☰ உள்ளே....

Les Chevaux De Dieu (Horses of God)- கடவுளின் பெயரால் ...
கோவையை சேர்ந்த அந்த இளைஞனுக்கு 21 வயதிருக்கும் கட்டுடலாலும் கண்பார்வையாலும் கண்ணியர்களை விழவைக்கும் அழகான தோற்றம் அவனுக்கு இருந்தது. பிரபல கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த அவன், கிரிக்கெட் சினிமா, பேஸ்புக், வாட்ஸ்அப், சாட்டிங், டேட்டிங் என அனைவரையும்போல வயதிற்கே உரிய துடிப்புடன் பட்டாம்பூச்சிக் கனவுகளோடு பறந்து கொண்டிருந்தான். சித்தார்த்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைக்கப்பெற்று புத்தனாக மாறியது போல் திடீரென அவனது போக்கு மாறியது. அதனை கவணிக்காத அவனது குடும்பத்தினருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், நண்பர்களுக்கும் அவனைப் பற்றிய அந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்து. கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி கைது என்ற பரபரப்புச் செய்தி வெளிவந்தபோது அந்த இளைஞனும் விசாரணை வளையத்திற்குள் வந்தான் பிறகுதான் உண்மை விளங்கியது. அவன் உட்பட சட்டம், மருத்துவம், பொறியியல் படிக்கும் மொத்தம் 12 இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைவரும் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்போடு ஆரம்பக்கட்ட தொடர்பிலிருந்தது தெரியவந்தது. அன்மையில் நமக்கு அருகில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது.

இன்று உலகமெங்கும் நிகழும் எல்லைதாண்டிய பயங்கரவாத தாக்குதல், மனித வெடிகுண்டு, போன்ற தீவிரவாத செயல்களுக்கு ஆட்களை உருவாக்கும் இயக்கங்கள் பலவற்றின் இலக்கு வண்ணக் கனவுகளோடு சுற்றித்திரியும் இத்தகைய இளைஞர்களே. அவ்வாரான இளைஞர்களின் மனதை மாற்றி உயிரையும் பொருட்படுத்தாது பெரும் செயல்களைச் செய்ய பயிற்சியளித்து அவர்களை அடிபணியவைக்க அந்த இயக்கங்கள் கையாளும் மாபெரும் தந்திரம் "மூலைச்சலவை" (Brainwash).

தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவன் எப்படி மூலைச்சலவை செய்யப்படுகிறான்? அவனை இயக்கங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள்? வறுமை, போதை, பணம், அரசியல், மதம், கடவுள் மற்றும் இந்த சமுதாயம் அந்த மூலைச்சலவையோடு எத்தகைய தொடர்புடையது? என்பதனை ஒரு உண்மைச் சம்பவத்தின் முன்னணியாக விளக்கும் மொராக்கோ நாட்டு திரைப்படம்தான் "Les Chevaux De Dieu" (Horses of God). 

1994 ஆம் வருடம்.

மொராக்கோ நாட்டின் "Casablanca" நகரத்திற்கு சற்று ஓரத்திலிருக்கும் "Sidi Moumen" என்ற சேரிப்பகுதிகள் நிறைந்த ஊரில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கை நோக்கிவரும் பந்தை தடுக்க யாசின் காத்திருக்கிறான் தனது சக ஆட்டக்காரர்களுக்கு அறிவுகளை வழங்கிக்கொண்டு தூக்கி அடிக்கப்பட்ட பந்தை சாமர்த்தியமாக அவன் தடுத்து நிறுத்துகிறான். ஆட்டத்தில் சிறிது குழப்பம் நேறுகிறது, யாசினின் நண்பனான நஃபில் என்பவனை எதிரணியில் ஒருவன் தள்ளிவிட, அவன் ஓடிச்சென்று சண்டையிடுகிறான். அந்த நேரத்தில் கையில் சங்கிலியுடன் வரும் யாசினின் அண்ணன் ஹமீத் அனைவரையும் மிரட்டுகிறான் சண்டை வலுக்கிறது பிறகு அவர்கள் ஆட்டத்தை கலைத்துவிட்டு அங்கிருந்து ஓடிச்சென்று அருகிலிருக்கும் மற்றொரு சேரிப்பகுதிக்குள் நுழைகின்றனர்.

யாசின் மற்றும் அவனது நண்பன் நஃபில் இருவரும் குப்பைகளைப் பொறுக்கி அதில் கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்கின்றனர், மூர்க்கத்தனமாக வளரும் ஹமீத் சிறு சிறு போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டு சம்பாதிக்கிறான். ஒருநாள் யாசின், நஃபில், ஹமீத் மூவரும் காலில் என்பவனின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர் அவர்களுடன் பஃவுத் என்பவனும் சேர்ந்து கொள்கிறான். சிறுவர்களான அவர்கள் திருமண கொண்டாட்டத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் மதுபாட்டில் ஒன்றை எடுத்துவந்து குடிக்கின்றனர் மேலும் மரிஜ்வானாவை (கஞ்சா) புகைத்து ஆட்டம் போடுகின்றனர். ஹமீத் போதையின் மிகுதியில் நஃபிலை யாசினின் கண்முன்னே வண்புணர்ச்சி செய்கிறான் அதனை தடுக்காது வேடிக்கை மட்டும் பார்க்கும் யாசின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். நாட்கள் நகர்கின்றது.

1999- ஆம் வருடம்.

மொராக்கோ நாட்டின் அரசர் என மதிக்கப்படும் Hassan II இறக்கிறார், நாடே சோகத்தில் மூழ்குகிறது. சிறியவர்களாக இருந்த யாசின், நஃபில், ஹமீத் மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும் வளர்ந்து இளமைப்பருவத்தை அடைகின்றனர். யாசின் அருகில் இருக்கும் சந்தையில் பழங்களை விற்கும் தொழில் செய்கிறான். தான் சிறுவயதிலிருந்து பழகிய ஃபவுத்தித் தங்கையான கீஸ்லைன் என்பவளை காதலிக்கத் தொடங்குகிறான். கட்டுப்பாடுகள் நிறைந்திருந்தும் அவளை பார்ப்பதையும் மனதால் நினைத்து உருகுவதையும் அவன் மகிழ்ச்சியாகக் கருதுகிறான். அதவிட அதிகமாக கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் கனவு அவனுக்கு இருக்கிறது அதற்காக தினமும் பயிற்சி செய்கிறான். நஃபில் - ஃப மூஸா என்பவரின் மெக்கானிக் கடையில் வேலை செய்கிறான், யாசினும் அவனும் நெருங்கிய நண்பர்களாகவே சுற்றுகின்றனர், சொந்தமாக ஒரு மெக்கானிக்கடை வைத்து புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கும் நீண்டநாள் அசை அவனுக்கு இருக்கிறது. ஹமீத் தற்போது போதைத் தொழிலில் கொடிகட்டி பறக்கிறான் பெரிய இடத்து பழக்கங்களும் வேண்டாத வேலைகளும் சண்டைகளும் அவனைத் தேடி தினமும் வருகிறது. வேலைநேரம் போக இவர்கள் அனைவரும் அரட்டையடித்துக் கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், மரிஜ்வானா புகைத்துக்கொண்டும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பொழுதுகளை கழிக்கின்றனர்.

2001-ஆம் வருடம்.

அமேரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்படுவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.போதைப் பொருட்கள் கடத்தும் ஹமீத் உள்ளூர் காவல்நிலையத்தில் ஒருநாள் கலவரம் ஏற்படுத்துகிறான், காவலர்கள் கடத்தல் பிரிவில் அவனை கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர்.

2002 -ஆம் வருடம்.

யாசின் பழங்கள் விற்கும் சந்தையில் அவனுக்குப் போட்டியாக ஒருசிலர் புதிதாக நுழைகிறார்கள் அதனால் அவன் செய்துவந்த வேலையை கைவிடும்படியாகிறது. யாசின் தன் காதலை கீஸ்லைனிடம் வெளிப்படுத்த நினைத்து பலமுறை தோற்றுப் போகிறான் இதற்கிடையில் சிறையிலிருந்து ஹமீத் திருந்தி புதிய மனிதனாக வெளிவருகிறான். தன் அண்ணனிடம் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்து யாசின் மகிழ்சியடைகிறான். நஃபில் வழக்கம்போல் மெக்கானிக்காக வேலைசெய்கிறான் ஒருநாள் இரவு யாசினின் முன்நிலையில் அவனது முதலாளி ஃப மூஸா - நஃபிலிடம் குடிபோதையில் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் அதனைத் தடுக்க நினைக்கும் யாசின் அவரை தாக்குகிறான் இரத்தவெள்ளத்தில் ஃப மூஸா கீழே விழுகிறார். நஃபில் ஓடிச் சென்று ஹமீதை கூட்டிவருகிறான் ஹமீத் மற்றும் அவனது புதிய நண்பர்கள் இணைந்து நடந்த கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்கின்றனர்.

யாசின் தான் செய்த கொலையை எண்ணி தவிக்கிறான், அவனது மனதை மாற்ற ஹமீத் அவனை அபு சாஃபிர் என்பவரிடம் கூட்டிச்செல்கிறான். அபு சாஃபிர் ஊரிலிருக்கும் இளைஞர்கள் சிலறுக்கு தற்காப்புக் கலையையும் கிடைக்கும் நேரத்தில் ரகசியமாக மத போதனைகளையும் கற்றுத்தருகிறார். அவரது பேச்சில் மயங்கும் யாசினும் நஃபிலும் அவரிடம் பழகுவதை வாடிக்கையாக்குகின்றனர் யாசின் நஃபில் ஹமீதை தொடர்ந்து மற்ற நண்பர்களும் இவர்களுடன் இணைகின்றனர். தற்காப்புக்கலை மத போதனை என நாட்கள் நகர்கிறது.

2003 ஆம் வருடம்.

யாசின் தான் காதலித்த பெண்ணான கீஸ்லைன் உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தெரிந்து கொள்கிறான். மனதை தேற்றிக்கொண்டு மத போதனையிலும் அதனை பறப்பும் முயற்சியிலும் முழுவதும் ஈடுபடுகிறான், யாசினின் மனநிலையை அறிந்து அவனுக்கு சிறப்பான போதனைகள் அளிக்கப்படுகிறது. வறுமை நிரைந்திருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த அந்த சேரிப்பகுதிக்குள் மதம் இந்த இளைஞர்கள் மூலம் ரகசியமாக வளர்ந்து தன் கிளைகளைப் பரப்புகிறது. 

யாசின், நஃபில், ஹமீத் மற்றும் பஃவுத் அனைவரும் முழுவதுமாக மதம் மாறுகின்றனர். கடவுளின் மனதை குளிர்விக்க குறிப்பிட்ட ஒரு நாளில் செய்யப்போகும் சேவைக்காக நால்வரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அவர்களைப் போலவே மொத்தம் 14 இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரும் கடவுளின் சேவைக்காக பயிற்சியளிக்கப்பட்டு காத்திருக்கின்றனர் குறிப்பிட்ட அந்த நாளும் நெருங்குகிறது.
யாசின் நஃபி ஹமீத் நால்வரும் வெளிஉலகை காண அனுப்பப்படுகின்றனர். காடு மலைகள் ஆறுகள் என இயற்கையை ரசித்து அவர்கள் தங்களை மறந்து விளையாடி மகிழ்கின்றனர் திரும்பிவரும் யாசினும் ஹமீதும் தனது அம்மாவிடம் நகரத்து வேலைக்கு செல்வதாக ஆசிபெற்று விடைபெறுகின்றனர். தொலைக்காட்சியில் ஒசாமா பின்லேடன் பேசுவது காண்பிக்கப்படுகிறது. யாசின் உட்பட 14 பேருக்கும் பெரும் தலைகள் சிலரால் வேதம் ஓதப்படுகிறது. அனைவரும் முடிகளை வெட்டிக்கொண்டு, முகத்தை மழித்து உடலை சுத்தம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஆடம்பர உடை அணிவிக்கப்பட்டு அதனுடன் கட்டப்பட்டுள்ள வெடிபொருட்களை வெடிக்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அனைவரும் கடவுளை பிராத்தனை செய்துவிட்டு அங்கிருந்து புறப்படுகின்றனர்.

யாசின், நஃபில், ஹமீத் நால்வரும் Casablanca நகரத்தை அடைந்து பகல்முழுவதும் அங்கு சுற்றித்திரிகின்றனர். இரவு தொடங்குகிறது, நகரம் கேளிக்கையில் மிதக்கிறது நால்வரும் இத்தாலியன் விடுதி ஒன்றின் முன்பு சந்திக்கின்றனர். ஹமீத் செய்யவந்த செயலுக்காக தயங்குகிறான் யாசின் அவனுடன் வாக்குவாதம் செய்கின்றான் இவற்களுக்குள் ஏற்படும் கலவரத்தில் பஃவுத் பயந்து அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். யாசினும் நஃபிலும் விடுதியின் பாதுகாவலனை கொண்றுவிட்டு விடுதியின் உள்ளே நுழைகின்றனர் அவர்களைப் பின்தொடர்ந்து ஹமீதும் வேண்டாவிருப்பாக நுழைகிறான். செல்வச் செழிப்பானவர்கள் கூடும் அந்த விடுதியின் மையப்பகுதியில் பலர் மது அருந்திக்கொண்டு பாடலையும் நடனத்தையும் ரசித்தபடி இருக்கின்றனர், யாசினும் நஃபிலும் அவர்களுக்கிடையே செல்கிறார்கள் ஹமீத் மட்டும் தயங்கி நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்கிறான், யாசினும் நஃபிலும் கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு கையிலிருக்கும் ரிமோட்டை அழுத்துகிறார்கள் ஹமீதின் பார்வையில் திரை மறைந்து மீண்டும் தொடங்குகிறது.


சிறுவர்கள் நிலவு வெளிச்சத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் தெரியும் நகரத்திலிருந்து வெடிச்சத்தம் கேட்கிறது அனைவரும் விளையாட்டை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர், நகரத்தின் நடுவிலிருக்கும் கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எறிகிறது.சிறுவர்கள் மீண்டும் விளையாட்டை தொடர்கின்றனர் உதைபடும் கால்பந்து பள்ளத்தை நோக்கி உருள்கிறது.

May 16 2003 Casablanca bombings.
47 deaths, 14 Bombers and 33 peoples.

என்ற எழுத்துக்களோடு திரை முழுவதும் இருள்கிறது."Mahi Binebine"என்பவரின் "The Stars of Sidi Moumen" என்ற நாவலைத் தழுவி இந்த திரைப்படத்தை இயக்கியவர் "Nabil Ayouch". இளம் இரத்தம் எப்பொழுதும் கொதித்துக் கொண்டிருக்கும் அதனை சமுதாயம் என்ற சட்டியில் கொட்டி, வறுமை போதை பணம் அரசியல் மதம் இவற்றை கலந்து கடவுளின் கரண்டியால் கலக்கினால் தமக்கு தகுந்தார்போல் ருசியாக சமைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தை விளக்கும் இந்த உண்மைக்கதை பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. தவறாமல் ஒருமுறை தரிசியுங்கள்.

Les Chevaux De Dieu (Horses of God).

  • Directed by - Nabil Ayouch.
  • Written by - Jamal Belmahi.
  • Music - Malvina Meinier.
  • Cinematography - Hichame Keyeux.
  • Country - Morocco, Belgium.
  • Language - Moroccan Arabic.