☰ உள்ளே....

இரயில் பயணங்களில்.தொலைதூர இரயில் பயணம் கொடுமை, அதிலும் சோமபானம் சீட்டுக்கட்டு அரட்டை கச்சேரி இவைகள் பழகாத பயணம் மிகக் கொடுமையானது. இரண்டு மூன்று நாட்கள் அரைக்கால் டவுசரோடு, நனைந்தும் நனையாமலும் குளித்து, வழியில் கிடைப்பதை வாரிப்போட்டு நிறம்பாத வயிற்றோடு, குட்டிப்போட்ட பூனை போல் டிடியாரைவிட அதிகமாக கம்பார்ட்மெண்ட் முழுவதும் அலைந்து, மூத்திரவாடை கக்கூஸில் திருட்டுத்தனமாக சிகரெட் பிடித்து, எண்ணங்களையும் நினைவுகளையும் தண்டவாளங்களில் ஓடவிட்டு, பகலில் மரமும், இரவில் நட்சத்திரமும் நகருவதை பார்த்துக்கொண்டே பயணிப்பதை நினைத்தால் பயணத்திற்கு தயாராகும் முன்பே மனதில் மெல்லிய சலிப்பு தோன்றிவிடும். தொலைதூர இரயில் பயணங்களில் பொழுதுபோக்க உதவும் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்கள் உயிர் இருக்கும் (சார்ஜ்) வரை சிறிது நேரம் மட்டுமே உடனிருக்கும். புத்தகங்களை பொருத்தவரை அடியேனுக்கு ஆயிரம் பக்கம் கொண்ட இரண்டு மூன்று புத்தகம் தேவைப்படும் அதனையும் தூக்கிச் சுமக்கவேண்டும். இதனை தவிர்த்து ஒவ்வொரு பயணங்களின்போதும் மறக்காமல் கைவசம் எடுத்துச் செல்லும் பொருள் FM ரேடியோ.

இந்தபக்கம் ஆந்திராவையும் அந்தபக்கம் மகாராஷ்டிராவையும் தாண்டினால் விதவிதமான பன்பலையில் விதவிதமான பாடல்களை கேட்கலாம். அவ்வாறான பயணத்தில் கேட்டுரசிக்கும் பாடல்களை எனது டைரியில் குறித்துக்கொள்வேன் பிறகு சாவகாசமாக இணையத்தில் அதற்கான ஜாதகங்களைத் தேடி சேமித்துக்கொள்வேன். உலகிலேயே விசித்திரமான நாடு இந்தியா. பலதரப்பட்ட மதம், பிரிவு மனிதர்கள், பண்பாடு, பாரம்பரியம் கலாச்சாரம், உடலமைப்பு, மொழி என ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொன்றாக மாறுபடும் அமைப்பைக் கொண்டது. இசையை பொருத்தவரை அதற்கு எந்த வரையறையும் கிடையாது என நினைக்கிறேன். ஒரு பாடல் காற்றில் தவழ்ந்து உள்ளுக்குள் நுழைந்து ஏதாவது ஒரு நினைவால் ஆனந்தத்தால் மனதை நிரப்பினால் போதும் என்பது அடியேனின் கருத்து. அந்த வகையில் இரயில்பயணங்களில் சேமித்த பலதரப்பட்ட பாடல்களில் சில தங்களின் ரசனைக்காகவும்.

Endukante- Premanta Nee Choopule.

Ghum Hoye

Sapnaao Sacha Thashe

Rakgi Soneeya Ve

Eka..Eka..