ஜீன்ஸ் மனது.

ஒவ்வொரு மேன்ஷனிலும்
நாற்பது வயதைத் தாண்டிய 
பேச்சிலர் ஒருவர்
இருக்கத்தான் செய்கிறார்.

பிடி உனது பாவக் கணக்கை 
என நீட்டினார் கடவுள்.
கண்ணை மூடிக்கொண்டு
உண்டியலில் போட்டுவிட்டு
ஓடிவந்துவிட்டேன்.

காலி சரக்கு பாட்டில்கள் 
கொலு வீற்றிருக்கும்
திங்கட்கிழமை மேன்ஷன் வராண்டா
கொள்ளையழகு. 

அது என்னப்பா? 
...
ஓ ... அதுவா?....
...
கை பிடித்து கதை சொல்லி 
உலகை அறிமுகப்படுத்த 
கூட்டிச் செல்லும் 
சிங்க அப்பாக்கள்
கங்காரு அம்மாக்களை விட 
அழகாகத் தெரிகின்றனர்.

இதுவரைக்கும் 
ஒளிந்து 
மறைந்து 
மூடி
ரகசியமாக
வெளிச்சம் படாமல் இருந்ததெல்லாம்
Tik Tok.


யோசிக்கத் திறனற்று 
நீட்டிய ஆப்பிலைக் கடித்த 
ஏவாளுக்கும் ஆதாமுக்கும்
படைப்பிலேயே 
டெக்னிக்கல் குறைபாடு இருந்திருக்கலாம்.


என்ன எழுதலாம் என்பதற்குள்
டிசம்பர் வந்துவிடுகிறது.

- பர்ஷனல் டைரி

எல்லா மாற்றங்களையும் ஏதோ சகித்துக்கொள்ள, 
புளியோதரை பொங்கலுக்கு பதில் 
வெஜ் பிரியாணியும் கேசரியும் என்பதை 
ஜீரணிக்க முடியவில்லை.

Enter Valid User ID....
Passward Incorrect....
Invalid Captcha....
Time Out Retry.. 
Please wait ... 
O O O  
இல்லாமல் ஒரே முயற்சியில் 
IRCTC -யில் டிரைன் டிக்கெட் புக் செய்வது என்பது 
மல்லாக்க படுத்துக்கொண்டே
 பாக்ஜலசந்தியை நீந்தி கடப்பதை விட 
மாபெரும் சாதனையாக இருக்கும். 

அன்னையர் தினம் தொடங்கி 
தந்தையர் தினம், தனயர் தினம், சகோதர தினம், 
மாமன் தினம், மச்சான் தினம், 
மச்சினி தினம், கொழுந்தியா தினம், என இத்தனை தினம் 
உருப்படியாக தெரிந்துகொண்டது 
தினம் தினம் என்ன தினம் என்பதுதான்.

மாதக் கடைசியில் 
மனைவி வைக்கும் ரசம்
விஷமாகத் தெரிந்தாலும்
உருளைக் கிழங்கு பொறியல்
அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது.

நிற்பதுவே
நடப்பதுவே
பறப்பதுவே
மிதப்பதுவே
நீங்களெல்லாம்
வறுப்பதுவே.

நான் எனக்கான உணவை
ஆரோக்கியமாகவும் மிக பக்குவமாகவும்
சமைத்துக் கொள்கிறேன்.
அடுத்தவர்களுக்கு எனும்போதுதான் 
அதில் மேலும் சிலவற்றை 
கலக்க வேண்டியிருக்கிறது.

நாற்பது சதவீதம் தலைக்குமேல் மாறியபோது 
எதுவும் தெரியவில்லை. 
நான்கே நான்கு தாடியில் வந்தபோதுதான் புரிகிறது 
நரை கூடிக் கிழப்பருவமெய்தத் தொடங்கிய காலம். 

கசங்கி அழுக்காகி 
கரைபட்டு வெளுத்து 
நைந்து கிழிந்தாலும்
அப்படியே அணியப்படுகிறது
ஜீன்ஸ் மனது.