☰ உள்ளே....

ரசித்த ஒன்று, எதிர்பார்க்கும் இரண்டு.சமீபத்தில் ரசித்த ஒரு திரைப்படமும் எப்பொழுது வெளிவரும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இரண்டு திரைப்படங்களும் அதனைப்பற்றிய சிறிய அலசலும்.


Skiptrace.


குற்றவாளியைத் தேடி நாடுநாடாக சுற்றித்திரியும் அதே கதை, அதே ஹாங்காங் இன்டர்போல் ஆபிசர் கதாபாத்திரம், அவருக்கு இம்சை கொடுக்க அதே வெள்ளைக்கார ஆபிசர் கதாபாத்திரம், அதே ஊருகாய் கதாநாயகி, அதே வில்லன், அதே துரத்தல், அதே தாவுதல், அதே சமாளிப்பு, அதே நகைச்சுவை, அதே சண்டைக்காட்சிகள், அதே ஆக்சன், அதே "ஜாக்கிசான்". இருந்தும் அவரின் அதே ரசிகர்களான என்னைப் போன்றவர்களுக்கு "Skiptrace" திரைப்படம் விருந்துதான். Deep Blue Sea, Die Hard-2 இயக்குனர் "Renny Harlin" என்பவரின் ஆக்சன் படைப்பு இந்த திரைப்படம். Oven Wilson, Chris Tucher வரிசையில் Men in Black-2 புகழ் "Johnny Knoxville" ஜாக்கியுடன் இதில் இணைந்து கலக்கியிருக்கிறார். இதற்கு பெருமை சேர்ப்பதுபோல் திரைப்படம் வெளிவந்த பிறகு ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதும் கிடைத்தது. 56 வருடகால சினிமா வாழ்க்கை, இரண்டு நூறுகளுக்கு மேற்பட்ட திரைப்படங்கள், உடைந்த எலும்புகள், உடல் முழுவதும் காயங்கள் இவற்றோடு அதை வாங்கிக்கொண்டபோது ஜாக்கியிடமிருந்து வெளிப்பட்ட அதே குழந்தைத்தனமான சிரிப்பு அடடா! இன்னும் இருபது வருடங்கள் அவர் "அதே" பார்முலா கதைகளில் நடித்தால்கூட ரசிக்கத் தோன்றும்.

Moana.


வருடத்திற்கு ஒன்று என அரிதாக வெளிவரும் அனிமேஷன் படங்களின் காலம் ஓடிவிட்டது. தற்போதிருக்கும் தொழில்நுட்பத்தில் குறைந்தது பத்து திரைப்படங்களாவது வந்துவிடுகிறது. இதற்காக பழைய காமிக்ஸ் கதைகளையும் சொந்த கற்பனைகளையும் தூசுத்தட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் விரைவில் வெளிவரவிருக்கும் அனிமேசன் திரைப்படம்தான் மோனா "Moana". இந்தோனேஷியாவிற்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் பரந்து கிடக்கும் குட்டி குட்டி தீவுகளின் கூட்டம் "பாலினேஷியா" (Polynesia) என அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் மக்கள் சர்வசாதாரணமாக சென்றுவந்த இந்த தீவுக்கூட்டங்களுக்கு தற்போது யாரும் பயணிப்பதில்லை. அந்த தீவுகளில் பயணிக்க 16 வயது மோனா விருப்பப்படுகிறாள் அவளுக்கு துணையாக மாயு "Maui" என்ற தடித்த மனிதன் உதவுகிறான் அவர்களின் சாகச பயணமே இந்த திரைப்படம். லிலோ, மூஸன், அலைஸ், மெகாரா, வெண்டி, எஸ்லா போன்ற அனிமேசன் கற்பனை நாயகிகளின் வரிசையில் புதிதாக மோனாவும் இணைந்திருக்கிறாள். The little mermaid, Aladdin, The Princess and the Frog போன்ற திரைப்படங்களை எடுத்த வால்ட்டிஸ்னி குழுவினரின் பிரம்மாண்ட படைப்பு இந்த திரைப்படம். நவம்பர் 23-ல் அமேரிக்காவில் மட்டும் வெளியான இந்த திரைப்படம் அடுத்த மாதம் உலகமெங்கும் வெளிவர இருக்கிறது. என்னைப் போன்ற அனிமேசன் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dangal.


தந்தைதான் முதல் ஆசான் என்று கூறுவார்கள் அவரே முதலும் கடைசியுமாக இருந்து வாழ்க்கையின் வெற்றி விழிம்பிற்கு அழைத்துச் சென்றால் அந்த தந்தை கிடைக்கப் பெற்ற குழந்தைகள் பாக்கியசாலிகளே. அந்த அதிஷ்டம் ஹரியானாவைச் சேர்ந்த "கீதா போகத், பபிதா குமாரி" என்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைத்திருக்கிறது. சாதாரண விவசாயியாக இருந்து மல்யுத்தம் பயின்று இந்தியாவிற்காக பல போட்டிகளில் போராடியவர் "மகாவீர் சிங் போகத்". தன்னால் வெறுத்து ஒதுக்கப்பட்டு விளக்கிய, சாதிக்க முடியாத மல்யுத்தத்தை தன் மகள்கள் மற்றும் உரவுக்காரர் மகளுக்கு கற்றுக்கொடுத்து வென்று காட்டிய ஒரு தந்தை துரோணாச்சாரியாரின் உணர்சிமிகு கதைதான் Dangal. இறுதிச்சுற்று, சுல்தான் வகை திரைப்படம்தான் என்றாலும் படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது. மகாவீர் சிங் போகத் காதாபாத்திரத்தில் தொப்பையும் தொந்தியுடன் வயதான தோற்றத்தில் அமீர்கானும், ஆண்களைப் போல முடியை மழித்துக்கொண்டு தந்தையின் கடுமையான பயிற்சிக்கு உட்படும் அந்த பெண்களும் ரசிக்க வைத்தனர். டிரைலரின் இறுதியில் கட்டுமஸ்தான உடலுடன் தோன்றும் சிறுவயது அமீர்கான் திரைப்படத்தை காணும் ஆவலைத் தூண்டுகிறார். இதனைத் தவிர்த்து மாபெரும் விளையாட்டு வீரர் ஒருவரின் உண்மைக் கதையைக் காண ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.