மொழி.


முதலில் செய்கை அதற்குப்பின் சப்தம், கொஞ்சும் மழலை என தட்டுத்தடுமாறி ஒரு மொழியை நாம் பேசத் தொடங்குகிறோம். பிறகு விரல்ஜாலத்தில் எழுத ஆரம்பித்து இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து மொழிவாரியாக தனித்தனியே அடையாளப்படுத்திக்கொண்டு பச்சை தமிழன், மஞ்சள் மலையாளி, சிவப்பு தெலுங்கர், கருப்பு கர்நாடகன் என எல்லாவற்றிர்க்கும் சண்டையிட்டுக் கொள்கிறோம். உலகில் மொழிகள் தோன்றிய வரலாறும் இத்தகையதே. ஆதிவாசியாக குகைகளில் வாழ்ந்த மனிதன் தன் உணர்வுகளை வெளிக்காட்ட முதலில் சைகைகளை பயன்படுத்தினான், உணர்ச்சிமிகு நேரத்தில் சப்தங்களை எழுப்பினான், பிறகு அந்த சப்தங்களை மொழியாக மாற்றினான், மொழிக்கு வடிவம் கொடுத்து புதிய இலக்கணங்களைப் படைத்து மொழியை தமக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொண்டான். இன்று உலகமெங்கும் சுமார் 7000 மொழிகள் வழக்கத்தில் இருக்கின்றன அந்த மொழிகள் தோன்றியதையும் அதன் சுவாரசியங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.  


🔔 உணர்வுகளே மொழியின் மொத்த வடிவம். ஆஹா, ஓஹோ, அய்யோ அம்மா, ஹாய், ஹலோ, நீ ரொம்ப அழகா இருக்க, ஐ லவ் யூ, ஐ ஹேட் யூ போன்ற வார்த்தைகளே மொழி தோன்றும்போது உருவான வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். இதுவே இன்று அனைத்து மொழிகளிலும் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளாகவும் இருக்கின்றன.

🔔 இன்று உலகமெங்கும் பேசப்படும் மொழிகள் அனைத்தும் எபிரேய மொழி, கிரேக்க மொழி, இலத்தின், சமஸ்கிருதம், தமிழ், மற்றும் சீன மொழி இவைகளோடு ஏதோ ஒருவிதத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக உலகில் பரவலாக பேசப்படும் ஆங்கில வார்த்தைகளில் இந்த மொழிகளின் கலப்புகள் இருப்பதை உணரலாம். மொழி எங்கிருந்து வந்தது? யார் மொழி சிறந்தது? என ஆராய்ந்து பார்க்க அந்த முதன்மை மொழிகளை பின்தொடர்ந்து சென்றால் மேலே குறிப்பிட்ட ஆதிவாசியின் குகைக்குள் ஆடையில்லாமல் நிற்க நேரிடும்.

🔔 உச்சரிக்க கடினமான வார்த்தைகளுக்கே மனிதன் முதலில் எழுத்து வடிவம் கொடுத்தான். மனிதனின் முதல் எழுத்து மொத்த வார்த்தைகளையும் உள்ளடக்கிய செய்திகளின் குறியீடுகள் அடங்கிய ஓவியமாக இருந்தது. உதாரணமாக நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை பார்த்ததிலிருந்து பசி தூக்கம் நினைவு மறந்தது, இன்று புதிதாய் பிறந்தேன், நீயின்றி என்வாழ்வு நிலவில்லாத வானம், அதனால் உன்னை காதலிக்கிறேன், என் வாழ்க்கையை உன்னிடமிருந்து தொடங்குகிறேன் என்பதை நீட்டிமுழக்கி சொல்ல சிரமப்பட்டு ஒரு இதயம் வரைந்து அதில் அம்புவிட்டு காட்டுவதைப் போன்றே மொழியின் முதல் எழுத்துக்கள் இருந்தது. கி.மு 3500 -ல் ஈரானியர்கள் பயன்படுத்திய எழுத்தும், கி.மு 3000 ஆண்டுகளில் எகிப்தியர்கள் பயன்படுத்திய ஹெய்ரோகிளிப்பிக் (Hieroglyph) எழுத்துமுறையும் இதற்கு ஆதாரமாக திகழ்கிறது.

🔔 கி.மு 1500 - 539 ஆண்டுகளில் லெபனான் நாட்டை மையமாகக் கொண்டு வாழ்ந்துவந்த போனீஷியா (Phoenician) நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே மொழிக்கு முதல் அரிச்சுவடியை உருவாக்கினர். எகிப்து, பிரான்ஸ், இஸ்ரேல், ஸ்பெயின், ஜோர்டான், துருக்கி பேன்ற தற்போதைய நாடுகளை உள்ளடக்கிய அந்த நாகரீக மக்கள் உச்சரிக்க எளிமையான ஒலிகளைக் கொண்டு மொழியின் இலக்கணத்திற்கு அடிப்படையான உயிரெழுத்துக்களை தோற்றுவித்தனர். இன்று சீனாமொழியை தவிர்த்து உலகமொழிகள் அனைத்தும் உயிர்ரெழுத்துக்களை கொண்டிருக்கின்றன. அதிலும் கம்போடியா நாட்டின் கம்போடியன் கெமர் (Combodian Khmar) மொழி அதிகபசமாக 72 எழுத்துக்களை உயிரெழுத்துக்களாக தன்வசம் கொண்டுள்ளது. பப்புவா நியூ கினி தீவின் மொழியான ரோடோகஸ் (Rotokas) மிகக் குறைந்த 12 உயிரெழுத்தை கொண்டுள்ளது.

🔔 மனிதன் தன் குழந்தை பருவத்தில் இரண்டுவயதை நெருங்குகையில் மொழியை கற்றுக்கொள்ளத் தொடங்குகிறான். தன் பெற்றோரின் மொழியே ஒருவரின் தாய்மொழியாக அமைகிறது. ஒரு குழந்தையால் ஆரம்ப பருவத்தில் இரண்டு மொழிகளை சரளமாக கற்க முடியும் அதுவே வளர்ந்த ஒரு மனிதனால் அதிகபட்சமாக 28 மொழிகளை கற்க முடியும். அவ்வாறு கற்கப்படும் மொழியானது மனித மூளையில் Wernicke's Area மற்றும் Broca's Area என்ற இரண்டு பகுதியில் சேமிக்கப்படுகிறது. மூளையின் இந்த இரண்டு பகுதிகளே மொழி என்ற ஒன்றின் மொத்த தகவல்களையும் சேமித்துவைத்து வெளிப்படுத்தும் Internal Memory ஆக செயல்படுகிறது.

🔔 வடக்கு ஸ்பெயின் மற்றும் தெற்கு பிரான்ஸில் வசிக்கும் மக்கள் பேசும் பாஸ்க் (Basque) என்ற மொழியே கற்பதற்கு மிகக் கடினமான மொழியாகும். இதனைத் தொடர்ந்து சீனாவின் மொழியையும் ஒருவர் கற்றுக்கொண்டு எழுதுவது மிகவும் சிரமம். ஓவியங்களில் Brush Stock என்று குறிப்பிடப்படும் 72 வளைவுகள் கொண்ட சீன எழுத்தை கற்றுக்கொண்டு எழுதுவது 8 புள்ளி 16 வரிசை சிக்குக்கோலம் கற்பதை போலாகும். 50000 வடிவங்களை உள்ளடக்கிய சீன எழுத்து ஒருவடிவத்திற்கு இரு பொருள்படும் அமைப்பையும் கொண்டது. அனால் அவர்கள் தற்போது வெறும் 2000 வடிவங்களை மட்டுமே எழுத பயன்படுத்துகின்றனர்.

🔔 சுமார் 6809 மொழிகள் உலகில் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளனர். அதிலும் 700 க்கும் குறைவான மொழிகளையே பேசவும் எழுதவும் முடியும். மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த இடம் என்பதால் என்னவோ ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 1000 மொழிகள் பேசப்படுகிறது. அங்கு 11 முதன்மை மொழிகள் தேசிய மொழியாக இருக்கின்றன. இதனை தவிர்த்து நியூ கினியா என்ற தீவில் வசிப்போர் சுமார் 840 மொழிகளை பேசுகின்றனர். உலகில் அதிகபட்சமாக 900 மில்லியனுக்கு அதிகமான மக்கள் சீனமொழியை பேசுகின்றனர். அதனைத் தொடர்ந்து,

2. ஸ்பானிஷ் - 472 மில்லியன்.
3. ஆங்கிலம் - 339 மில்லியன்.
4. அரேபிய மொழி - 295 மில்லியன்.
5. ஹிந்தி - 260 மில்லியன்.
6. போத்துகீசு மொழி - 215 மில்லியன்.
-என உலகின் மக்கள் தம்மொழிகளை பேசுகின்றனர்.

மொழி என்ற ஒன்று தோன்றியதிலிருந்து மனிதன் தன் நாகரீகம் கலாச்சாரம் பழக்கவழக்கம் இவற்றோடு அதனை தனது வசதிக்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டே வந்திருக்கிறான். அதன்படி இன்று உலகில் பல தொன்மையான மொழிகள் அழிந்துகொண்டே வருகின்றது. 14 நாட்களுக்கு ஒரு மொழி அழிகிறது என சராசரியாக விகிதப்படுத்தியுள்ளனர். அதேபோல் புதிய மொழிகளும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. கஸ்மாலம் கயித பேமானி சோமாரி என அன்றாடம் நாம் காதுகுளிர கேட்கும் வார்த்தைகளும், ஆலுமா டோடுலுமா, லாலாக்கு டோல் டப்பிமா போன்ற திரைப்பட பாடல்களில் இடம்பெறும் உன்னத வார்த்தைகளும் ஒரு புதிய மொழி உருவாக அடிப்படையாகக் கூட இருக்கக்கூடும்.