☰ உள்ளே....

அகம் புறம் அந்தப்புரம்.அழகுத் தமிழ், ஆர்ப்பரிக்கும் ஆங்கிலம், அதிரிபுதிரி கணக்கு, அலட்டிக்கொள்ளாத அறிவியல் இவற்றைத்தாண்டி மதிய உணவு முடிந்து எப்படா வீட்டிற்குப் போகலாம் என நினைக்கும் வேலையில்தான்  வரலாறு வகுப்புகள் தொடங்கும், பள்ளிக்கூடத்தில் இருப்பதிலேயே பரமசாது வாத்தியார் வந்து கவணி என பாடத்தை ஆரம்பிப்பார். அவர் தொடங்கிய அடுத்த பத்தாவது நிமிடம் வரலாறு தூங்கிவிடும். வரலாற்று புத்தகங்களை தனியே படிக்கும்போதும் அப்படித்தான் நிகழும் பத்து பக்கங்களைத் தாண்டினால் ...ஆ..ஆ..ஆவ்..வ்.

பள்ளிக்கூடப் பாடம், போட்டித்தேர்வு, ஆராய்ட்சிகள் இவற்றைத் தவிர்த்து சொல்லும் விதத்தில் எளிமையாகச் சொன்னால் வரலாற்றை விட சுவாரசியமான வேறுவிசயம் எதுவும் இருக்காது. அப்படி எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று புத்தகங்கள் தமிழில் மிகமிகக் குறைவு அதில் கொஞ்சம் கணத்து (1030 பக்கங்கள்) முன்னிலையில் இருக்கிறது இந்த புத்தகம் முகிலின் "அகம் புறம் அந்தப்புரம்".

இந்த புத்தகம் 1800 முதல் 1950 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 536 இந்திய சமஸ்தானங்கள் சிலவற்றின் வரலாற்றை விவரிக்கிறது. சமஸ்தானம் என்றால் அதற்கு இராஜா இருப்பார், ராணி இருப்பாள், மந்திரி தந்திரி இருப்பார்கள், சினிமாவில் வருவதுபோல் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு (பக்கத்தில் சாமரம் வீசும் அழகு பெண்கள் உட்பட) நாட்டு நடப்புகளை பேசுவார்கள் சுவாரசியமாக இருக்கும். மேலும், மரம் நட்டார், குளம் வெட்டினார், அணைகள் கட்டினார், போர் புரிந்தார், எதிரிகளை வீழ்த்தினார் என அந்த இராஜாவின் புஜபலபராக்கிரம செயல்கள் நிரம்பியிருக்கும் என நினைத்து இந்த புத்தகத்தை திறந்தால் அது சமஸ்தான அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைகிறது. சூது, மது, மாது இவற்றோடு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், வேட்டை, தூக்கம் போர் அடித்தால் எப்போதாவது அரசாங்க வேலை பார்த்த இராஜாக்களின் அஜால் குஜால் வாழ்க்கை வரலாற்றை துவைத்தெடுக்கிறது.


மற்ற நாடுகளைப் பொருத்தவரை இந்தியா இயற்கை வளம் நிறைந்த நாடு. மாதம் மும்மாரி மழைபொழிந்து விவசாயம் செழித்து மக்கள் இயற்கையோடு அமைதியாக வாழும் வாழ்வு இங்கு எப்போதும் நிலவும். கூட குறைச்சல் இருந்தும் வழியில் கழுகுகள் பாதி பிடுங்கி தின்றது போக வரிப்பணம் ஓரளவிற்கு அரண்மனை கஜானாவில் நிரம்பியே வழியும். எல்லாம் சுபமாக நடக்க, மேலே குறிப்பிட்ட அஜால் குஜால் வாழ்க்கையை தவிர்த்து இராஜாவுக்கு வேறு என்ன வேலை இருக்கக்கூடும். அதனால் வகைவகையான மது, தினமும் இரவிற்கு புதிய பெண்கள், கச்சேரி கலைகட்ட சிட்டுக்குருவி லேகியம் முதல் கட்டெறும்பு இரத்தம் வரை தேடித்தேடி சுகபோகமாக அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த இராஜ வாழ்க்கையே பொரிகடலை வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனைக்கொண்டு உள்ளூர் சரக்கிற்கு பதிலாக வெளிநாட்டு சரக்கு, பற்றாக்குறைக்கு வெள்ளைத்தோல் அழகிகள் என ஆங்கிலேயர்கள் ஆசைகாட்டி ஒவ்வொரு சமஸ்தானத்தையும் ஆட்டிப்படைத்தனர். விளைவு இந்தியா மூன்று நூற்றாண்டுகள் அடிமையாக இருக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அந்தப்புரத்தில் அடகு வைத்த அந்த வரலாற்றை புட்டுபுட்டு வைக்கிறது இந்த புத்தகம்.

இதனைத் தவிர்த்து, வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? _ _ _ _ _ _ _ உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி? யாரைக் கேட்கிறாய் வரி? மாமனா? மச்சானா? என வெள்ளைக்காரர்களை எதிர்த்த இராஜாக்களின் வரலாறும், எம்.ஜி.ஆர் மாதிரி மச்சம் வைத்து தாடி ஒட்டி மாறுவேடம் போட்டுக்கொண்டு நாட்டுமக்கள் நலமா இருக்கிறார்களா? மழை பொழிகிறதா? குற்றம் குறைகள் இருக்கிறதா? என தெரிந்துக்கொண்டு பிறகு அக்கடா என நிம்மதியாகத் தூங்கிய விரல்விட்டு எண்ணக்கூடிய சமத்து இராஜாக்களின் வரலாறும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் இடையே இருந்த உறவு, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், நடைமுறைகள் மற்றும் நாட்டுமக்களின் வாழ்க்கைமுறை அவர்கள் எவ்வாறு இராஜாக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அடிபணிந்து நடந்தார்கள் என்ற வரலாற்றையும் அழகாக கதைபோல சாமாணியர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் மிக எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம். ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 20% அகம், 20% புறம், 60% அந்தப்புற வரலாறு இந்த புத்தகம்.

எழுத்தாளர்கள் மதன், ப.ராகவன் இவர்களின் வரிசையில் வரலாற்றையும் வரலாற்றின் நாயகர்களைப் பற்றியும் அழகாக எழுதத்கூடியவர் "முகில்" அவரது படைப்பில் சாதனையாக அமைகிறது இந்த அகம் புறம் அந்தப்புரம். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்த ஆயிரம் பக்கம் கொண்ட கணத்த இந்த புத்தகத்தை தூக்க சிரமப்பட்டாலும் வைக்க மனமில்லை. முழுமூச்சாக படிக்க முடியாவிட்டாலும் பக்கங்களின் நடுவே மயிலிறகை வைத்து அவ்வபோது புறட்டும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்றை தெரிந்துகொள்ள மட்டுமில்லாமல் பொக்கிஷமாக அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கப்படவும் வேண்டிய புத்தகம்.

அகம் புறம் அந்தப்புரம்.
முகில்.
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிக்கேஷன்,
கிழக்கு பதிப்பகம்.
விலை- ₹ 999.