☰ உள்ளே....

கண்ணன் என் காதலன் (பாடல்).பாம்பே ஜெயஸ்ரீயின் கண்ணம்மா இசைத்தொகுப்பிலிருந்த பெரும்பான்மையான பாடல்களை இங்கு காட்சிப்படுத்திவிட்டேன். கண்ணன் பாடல் ஒன்றுமட்டும் மீதமிருந்தது. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்பதற்கேற்ப அதையும் முடித்துவிடலாம் எனத் தோன்றியது. பாரதியாரின் வரிகளில் கண்ணன் மீது கொண்ட காதலை சிருங்காரம், ரௌத்ரம் ரஸங்களில் தங்கமே தங்கம் என்ற ஆனந்தத்தில் தலைவி பாங்கியிடம் (உயிர்த்தோழி) உரைப்பது போன்று அமைந்தது இந்த பாடல்.
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே.

- என்ற இந்த உன்னத வரிகளை பாரதி யாருடைய கூற்றாக  எழுதியிருப்பார்?

நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்!

- என கண்ணனின்மீது தான் கொண்ட தீராகாதலை வெளிப்படுத்தும் அந்த தலைவி யார்?
இராதையா? மீராவா? அல்லது மற்ற கோபியர்களா? என்ற சந்தேகம் அடியேனுக்கு இருந்தது.

இராதாவிற்கு கண்ணன் உடையவன், மற்ற கோபியர்களுக்கு அவன் தீராத விளையாட்டுப் பிள்ளை (பற்றாதகுறைக்கு எக்கச்சக்க கேர்ள்பிரண்ட்டுகள் அவனது பிளாக் லிஸ்டில் உண்டு). இதனையும் தவிர்த்து மீரா ஒருத்தியே கண்ணனை காலமெல்லாம் காதலித்தவள். கடவுளின்மீது வைக்கும் பக்தி சூடம் சாம்பிராணி சந்தனம் இவற்றையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு காதலை செலுத்தியவள். மனதால் மாலையிட்டு கணவனாக பாவித்து இறுதியில் கண்ணனின் காலடியில் சேர்ந்தவள் அவளுக்கே இந்த பாடல் ஏகப்பொருந்தும் என நினைக்கிறேன். புத்தரின் ஓவியங்கள் அல்லது சிலை வடிவங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு அமைதி தோன்றும் அதுபோல் மீராவை பார்க்கும்போது நிறைவேறாத ஒரு காதலின் சோகம் தழுவிக்கொள்ளும். அடியேனின் கைவண்ணத்தில் அந்த மீராவை தலைவியாகக் கொண்டு இசைத்தொகுப்பில் ஒலி வடிவில் ரசித்த இந்த பாடலை இங்கு காட்சிப் படுத்தியிருக்கிறேன்.