☰ உள்ளே....

ஸ்டார்ஸ் சூப்பர் சிங்கர்.


"மச்சான் எங்க இருக்க? ஸ்டார்ஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரெண்டு விஐபி டிக்கெட் இருக்கு ரெடியா இரு" என நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது. போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு கேள்விக்குறியை தூக்கிக்கொண்டு தூங்கி வழிந்த ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுதை எழுப்பி முகம் கழுவி சிங்காரித்து அழைத்துச் சென்றேன். ஆயிரம் நபர்கள் கூடிய அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியிருந்தது தொலைக்காட்சிகளில் பல சீசன்களில் பல எபிசோடுகளில் பாடிய சூப்பர் டூப்பர் சிங்கர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விஐபி டிக்கெட் என்பதால் சற்று தாமதமாக சென்றாலும் மேடைக்கு அருகில் இரண்டாவது வரிசையில் பின்புறத்தை தட்டிவிட்டு கால்நீட்டி அமரும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி பக்தி ரசம் கொஞ்சம் கொட்டி ரஹ்மானின் "ஒரு தெய்வம் தந்த பூவே" மெலடி பாடலுக்கு தாவியது நிகழ்ச்சி. எட்டுவயது சிறுமி ஒருத்தி பாடத் தொடங்கினாள், அவளுக்கு கோரஸ் கொடுக்க மேலும் சிலர் மேடையில் இருந்தனர் நிகழ்ச்சி கலைகட்ட ஆரம்பித்தது. இருக்கையிலிருந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

என் இருக்கையின் முன்னால் அமர்ந்திருந்த சிறுவன் செல்போனில் டெம்பில் ரன் பெண்ணுடன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் அவனது தலையைத் தட்டி அவனது அம்மா "பாரு அந்த பொண்ணு எப்படி பாடுது! நீயும்தான் இருக்கியே" என சலித்துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த டிப்டாப் ஆசாமி தனக்கு கொடுத்த டார்கெட்டைப் பற்றி காரசாரமாக யாரிடமோ போனில் கத்திக்கொண்டிருந்தார். அரங்கத்தின் பின்புறமிருந்து சில டார்ஜன்கள் ஹோ.. வென குரல் எழுப்பினர் அதற்கு நடுவரிசையில் அமர்ந்திருந்த டார்ஜினிகள் பதில் குரல் எழுப்பினர். ஒருபக்கம் இளைஞர்கள் சிலர் அரங்கம் அதிர ஆடிக்கொண்டிருந்தனர், மறுபக்கம் சில இளைஞிகள் அங்கம் குளுங்க ஆடிக்கொண்டிருந்தனர். (நல்ல மெலடி பாடலுக்கு ஏன் குத்தாட்டம் ஆடுகிறார்கள் எனத் தெரியவில்லை). வலதுபக்கமிருந்த ஒலிப்பெருக்கி ஒன்று வி.டிவி கனேஷ் மாதிரி தன் குரலை கரகரத்துக் கொண்டிருந்தது. இடது பக்கதிலிருந்த ஏசியிலிருந்து வந்த மல்லிகை, ரோஜா, சாமந்தி, லாவெண்டர் இதில் எது எனத்தெரியாத வாடை மூக்கை கெடுத்து மூளையையும் குழப்பிக் கொண்டிருந்தது. பற்றாக்குறைக்கு பாடும் அந்த சிறுமி பாடலின் சில சந்தங்களை தவறவிட்டிருந்தாள் அதனை சரிகட்ட கோரஸ்பாடுபவர்கள் உச்சசதியில் முனகினர் அதிலும் ஒருவன் கமான் சென்னை, கமான் கேர்ள்ஸ், கமான் பாய்ஸ், கமான் எவரிபடி என குதிரைப் பந்தையத்தில் பணம் கட்டியவன்போல் குதித்துக் கொண்டிருந்தான். அவர்களுடன் அரங்கத்தில் கிசுகிசுப்பவர்களும்,  குக்கர் மாதிரி விசிலடிப்பவர்களும், ஓ..வென ஊளையிடும் சில ஓநாய்களும் ஒன்றுசேர்ந்து இணைந்து ஒரு நல்ல பாடலை பிய்த்து கொத்துபரோட்டா போட்டுக் கொண்டிருந்தனர்.

லேசாக தலைவலிப்பதுபோல் உணர்ந்தேன். இதுவே டிவியாக இருந்தால் ரிமோட்டை மிதித்து சேனலை மாற்றி கார்ட்டூன் அல்லது டிஸ்கவரி சேனைலை வைத்திருப்பேன் ஆனால் இது நேரடி நிகழ்ச்சி என்பதால் எழுத்து போவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்து நண்பனை திரும்பிப் பார்த்தேன் மார்கழி மகாஉத்சவத்தை ரசிப்பதுபோல தொடையில் தாளத்தைத் தட்டி பாடலை ரசித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை நமக்குதான் ரசனை இல்லையோ? என நினைத்து மெல்ல எழுந்தேன். மச்சான் எங்கடா போர? என தலையைத் திருப்பாமல் நண்பன் கேட்க "இருடா மச்சான் ஒரு தம் அடிச்சிட்டு வரேன்" என அரங்கத்தைவிட்டு ஒருவழியாக வெளியேறினேன்.

அரங்கத்தின் இரைச்சல்கள் சற்று ஓய்ந்திருந்தது சாலையில் ஓடும் வாகனங்களின் சப்தம் கூட இனிமையாக இருப்பதுபோல் தோன்றியது. இங்கு புகைப்பிடிக்காதீர்கள் என்ற விளம்பரத்தை மதித்து அங்கிருந்து விளகி காரை நிறுத்திய வளாகத்திற்கு வந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். இளையராஜாவின் "துள்ளியெழுந்தது காற்று சின்னகுயிலிசை கேட்டு" பாடல் அரங்கத்தின் எதிர்புறத்திலிருந்து புல்லாங்குழல் இசையாக காற்றில் தவழ்ந்து வந்தது. கார்கள் நிறுத்தும் வளாகத்தின் நுழைவாயிலில் முதுகு நிறைய புல்லாங்குழல்களை நிறப்பிக்கொண்டு ஒருவர் கண்களைமூடி வாசித்துக் கொண்டிருந்தார்.

நெரிசல் நிறைந்த மின்சார இரயில், இருள் கவிழ்ந்த சுரங்க நடைபாதை, பேருந்து நிலையம், கடற்கரை என யாசகம் கேட்டு பாடுபவர்கள் சிலரை அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், கையிலிருப்பதை கொடுக்க மனமில்லாமல் இருந்தாலும் அவர்களின் பாடல்கள் உள்ளுக்குள் எதையோ உணர்த்துவதுபோல் தோன்றும். கடவுளே ஆனந்தப்படும்படியான நாதஸ்வர மேளக் கச்சேரியும், செத்தவனே எழுந்து ஆடும் அளவிற்கு கிழிகிழி என கிழித்தெடுக்கப்படும் பறையின் நாதத்தையும் கேட்குபோது நாடி நரம்புகளில் ஏதோ செய்வதுபோல் உணர்ந்த தருணங்களும் உண்டு. களைப்பு தெரியாமல் இருக்க வயல்வெளியில் வேலை செய்பவர்கள் பாடும் பாடலும் வேண்டா விருப்பாக எழுந்துவந்த நள்ளிரவு தெருக்கூத்தும் கிராமத்தின் வீடுவரை ஒலிக்க கேட்டிருக்கிறேன் அந்த ஆனந்தத்தை கொடுத்தது புல்லாங்குழல் விற்பவனின் இசை. 

மனதை இலகுவாக்க கண்ணைக்கவரும் விளக்குகளுடன் மாயாஜாலம் காட்டும் அரங்கு நிறைந்த மேடை நிகழ்ச்சியைவிட இந்த இரண்டு நிமிட புல்லாங்குழல் இசையின் ஆனந்தமே போதும் எனத் தோன்றியது. சிகரெட்டை அனைத்துவிட்டு அவரிடம் நெருங்கிச் சென்று கையைகட்டி மெய்மறந்து கேட்கத் தொடங்கினேன்.  "மச்சான் எங்கடா போய் தொலைஞ்ச? சீக்கிரம் வா இங்க நிகழ்ச்சி செமையா போயிட்டிருக்கு" என நண்பனிடம் இருந்து செல்போன் சினுங்கியது. "இருடா மச்சான் தம்ம முழுசா அடிச்சிட்டு வர்ரேன்" என அதனை தட்டி சுவிட்ச்ஆப் செய்து உள்ளே போட்டுவிட்டு மற்றொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். அந்த புல்லாங்குழல் விற்பவர் "பூவே செம்பூவே உன்வாசம் வரும்" என அடுத்த பாடலுக்கு தாவியிருந்தார்.