அப்பாவின் துப்பாக்கி.


ஒரு இனம், மொழி, நாகரீகம், பண்பாடு போன்றவைகளை அதனை பின்பற்றும் மக்களோடு சேர்த்து மிதித்து நசுக்கியபின் சர்வாதிகாரம் தன் அரியணையில் பாதுகாப்பாக அமருகிறது". பழமையான பேரரசுகளின் ஆட்சி முதல் நமக்குத் தெரிந்த ஹிட்லரில் தொடங்கி, பாலஸ்தீனம் மற்றும் இலங்கை யுத்தம் வரை இவ்வாறு நசுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை  உலகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நன்கு முன்னேறிய இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட தங்கள் இனம், தமது மக்கள், தனிநாடு என உரிமைக்காகவும் வாழ்வியலுக்காகவும் போராடக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார். காலம் அவர்களை அகதிகளாகவும் அடையாளமற்றவர்களாகவும் அலையவிட்டாலும் நாளை விடிந்துவிடும் என்ற நம்பிக்கையோடும் கனவோடு அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர்கள்தான் குர்திய மக்கள் அவர்களுக்கு இருக்கும் கனவு "குர்திஸ்தான்".

உலக வரைபடம் அல்லது கூகுளில் தேடினால் ஈராக் நாட்டின் உச்சியில் அழகிய பெண்ணின் முகத்திலிருக்கும் பருக்களைப்போல ஆங்காங்கே காணப்படும் தன்னாட்சி பகுதியே குர்திஸ்தான். கவனிக்க-தன்னாட்சி பகுதி என்றால் தனிநாடு என கிடையாது ஒருநாட்டின் அங்கம் என பொருள்படும். சுருங்கச் சொன்னால் கூட்டுக்குடும்பம் ஒன்றில் தனியாக உலைவைக்கும் மருமகளைப் போன்றதாகும். 1970 ஆம் ஆண்டு ஈராக் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் குர்தியமொழி பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பிராந்தியம் இந்த குர்திஸ்தான்.

கிழக்கே ஈரான் மேற்கே துருக்கி மற்றும் லிபியா நாடுகளை எல்லைகளாகக் கொண்ட இந்த பிரதேசம் மிகவும் தொன்மை வாய்ந்தது. சுமார் 70000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மக்களின் எச்சங்களைக் கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் இயுபிரட்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாய நாகரீகம் செழித்தோங்கியது. கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ரோம் பேரரசு, 7- ஆம் நூற்றாண்டில் இசுலாமிய ஆட்சி, பிறகு ஓட்டோமன் பேரரசு, மற்றும் 17 -ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி என குர்திஸ்தான் பலரது கைப்பிடியில் சிக்கி கடைசியாக லிபியா, ஈரான், துருக்கி நாடுகளுடன் எல்லைத் தகராறில் சிதைந்து சின்னாபின்னாமாகி ஒரு வழியாக ஈராக்கிடம் தஞ்சமடைந்தது. இனம், மதம் இவற்றிற்கு அப்பாற்பட்டு தமக்கென உரிமையும் அந்தஸ்தும் அடையாளமும் தனிநாடும் வேண்டுமென குர்தியமக்கள் போராடத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து 1960-1970 மற்றும் 1973 ஆண்டுகளில் நடைபெற்ற ஈராக்குடனான போர்களும் 1980- ஆம் ஆண்டில் சதாம் உசேனின் அன்ஃபால் இனப்படுகொலையும் குர்தியர்களை அகதிகளாக மற்ற நாடுகளுக்கு அலையவிட்டு வேடிக்கை பார்த்தன.

1991 நடந்த கிளர்ச்சியிலும் வளைகுடா போருக்கு பிறகும் சிதறிய குர்திய மக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இருந்தும் சதாம் உசேனின் வீழ்ச்சி ஈராக்கில் அமேரிக்காவின் பொம்மை அரசாங்கம் என குர்தியர்களின் வாழ்வு மீண்டும் கேள்விக்குறியாகவே இருந்தது. பிறகு 2005 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு ஈராக் நாட்டின் ஒரு அங்கமாகவும், நாடாளுமன்றத்தில் தனியே உருப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி பகுதியாகவும் "ஈராக்கிய குர்திஸ்தான்"அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி வரலாற்றை எதிர்நோக்கி, கடந்தகால நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு கொஞ்சம் அமைதியாக இருக்கிறது குர்திஸ்தான். பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக போராடிய முகமது பர்ஸானி மற்றும் அஹமத் பர்ஸானி, ஈராக் அரசுடன் தனிநாடு வேண்டி போராடிய முஸ்தஃபா பர்ஸானி போன்ற தலைவர்களின் கனவும் தற்போது அங்கு வாழும் 5.5 மில்லியன் குர்தியர்களின் கனவும் இன்றுவரை அப்படியே இருக்கிறது. அந்த கனவு தேசத்தின் வரலாற்றையும்  இயற்கை வளத்தையும், பண்பாட்டு கூறுகளையும், அரசியல் நிகழ்வுகளையும் ஆசிரியரின் சிறுவயது நினைவுகளாக சுயசரிதையாக பதிவு செய்கிறது இந்த புத்தகம் "My Father's Riffle" (அப்பாவின் துப்பாக்கி).
  • அப்பாவின் துப்பாக்கி.
  • ஷெரோ செலீம்
  • க.அ.வெங்கட சுப்புராய நாயக்கர்.
  • காலச்சுவடு பதிப்பகம்.
1964 ஆம் ஆண்டு குர்திஸ்தானில் பிறந்தவர் "ஆசாத் ஷெரோ செலீம்". இவரது தந்தையான "ஷெரோ செலிம் மலே" குர்தியர்களின் விடுதலைக்காக போராடிய முஸ்தஃபா பர்ஸானியின் அந்தரங்க செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். வழக்கரிஞர் ஆகவேண்டும் என்ற கனவுடன் வளர்க்கப்பட்ட ஆசாத் ஷெரோ செலீமின் வாழ்க்கை குர்தியர்களின் போராட்டத்துடன் அழைக்கழிக்கப்பட்டது. தமது 17-வது வயதில் ஈராக்கிலிருந்து வெளியேரிய அவர் இத்தாலியில் வாழ்ந்து தற்போது பிரான்ஸில் திரைப்பட இயக்குனராக பணியாற்றுகிறார். அவர் இயக்கிய "வோட்கா லெமன்"எனும் திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் சான் மார்க்கோ விருதை பெற்றது. அவரது தந்தை குர்திஸ்தான் தளபதிகளோடு தொடர்பிலிருந்த காரணத்தால் விடுதலை போராட்டத்தை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு ஆசாத் ஷெரோ செலீமுக்கு கிடைத்தது. அதனை சுயசரிதையாக, இளமைக்கால அனுபவமாக, காதல்,சோகம்,வீரம், சூழ்ச்சி என அத்தனை அம்சங்களை கலந்து மெல்லிய நகச்சுவையோடு விறுவிறுப்புடன் குர்திய மக்களின் விடுதலை வேட்கையையும் சேர்த்து இந்த புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். தவறாமல் வாசியுங்கள்.