்டல் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. வெளியில் தெரிந்தால் முடிந்தது கதை என ரகசியமாக லண்டன் தெருக்களில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் அவரைத்தேடி சுற்றிக்கொண்டிருந்தனர். தொலைவில் பிக்பென் கடிகாரம் மூன்றுமுறை மணியடித்தது.

"லண்டன், கென்னிங்டன் சாலை, தெரு எண்- 12". ஒரு பூட்டப்பட பேக்கரிக்கு அருகில் விளக்கு மரத்தின் அடியில் மிடுக்கான தோற்றத்துடன் ஒரு உருவம் எதையோ வெறித்தபடி நின்றுகொண்டிருந்தது. "சார்! இங்கு என்ன செய்கிறீர்கள்" என ஒரு காவலர் கேட்க, சாப்ளின் கிடைத்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அனைத்து காவலர்களும் அங்கு ஓடிவந்தனர். "என்னை மன்னித்துவிடுங்கள் சொல்லாமல் வந்துவிட்டேன் வாருங்கள் போகலாம்" என சாப்ளின் அங்கிருந்து நகர்ந்துசென்று தான் நின்ற அந்த இடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தார். வானில் நட்சத்திரங்கள் மின்ன பூப்போல் வெண்பனி தூரிக்கொண்டிருந்தது.

சாப்ளின் சிறுவனாக இருந்தபொழுது அனைத்து வலிகளையும் தாங்கிய அவளது அம்மா ஹென்னாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் அவளை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சாப்ளின் மற்றும் அவனது அண்ணன் சிட்னியை தந்தை சார்லசின் பாதுகாப்பில் ஒப்படைத்தது. பசி என்ற கொடிய மிருகம் விலகி சித்தியின் கொடுமை இருவர்களை துரத்த ஆரம்பித்தது. சித்தி லூயிஸ் தந்தை சார்லசைப் போலவே குடிக்கு அடிமையாக இருந்தாள். சாப்ளின் - சிட்னி இருவருக்கும் பள்ளிக்கூடம் செல்வது ஒன்றே ஆறுதலாக இருந்தது. ஆனாலும் மற்ற குழந்தைளுக்கு கிடைப்பதைப் போல தாய் தந்தையின் பாசத்திற்காக அவர்கள் ஏங்கித் தவிர்த்தனர். நாட்கள் நகர்ந்தது ஒருநாள் பள்ளியைவிட்டு இருவரும் வருகையில் அவர்களது அம்மா ஹென்னா பூர்ண நலத்துடன் வரவேற்க காத்திருந்தாள். குணமடைந்த அம்மாவைக் கண்ட இருவரும் ஓடிச்சென்று கட்டிக்கொள்ள ஆச்சரியப்படும் விதமாக சித்தி லூயி பெருந்தண்மையோடு ஹென்னாவை நடத்தினாள். ஹென்னா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். மூவரும் லண்டன் வீதிகளைச் சுற்றினர், வகைவகையாக சாப்பிட்டனர், நிறைய கதைகளைப் பேசினர், நேரம் தொலைந்து இரவு தொடங்கியது. அவசரப்பட்டு இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் ஹென்னாவின் மனதில் அலையடிக்கத் தொடங்கியது. இன்று இரவு எங்கு தங்குவது? நாளை எப்படி விடியும்? குழந்தைகளின் எதிர்காலம்? யோசித்தாள். தான் கொண்டுவந்த போர்வையை அந்த தெருமுனையில் உள்ள ஊருகாய் தொழிற்சாலையின் அருகில் விளக்குக் கம்பத்தின் கீழ் விரித்தாள், தன் குழந்தைகளை அதில் படுக்கவைத்து தானும் பேசிக்கொண்டே உறங்கிப்போனாள். வானில் நட்சத்திரங்கள் மின்ன பூப்போல் வெண்பனி தூரிக்கொண்டிருந்தது.
அன்று அந்த முன்று கஷ்ட ஜீவன்கள் உறங்கிய இடம் "லண்டன், கென்னிங்டன் சாலை, தெரு எண் 12".

துணுக்குச் செய்தி ..

சாப்ளினின் தந்தை "Charles Chaplin" 18 மார்ச் 1863 -ஆம் ஆண்டு "Spencer Chaplin - Ellen Elizebeth Smith" தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அழகான குரல்வளம் கொண்ட இவர் நாடகங்களில் பாடவும் நடிக்கவும் செய்தார். அந்த காலகட்டத்தில் அவரது "The girl was young and pretty" என்ற பாடல் மிகப் பிரபலம். நல்ல பாடகர், நல்ல நடிகர், சிறந்த மனிதர் என அறியப்பட்டாலும் குடிப்பழக்கம் அவரை கீழ்த்தனமாக கொண்டு சென்றது. சாப்ளின் அவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், சாப்ளினுக்காகவும் சினிமா உலகிற்காகவும் அவர் தன் வாழ்நாளில் ஒரு நல்லகாரியம் செய்திருந்தார். அந்த காலகட்டத்தில் லண்டனில் புகழ்பெற்ற "The eight Lancashire Lads clog dancing" நடனக்குழுவில் சாப்ளினை சேர்த்துவிட்டார். 9 மே 1901-ஆம் ஆண்டு அவரது குடிப்பழக்கத்தால் தனது 38 வது வயதில் சார்லஸ் இறந்தார். அவர் இறப்பிற்கு தன் தாயுடன் சென்றவந்த சாப்ளின்(12) தன் சுயசரிதையில் தன் தந்தையைப்பற்றி "He was hardly aware of a father" என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது தந்தை தன்னைத் தொட்டு கட்டிப்பிடித்தது முத்தமிட்டது வாழ்வில் ஒரே ஒருமுறைதான் எனவும் குறிப்பிட்டிருந்தார் .

சாப்ளினின் திரைப்பட வரிசை.

6. Tango Tangles.


7. His Favorite Pastime.


8. Cruel, Cruel Love.


9. The Star Boarder.


10. Mabel at the Wheel.