காதலின் பெயரால் .





ஆர்ப்பாட்டமில்லாத சாதாரண தயாரிப்பு, அனைவருக்கும் தெரிந்த பாட்டி வடைசுட்ட காலத்து கதை, ஜவுளிக்கடை பொம்மைபோல் ஹீரோ, அதே சைஸில் ஹீரோயின். நாலு தெரு இரண்டு சந்து ஆறு அல்லது புல்வெளி லொக்கேஷன், தாலாட்டும் வயலின் இசை, சலனமில்லாத ஒளிப்பதிவு இவற்றை வைத்துக்கொண்டு உணர்வுபூர்வமான திரைப்படத்தை கொரியன் சினிமாவால் மட்டுமே தரமுடியும். அதிலும் காதல் ஸ்பெஷல் என்றால் அவர்கள் வெளுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரசித்த திரைப்படம் "A Millionaire's First Love". பெரும் மலையையும் சமுத்திரத்தையும் புரட்டிப்போட்டுவிடும் பொல்லாத காதல் 18 வயது பணக்கார இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் நுழைகிறது. அதன் விபரீதங்களை திடீர் மழையும் அதனைத் தொடர்ந்து வரும் வானவில் காட்சியைப் போன்றும், தென்றலின் நடுவே அமர்ந்து ஒரு இனிமையான கவிதையை வாசிப்பதை போன்றும் அழகாக படைத்திருக்கிறார்கள்.



"Nothing is more important than the true love of your Heart"

தங்கத் தட்டில் சாப்பிட்டு வளர்ந்த Jae-Kyung ஸ்போர்ட்ஸ் கார், ரேஸ் பைக், நண்பர்கள், பார்ட்டி, கச்சேரி என தனது 18 வது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வருகிறான். பிறந்தநாள் பரிசாக தாத்தாவிடமிருந்து அவனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. வாழ்க்கையை உணரவும் பணத்தின் அருமையை தெரிந்துகொள்ளவும் 18 வயது தொடங்கியவுடன் தனது பேரன் தற்போது அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கையைத் துறந்து, சாதாரண வசதியற்ற தாம் பிறந்த ஊரில் தங்கி அங்குள்ள பள்ளியில் பயின்று பட்டம் பெறவேண்டும், அவ்வாறு பட்டம் பெற்ற பின்பே தனது மொத்த சொத்துக்களையும் அனுபவிக்க முடியும், தவறும் பட்சத்தில் அனைத்து சொத்துக்களும் கைவிடும் நிலைக்கு தள்ளப்படும் என்ற உயிலே மறைந்த அவனது தாத்தா பிறந்த நாள் பரிசாக அவனுக்கு கொடுத்திருந்தார்.


தாத்தாவின் கட்டளைபடி Jae-Kyung சியோலில் உள்ள Gangwon என்ற ஊருக்குச் செல்கிறான். உயிலின்படி வசதிவாய்ப்புகளோடு வாழ்ந்த அவனது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. தாத்தா குறிப்பிட்ட பள்ளியில் சேரும் அவன் அங்கிருப்பவர்களுடன் வாழ பழகுகிறான். படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமப்படும் அவனுக்கு "Choi Eun-Hwan" என்பவளின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த ஊரில் வாழவும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொள்ளவும் அவள் பெரிதும் உதவுகிறாள். முட்டலும் மோதலுமாக தொடங்கும் அவர்களது உறவு நல்ல நட்பாக மாறுகிறது நாட்கள் நகருகிறது. மேலும் சில நல்ல நண்பர்களையும் எளிமையான வாழ்க்கையையும் அதைவிட Eun-Hwan -ன் உன்னதமான அன்பையும் அவன் பெறுகிறான். Eun-Hwan-க்கு எளிதில் இறந்து விடக்கூடிய முனைய நோய் (Terminal Disease) இருப்பதாக Jay-Kyung தெரிந்து கொள்கிறான் அதனை குணப்படுத்தும் அத்தனை வழிகளிலும் அவன் தோற்றுப் போகிறான். கைவிடப்பட்ட நிலையில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவளது சந்தோஷங்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கிறான்.


 

ஒருநாள் பள்ளியில் கலைவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது அதில் Jae-Kyung - ன் சிறுவயது அனுபவங்கள் நாடகமாக நடித்துக் காட்டப்படுகிறது. அதனைப் பார்க்கும் அவன் தன் கடந்த காலத்தை மீட்டெடுக்கிறான். சிறுவயதில் சுற்றித்திரிந்த அந்த ஊரையும், விபத்தில் இறந்துபோன தன் தாய் தந்தையரையும், சிறுவயது தோழியான Eun-Hwan -னையும், அவளுக்கு பத்துநாட்களில் நகரத்திற்கு சென்று திரும்பி வருகிறேன் என கொடுத்த வாக்குறுதியையும், வழியில் நடந்த விபத்தையும், விபத்தில் தான் இழந்த நினைவுகளையும் மனதிற்குள் ஓட்டிப்பார்க்கிறான். தன்னிடம் தற்போது பழகும் Eun-Hwan தனது சிறுவயது உயிர்த் தோழி என தெரிந்துகொண்டு அவளைத்தேடி ஓடுகிறான். தனிமையில் நிற்கும் அவளிடம் சென்று தான் தொலைத்த பழைய நினைவுகளுக்காக மன்னிப்புக்கேட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறான். மழைத்தூரல் விழுகிறது. இந்த மழையையும் அதன் ஸ்பரிசத்தையும் தன் கடந்தகால நினைவுகளையும் தூய அன்பையும் தவறவிட்டேன் என அவளை முத்தமிடுகிறான். பள்ளியின் கலை நிகழ்ச்சி தொடர்கிறது. 

பள்ளியின் இறுதிநாட்கள் நெருங்குகிறது நண்பர்கள் அனைவரும் இயற்கையை ரசிக்க ஒரு இடத்தை தேர்வுசெய்து அங்கு புறப்பட தயாராகின்றனர். Eun-Hwan அந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவை ரசிக்க ஆசைப்படுகிறாள். பனிவிழும் இரவு தொடங்குகிறது Eun-Hwan மற்றும் Jae-Kyung இருவரும் பூங்காவில் தனிமையில் அமர்ந்திருக்கின்றனர். Jae-Kyung தான் முன்னரே வாங்கிவந்த கையுரைகளை அவளுக்கு பரிசாகக் கொடுக்கிறான். Eun-Hwan முதன் முதலாக தன் காதலை அவனிடம் தெரிவிக்கிறாள். சற்றுநேர அமைதிக்குப்பின் பனிப்பொழிவு வரும்போது தன்னை எழுப்பிவிடுமாறு கூறி அவனது தோளில் கண்மூடி சாய்கிறாள்.

பள்ளியின் நிறைவு விழா நடைபெறுகிறது ஒவ்வொருவராக பட்டம் பெறுகின்றனர். Eun-Hwan-ன்  இருக்கையில் அவளுக்கு பதிலாக மலர்கொத்து மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.  Jae Kyung தன்பங்கிற்கு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அந்த பூங்கொத்துடன் வெளியில் வருகிறான். அவனுக்காக காத்திருக்கும் வக்கீல் உயில்படி அவனது தாத்தாவின் மொத்த சொத்துக்களையும் ஒப்படைக்கிறார். நாட்கள் நகருகின்றன. Jae-Kyung சொந்த ஊரில் அழகிய வேலைப்பாடுகளுடன் சன்னல்கள் நிறைந்த ஒரு வீட்டை கட்டுகிறான் 50 வது பனிப்பொழிவு தொடங்குகிறது, Jae Kyung தனிமையில் காத்திருக்கிறான் Eun-Hwan அங்கு வருகிறாள் இருவரும் சந்திக்கின்றனர் திரை மெல்ல இருள்கிறது.
Trailer.

இடுக்கிய கண்களுக்குள் வெளிப்படும் முகபாவனை, எளிமையான காட்சிகள், இசை, ஒளிப்பதிவு என நம்மை மொத்தமாக கட்டிப்போடுகிறது இந்த திரைப்படம்.

It's weird town. A ten dollar bill can make everybody so happy - (Eun-Hwan)

I am so happy. I am so happy - that i think I'm go to hell - (Eun-Hwan)

I'll end up hurting him knowing that, I miss him. I wanna hold his hand - (Jae-Kyung)

Now I belive that phrase that you can see with eyes closed - (Jae-Kyung)

-போன்ற குட்டி குட்டி வசனங்களை மட்டுமே கொண்டு அமைதியாக நம்மை கலங்கடித்துவிடுகிறது திரைக்கதை. Eun-Hwan இறந்ததை ஒரு பூங்கொத்தை வைத்தும், மீண்டும் அவர்கள் சந்திப்பதை பனித்துளிகளை வைத்தும் கனவுபோல் காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது. "Imaging doesn't cost anything" என்பதற்கேற்ப திரைப்படம் முடியும்போது அந்த 19 வயது பணக்கார இளைஞனுக்குள் நுழைந்த அந்த காதலும் அதன் நினைவுளும் நம்மையும் புரட்டிப்போடுகிறது. "Nothing is more important than the true love of your Heart" என்பதை உண்மையாக்குகிறது இந்த திரைப்படம். தவறாமல் ஒருமுறை தரிசியுங்கள்.

A Millionaire's First Love.

  • Directed by - Kim Tae Kyum.
  • Written by - Kim Eun Sook.
  • Music - Kim Tae Seong.
  • Cinematography - Choi Chan Min.
  • Country - South Korea.
  • Language - Korean.